Thursday, March 03, 2011

தேங்காயும், முட்டையும் பின்னே வீணாய் போன கால் நூற்றாண்டும்

எனக்கு பிடித்த காய் என்னவென்று கேட்டால் தேங்காய் என டக்கென்று என்னிடமிருந்து பதில் வரும். இளநீர், வழுக்கை, முத்திய தேங்காய் போட்ட குழம்பு, தேங்காய் பால் இடியாப்பம், தேங்காய் துறுவலுடன் இடியாப்பம் மற்றும் புட்டு, தேங்காய் மிட்டாய், தேங்காய் குக்கி, தேங்காய் கேக், கொப்பரை தேங்காய் போட்ட மிக்சர், தேங்காய் எண்ணையில் வறுத்த நேந்திரங்கா சிப்ஸ், தேங்காய் எண்ணையில் வறுத்த சிக்கன் சிக்ஸ்டி பைவ், தேங்காய் போளி, தேங்காய் பன் (தில் பசஞ்த்), தேங்காய் மக்ரூன் இப்படி பல திண்பண்டங்கள் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயில் செய்தது எனக்கு உயிர்.


அதே போல் முட்டை. அவித்த முட்டை, முட்டை பால், முட்டை தோசை, முட்டை
குழம்பு, முட்டை குருமா, உடைத்து விட்ட முட்டை குழம்பு, முட்டை ப்ரைட் ரைஸ், முட்டை ப்ரியாணி, முட்டை ப்ளேன் ஆம்லெட், முட்டை மசாலா அம்லெட், முட்டை புல் ஃப்ரை முட்டை ஆப்பாயில் (புல்ஸ் ஐ) முட்டை ஆப்பாயில் பொரட்டி போட்டது (ஓவர் ஈஸி), முட்டை போட்ட ப்ரென்ச் வெண்ணிலா ஐஸ்கிரீம், முட்டை பொடிமாஸ், முட்டை பஜ்ஜி, சப்பாதியில் சுற்றிய முட்டை பொடிமாஸ், முட்டை பரோட்டா இப்படி முட்டையை என்ன ஃபார்மில் கொடுத்தாலும் சாப்பிட்டு கொண்டிருந்தேன்.

இப்படியாக தேங்காயுடனும் முட்டையுடனும் காலம் இனிமையாக கடந்து கொண்டிருந்த போது டாக்டர் செக்கப்பிற்கு போன என் தந்தையார் இருண்ட முகத்துடன் வந்தார். அவருக்கு இரத்தத்தில் கொழுப்பாம், அது பரம்ப்பரை வியாதியாம் அதனால் அவரின் சந்ததியே தேங்காய் முட்டை ஆட்டுக்கறி மற்றும் இதர கொழுப்பு பதார்த்தங்கள் சாப்பாடு கூடாது அதிலும் முட்டையும் தேங்காயும் கூடவே கூடாது என்று சொல்லிவிட்டார். எங்கள் வீட்டில் தலைக்கு தடவகூட தேங்காய் எண்ணைக்கு தடை போட்டுவிட்டார்கள். தேங்காயும் முட்டையும் இல்லா வாழ்கை இருண்டுவிட்டது.

போனல் போகிறதென்று வாரம் இரண்டு முட்டைக்கு மட்டும் டாக்டர் பெர்மிட் தந்துவிட்டார். முட்டை சாப்பிடும் ஞாயிறு காலைக்கு சமீப காலம் வரை தவமிருந்தது உண்டு.

சோ...இவ்வாறாக கால் நூற்றாண்டு கடந்து விட்டது. இப்ப என்னங்கிறீங்க..

சமீபகாலமாக கனடா டிவியிலும் இணையத்திலும் முட்டையை சாப்பிடுங்கள். அதில் நல்ல கொழுப்பு இருக்கிறது, புரதம் இருக்கிறது அது இருக்கிறது இது இருக்கிறது என கூவி கூவி முட்டையை பரிமாறுகிறார்கள் பார்க்க

http://ca.shine.yahoo.com/healthy-living/great-reasons-to-love-eggs-blog-764-daniela-nahas.html

நேற்றைக்கு வலையை மேய்ந்த போது இந்த சுட்டியில் தடுக்க நேர்ந்தது.

http://www.nytimes.com/2011/03/02/dining/02Appe.html?pagewanted=1&_r=1

இவிங்க என்ன சொல்றாங்கன்னா தேங்கா ஒரு சூப்பர் சாப்பாடு, இது இதயத்திற்கு நல்லது தலைமுடிக்கு நல்லது சருமத்திற்கு நல்லது அது இதுன்னு உசுப்பேத்தறங்க

நானும் இந்த கார்ப்பரேட் ஆசாமிங்க அடங்கவே மாட்டாங்க எவனோ ஒருத்தன் ஒரு மெகா கோழி பண்ணையோ இல்லேன்னா சவுத் அமெரிக்காவிலே ஒரு மெகா தென்னை தோட்டத்தை வாங்கியிருப்பான் அவன் பிஸினஸ் அதிகமாக்க கெளப்பி விடாறன் என நினைச்சு அடங்கிட்டேன். நமக்கு தான் தேங்காயும் முட்டையும் சாப்பிடாமே நாக்கு செத்து போயிருச்சே.

நேற்றைக்கு ஒரு சயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிக்கையை மேயும் போது அதில் பத்தாண்டுகளுக்கு முன்னால் உணவுகளைப் பற்றிய அபிப்ராயங்களை விஞ்ஞானிகள் இப்போது மாற்றிக் கொள்கிறார்கள் என இருந்தது.

ஆஹா மீண்டும் முட்டையும் தேங்காயும் சாப்பிடலாம் என முடிவெடுத்து என ஒரு ட்ரே முட்டையும், இரண்டு தேங்காயும், ஒரு கேன் தேங்காய் எண்ணையும், ஒரு கார்ட்டன் இந்த இளநீர் தண்ணியும் வாங்க கிளம்பிட்டேன்

கால் நூற்றாண்டை வீணடித்து விட்டேன் முட்டையும் தேங்காயும் இல்லாமல் :)

Sunday, April 11, 2010

கனடாவிலிருந்து..............: நிறங்களில் ஆனந்தம்

கனடாவிலிருந்து..............: நிறங்களில் ஆனந்தம்

Sunday, February 21, 2010

என் சமீபத்திய பொம்மை

அவ்வபோது எனக்கின்று சில டாய்ஸ்கள் வாங்குவது வழக்கம். கடந்த கருப்பு வெள்ளியன்று ஒரு Canon SX20IS என்ற மற்றும் ஒரு பொம்மையை வாங்கினேன்.

எல்லா இளைஞர்கள் போல பாரின் வந்த புதிதில் ஒரு ப்ரோபெஷனல் போட்டோகிராபர் ஆக வேண்டும் என்ற வைராக்யத்தில் பிலில் யுகத்தில் ஒரு எஸ் எல் ஆர் காமிரா மற்றும் அதன் லென்சுகள் ப்ளாஷ்கள், ஃபில்டர்கள் என பல அய்டங்களை சில ஆயிரம் டாலர்களை செலவழித்து வாங்கினேன். எங்காவது சுற்றுலா செல்லும் போது அந்த காமிரா பையை தூக்கினாலே வீட்டில் கலகம் வரும் நிலை வந்தது.

பிலிம் யுகத்தில் போட்டோ எடுத்து அதை ப்ராசஸ் செய்ய தந்து பிரசவ வேதனையுடன் காத்திருப்பது தனி சுகம்....

டிஜிட்டல் யுகம் வந்தவுடன் மெகா பிக்ஸல்கள் ஏற ஏற காமிரகளும் என் கையில் மாறிக் கொண்டே இருந்தது.

கடைசியாக ஒரு ஸ்பெசிபிகேஷனை நானே எழுதினேன். என்னுடைய ஸ்பெசிபிகேஷன் இதோ :

ஒரு காம்பெக்ட் காமிராவாக இருக்க வேண்டும். வைட் ஆங்கிள் முதல் நல்ல ஜூம் வரை ஒரே லென்சாக இருக்கவேண்டும். சின்ன பையில் அடங்க வேண்டும். விலை சகாயமாக இருக்க வேண்டும். முக்கியமாக ஹை டெஃப் வீடியோ எடுக்கவேண்டும். இந்த கண்டிஷனுடன் தேட ஆரம்பித்தேன். மூன்று காமிராக்கள் தேறியது. நைகானின் பி90, சோனியின் எச் எக்ஸ் என நினைக்கிறேன் மற்றும் கானனின் SX20IS. இதில் சோனியை முதலியே கழித்து விட்டேன். இதன் ப்ரத்யேக பாட்டரி, பாட்டரி ஜார்ஜர் மற்றும் மெமரி ஸ்டிக்குகள் காரணமாயின.

நைகானின் பி-90 பற்றிய இணைய விமர்சனங்கள் சரியாக இல்லை. பெஸ்ட் பை சேல்ஸ்மேன் கூட ரெகமண்ட் செய்யவில்லை :)

கடைசியாக ஒரு கருப்பு வெள்ளியில் $350க்கு இந்த பொம்மையை வாங்கினேன். இந்த விலையில் இவ்வளவு வசதிகளுடன் கூடிய ஒரு நல்ல காமிரா.

இந்த காமிராவின் நிறைகள்

லென்ஸ் 28 எம் எம் முதல் 516 எம் எம் வரை (20 x optical 80 x Digital)

சுழலும் திரை

ஹை ஃடெப் வீடியோ

AA பாட்டரிகள் மற்றும் சாதா மெமரி கார்டுகள்

பாட்டரி லைப்

காமிரவிலிருந்து HDMI cable பெரிய திரையில் பார்க்க வசதியாக

பல ஆட்டோ செட்டிங்கள் மற்றும் மானுவல் செட்டிங்கள்

எடிட்டிங் வசதிகள்

முகத்தை கண்டுபிடித்து ஆட்டோ கிளிக்கும் வசதி

பல போட்டக்களை எடுத்து அவற்றைக் கோர்த்து மிக பெரிய படமாக்கும் வசதி

மற்றும் பல..

இந்த காமிராவின் குறைகள்

குறைந்த லைட்டிங்கில் அல்ட்ரா ஜூமில் ஆட்டோ ஃபோகஸ் மிகவும் ஸ்லோ ( இந்த விலைக்கு இவ்வளவு தான் வரும். என்னுடையது பேராசை)

ஆட்டோ மோடில் இண்டோர் போட்டக்களில் அதிக ஐ எஸ் ஓ செட்டாகிறது அதனால் படத்தில் Noise அதிகமாக இருக்கிறது. (அடுத்த மாடலில் இந்த குறை தீரும் என நினைக்கிறேன்)

பில்ட் இன் ஃப்ளாஷ் சராசரியாக இருக்கிறது. ஆனால் பெரிய ஃப்ளாஷ் மாட்ட ஷூ இருக்கிறது (விலை $150)

ரிசல்ட் பார்க்கலாமா

கீழே உள்ள வீடியோ ஹூஸ்டன் ஏர்போர்ட் ரெஸ்டாரண்டின் ஜன்னல் வழியாக ரன் வேயை எடுத்தது.
















சான் அண்டோனியவின் ரிவர் வாக்....





சான் ஆண்டோனியோவின் சீ வோர்ல்ட்டின் சில காட்சிகள்










விமானத்திலிருந்து டொராண்டோ நகரம்




பனித்துளி.... மாக்ரோ ஷாட்டில்





அல்ட்ரா ஜுமில் பௌர்ணமி நிலவு




பெட்ரூம் சைட் டேபிள் லாங் ஷாட்டில்..




அதே அல்ட்ரா ஜூமில்





இந்த காமிராவை உபயோகிக்கும் முன் இதன் உபயோக நூலை நன்றாக படிக்க வேண்டியிருக்கிறது.

சிறிது போட்டோ கிராபி ஞானம் உள்ளவர்களுக்கு..

காம்பாக்ட் காமிராவை விட்டு வெளியே வர துடிப்பவர்களுக்கு

சகாயவிலையில் அதிக வசதிகளுடன் கூடிய ஒரு நல்ல காமிரா..


சுமார் பத்துவருடங்களுக்கு முன் இதேவிலையில் நான் வாங்கிய 1.3 மெகா பிக்ஸல் காமிராவுடன் ஒப்பிட்டால் இது ஒரு பரிணாம வளர்ச்சி.
நண்பர் இலவசக் கொத்தனாரின் வேண்டுக்கோளுக்கிணங்க காமிரவின் படங்கள். (Courtesy : http://www.photographyblog.com/reviews/canon_powershot_sx20_is_review/product_images/



















ஒரு திருத்தம் : என்னுடைய நேற்றைய பதிவில் ஒரு டைப்போ Canon SX10IS என்பது Canon SX20IS என சரி செய்து கொள்ளவும். 10 முந்தைய மாடல்

Tuesday, February 16, 2010

வாட்..இஃப்...

பொய்யே பேசாத உலகம் எப்படி இருக்கும்.....

பிறக்கும் போது மூப்புடன் பிறந்து வயதாக ஆக இளமை அடைந்து கடைசியில் குழந்தையாக இறந்தால் என்னாகும்

எப்போதும் No சொல்பவன் எல்லாவற்றுக்கும் Yes என்றால் என்னாகும்


இவையெல்லாம் சமீபத்தில் விமான பயணங்களில் நான் பார்த்த படங்களின் ஒன் - லைன்கள்


The Invention of Lying http://www.imdb.com/title/tt1058017/ என்ற படம் நல்ல காமெடி. உண்மை மட்டும் பேசும் உலகில் சினிமா எப்படி இருக்கும்...பிடிக்காத பிளைண்ட் டேட் எப்படி இருக்கும் என்பதை அட்டகாசமாக விவரிக்கிறார் டைரக்டர் ஆக்டர் Ricky Gervais. உண்மை மட்டும் பேசும் உலகில் கடவுள் இல்லை கபடம் இல்லை. இவர் பொய் பேசி கடவுளை உருவாக்கி தேவதூதனாகி உலகை சுவாரசியமாக்குகிறார். பார்க்க வேண்டிய படம். இந்தியாவில் கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் இந்தப் படத்திற்கு தடை வாங்குவார்கள் :)


The Curious Case of Benjamin Button http ://www.imdb.com/title/tt0421715/

ப்ராட் பிட்டின் நடிப்பிற்காகவும் மேக்கப்காகவும் இந்த படத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு நன்றாக இருந்தது.

கடவுளே இந்த படத்தை கமலஹாசனிமிருந்து மறைத்து விடு. கடித்து குதறிவிடுவார்.

Yes Man http://www.imdb.com/title/tt1068680/ என் அபிமான நடிகர் ஜின் கேரி நடித்தது. எதற்கும் மறுப்பு தெரிப்பவன் மனது எல்லாவற்றுகும் ஆமாம் சொல்வதால் எவ்வாறு விரிகிறது என்பது படம். மிகுந்த விறுவிறுப்புடன் போகிறது.

Monday, February 08, 2010

1000 வழிகளில் சாவு

சமீபத்தில் 1000 ways to die என்ற டிவி நிகழ்ச்சியைப் பார்க்க நேரிட்டது. இது Spike என்ற சானலில் ஒளிபரப்பபடுகிறது.



சில நிஜ சாவுகள் எப்படி நிகழ்ந்தன என்பதை காட்டுகிறார்கள்



சில சாவுகள் செத்தவர்களின் முட்டாள்தனத்தால் நிகழ்கிறது, சில விபத்துகள், சில பொய் சொல்வதினால், சில பேராசையால், சில திமிர் பிடித்த செயல்களால்.



ஒருவருக்கு பங்ஜி ஜம்பிங் செய்ய ஆசை ஆனால் பணம் இல்லை. பக்கத்தில் நிற்கும் ஒரு உயர கிரேனில் ஏறி குதிக்கிறார். இவரின் முட்டாள் தனம் இவர் காலில் கட்டிய கயிறு கிரேனின் உயரத்தை விட அதிகமாய் இருந்தது. பாவம் ஸ்பாட்டில் அவுட்.


பணக்கார ஆனால் வயதான தாத்தா. மூக்கில் ஆக்ஸிஜன், மூச்சுவிட வெண்டிலெட்டர், மருத்துவர்கள். நர்ஸ்கள், மருந்துகள் இவைகளை வைத்துத் தான் இவர் வாழ்க்கை ஓடுகிறது. இந்த வயதிலும் இவருக்கு பலான பெண்களை ஆடவிட்டு ஜொள்ளுவிடுவார். இவ்வாறு ஒரு நாள் இவருக்காக ஒரு பெண் கவர்ச்சி ஆட்டம் ஆடும் போது கால் தவறி வெண்டிலெட்டர் மெஷின் மேல் விழுந்து அதன் பவர் பிடுங்கி கொள்கிறது. தாத்த வைகுண்ட பதவியை இஸ்டண்ட் ஆக அடைகிறார்.


இவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். இவருக்கு தீவிர ஆஸ்துமா நோய் இருக்கிறது. ஆனால் தன் காதலியிடம் தன் நோயை மறைக்கிறார் இவர். ஒரு நாள் இவர் காதலி காதல் செய்ய இவரை வீட்டிற்கு அழைக்கிறார். காதலிக்கு இந்திய உணவு பிடிக்கும். அதனால் இந்திய உணவை இவருக்காக சமைக்கிறார். ஒவ்வொரு மசாலா பொடியை இவரின் மூக்கிற்கு அருகில் சென்று முகர வைக்கிறார். காதலுனுக்கு ஆஸ்த்துமா அட்டாக் அதிகம் வந்து இவர் அவுட் பாவம் உண்மை சொல்லியிருந்தார் பிழைத்திருப்பார்.

இவருக்கு வர வர ஆண்மை குறைய தொடங்கியிருக்கிறது. இவருக்கு மனைவியும் உண்டு ஆசை நாயகியும் உண்டு. அதனால் வயாக்ரா சாப்பிடுகிறார். ஒருநாள் மனைவியிடம் உடலுறவு கொள்ள தயாராகும் போது ஆசை நாயகியிடமிருந்து போன் வருகிறது. பாத்ரூமிற்கு போய் 3 மாத்திரைகளை போட்டுக் கொண்டு மனைவியிடம் வருகிறார். தன் கணவனின் ஆண்மையை அதிகமாக்க கணவனுக்கு மனைவி பியரில் 3 மாத்திரைகளை போட்டு தருகிறாள். மனையிடன் காதல் செய்துவிட்டு ஆசை நாயகியின் வீட்டிற்கு ஓடுகிறான். காதலி பழச்சாறில் 3 மாத்திரைகளை போட்டு தருகிறாள். 9 மடங்கு ஓவர் டோஸாகி வயாக்ரா ஆள் ஆசைநாயகி வீட்டில் அவுட்டாகிறான்


இப்படி பலவழிகளில் இறந்தவர்களைப் பற்றிய 1000 ways to die என்ற டிவி தொடர் ஒரு நல்லப் பாடமாக இருக்கிறது

Sunday, February 22, 2009

வால்மார்ட் பற்றிய இரு வேறு பார்வைகள்


வால் மார்ட் என்பது ஆணி முதல் கப்பல்வரை விற்கும் ஒரு பலசரக்கு கடை. இந்த கடை அமெரிக்கா/கனடாவில் எல்லா ஊரிலும் மூலை முடுக்கு களிலும் இருக்கும். உலகில் அதிக பிசினஸ் செய்யும் கம்பெனிகளில் முதல் இடத்தில் இருப்பது இதுதான்.


கடந்த வாரம் ஒரு இந்திய சிவில் இஞ்ஜினியரை சந்தித்தேன். மிக பணக்காரர். கால்கரியில் 4 வீடுகள். டில்லியில் ஒரு பங்களா, ஹவாயில் ஒரு ரிசார்ட் என பணத்தில் திளைப்பவர். எல்லாம் அவரும் அவருடைய குடும்பத்தாரும் உழைத்த சொத்து.


அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் எல்லா பொருடகளையும் வால்மார்ட்டிலேயே வாங்குவதாக சொன்னார். அவர் தேடின பொருள் வால்மார்ட்டில் கிடைக்கவில்லையென்றால் மட்டும் வெளியில் வாங்குவதாக சொன்னார்.

வால்மார்ட் ஏழை மக்களின் கடையாயிற்றே உங்களை போன்ற பணக்காரர்கள் எப்படி... என இழுத்தேன்.. அவர் சொன்ன அவரின் கதை என்னை பிரமிக்க வைத்தது.


அவர் கனடாவிற்கு வந்த புதிதில் வேலையே கிடைக்கவில்லை. இந்தியாவில் அவர் பார்த்த கவர்மெண்ட் வேலையும் அனுபவமும் உதவவில்லை. கையில் கொண்டு வந்த ரூபாய் 20 லட்சம் வேகமாக தீர்ந்தது. அவர் அவரின் மனைவி மற்றும் பதின்ம வயதில் இரு மகன்களும் ஒரு மகளும் என்ன செய்வது என கையைப் பிசைந்து கொண்டு நின்றார்கள். அப்போது அவர்களுக்கு கை கொடுத்ததது வால்மார்ட். ஐவரும் அங்கே வேலைக்கு சேர்ந்தார்கள். வாடகைக்கும் சாப்பாட்டிற்கும் பணம் கிடைத்தது. முதலில் தந்தை மேல் படிப்பு படித்து இஞ்ஜினியராக மறுபடியும் நல்ல வேலையில் சேர்ந்தார். மனைவி வால்மார்ட்டிலேயே பதவி உயர்வடைந்து அக்கௌண்டண்ட் ஆனார். பிறகு குழந்தைகள் படித்து முன்னுக்கு வந்துவிட்டார்கள். வந்தாரை வாழ வைத்த வால்மார்ட்டுக்கு நன்றி கடனுடன் இருக்கிறார்கள் இந்த மில்லியனர்கள்

இன்னொருவர், இவர் ஒரு அமெரிக்கர், வெள்ளை இனத்தவர் . அமெரிக்காவின் ஆடம்பர, கூச்சல் நிறைந்த வாழ்க்கையை வெறுத்து கனடவில் குடியேறிவர். மிக எளிமையாக வாழ்பவர். இவரின் அபார்ட்மெண்டில் சுத்தமாக ஒரு பர்னிச்சரும் இல்லை. ஸ்லீப்பிங் பாக் இல் தூங்குவார். இயற்கை சோப், மற்றும் வாசனை திரவியங்களை உபயோகிப்பார். உறைந்த இறைச்சியை சாப்பிட மாட்டார். ப்ரஷ் இறைச்சி அதுவும் இயற்கை தீவனங்கள் தின்று வளர்ந்த கால்நடை, இறைச்சியை உண்பார். இயற்கை உரங்களை கொண்டு விளந்த காயகறிகளைதான் உண்பார். கனடா மற்றும் அமெரிக்காவில் தயாரான உடைகளையும் காலணிகளையும் அணிவார். கோக் பெப்ஸி போன்ற பானங்களை அருந்த மாட்டார் இவ்வாறும் இன்னும் பல

இவரும் நானும் ஒரு முறை நகருக்கு சென்ற போது நான் வால்மார்ட்டில் சில பொருட்களை வாங்க வேண்டியிருந்தது. இவர் வால்மார்ட்டின் உள்ளே வர மறுத்து விட்டார். பிறகு அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் வால்மார்ட்டின் மேலுள்ள அவரின் ஆதங்கங்களை வெளியிட்டார்..


வால்மார்ட் அநியாய பிஸினஸ் செய்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் பல குழந்தை தொழிலாளர்களினால் குறைந்த விலையில் தயாரிக்க்பட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்கிறது என்பார். வால்மார்ட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களை அடிமையாக நடத்துவார்கள் என்றார். உதாரணத்திற்கு. திங்களன்று ஒருவரை மானேஜர் ஒரு தொழிலாளியை அழைத்து இன்று 10 மணிநேரம் வேலை செய் என்பார். அந்த தொழிலாளியும் ஓவர் டைம் கிடைக்கிறது என்று சந்தோஷமாக வேலை செய்வார். ஆனால் வெள்ளி கிழமை அந்த தொழிலாளியை அழைத்து இன்று 6 மணிநேரம் வேலை செய்தால் போதும் என்பார். அந்த வாரம் அவர் 40 மணிநேரம் வேலை செய்த மாதிரி ஆகிவிடும் ஆகையால் ஓவர் டைம் வழங்க தேவையில்லை. மேலும் தொழிலாளிகளின் கூலியை எப்போதும் ஏற்றுவது இல்லை. சம்பள உயர்வு கேட்டால் வேலை காலியாகிவிடும் இன்னும் இவ்வாறு பல குற்றசாட்டுகளை அடுக்கினார்.


அவர் அடுக்கியதில் அர்த்த முள்ள குற்றசாட்டு இதுதான்: வால்மார்ட் அசுர வளர்ச்சிக்கு அடைவதற்கு முன் ஆங்காங்கே சிறு சிறு கடைகள் இருந்தன. சில கடைகளில் சில பிரத்யேக பொருடகள் கிடைக்கும். அங்கே வாடிக்கையாளராகி அந்த கடைகளை ஊக்குவிப்பதில் அலாதி இன்பம். ஆனால் வால்மார்ட் வந்தவுடன் அந்த சின்ன கடைகள் காணாமல் போய்விட்டன. சின்ன சின்ன முதலாளிகள் இல்லாமல் போய்விட்டனர். இப்படி சின்ன மீன்களை விழுங்கிய பெரும் திமிங்கிலம் தான் இந்த வால்மார்ட் இங்கே பிசினஸ் செய்வது நல்லதில்லை என்பார். மேலும் இவர் சுவிட்சர்லாந்தை அதிகமாக வெறுப்பவர். சுவிட்சர்லாண்ட்டில் மூன்றாம் உலக ஊழல்வாதிகள் ஏழை மக்களை ஏமாற்றி அங்கே பணத்தை போடுகிறார்கள். அந்த பாவபட்ட பணத்தில் கிடைக்கும் வட்டியில் வாழ்கிறது இந்த நாடு. இதெல்லாம் ஒரு நாடு. இந்த நாட்டின் பொருளை நான் ஏன் வாங்க வேண்டுமென்றார். இந்தியாவில் தயாராக்கும் டைடன் வாட்ச்களை வாங்க தயாராய் இருக்கிறார். அடுத்த முறை இந்தியாவிற்கு போகும் போது ஒரு டைடன் வாட்ச் ஒன்றை வாங்கி இவருக்கு தரவேண்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்.

இதில்எனக்கு என்ன புரிந்தது என்றால் .ஏழை மக்களை அடித்து ஏழைகளை வாழவைத்து வால்மார்ட் ஓனர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்பது தான்



























Friday, February 20, 2009

சூரிய நாய்கள்

கடந்த ஆறுமாதங்களாக கனடாவின் வடக்கே உள்ள எண்ணை எடுக்கும் மணற்குவாரியில் வேலை.


கிறிஸ்துமஸ் நியூ இயர் லீவில் பெரும்பாலோர் ஊருக்கு போய்விட நான் அங்கே வேலைப் பார்த்து கொண்டிருந்தேன்.

அன்றைக்கு கடும் குளிர். லாட்ஜிலிருந்து கார்பார்கிங்க்கு நடந்து வருவதற்குள் கண்ணில் இருக்கும் நீர் கூட உறைந்து கண்கள் வலித்தன.

அதிகாலை சுமார் 6.30 இருக்கும் கும்மிருட்டு இங்கே சூரிய உதயமே காலை 9 மணிக்கு பிறகுதான்.

காரை ஸ்டார்ட் செய்து காரின் வெப்பமானியை நோக்கியதில் வெப்பம் -45 என காட்டியது. என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகு குறைந்த வெப்பம் இதுதான்.


கண்ட்ரோல் ரூமிற்கு முன்னால் காரை பார்க் செய்து உள்ளே வந்து சூடான காபி அருந்தி கொண்டே மீட்டிங்க் அட்டெண்ட் செய்தேன். அங்கே எந்தெந்த பைப்புகள் உறைந்து உடைந்துள்ளன என விவரித்து கொண்ட்டிருந்தார்கள். எரிகோபுரத்தின் (Flare) மேல் சுமார் 3 டன் ஐஸ் உறைந்திருக்கிறது. அது எந்த நேரத்தில் உடையும் உடைந்தால் எங்கே விழும் விழுந்தால் என்னென்ன இயந்திரங்கள் பழுதாகும் என விவாத்திதோம்.


அதற்குள் மணி காலை பத்தாகியிருந்தது. அப்போது பப்ளிக் அனௌன்ஸ்மெண்ட் சிஸ்டத்தில் "வெளியே குளிர் -52 டிகிரி சி அவசியம் ஏற்பட்டால் ஒழிய யாரும் வெளியே போகவேண்டாம். இது கட்டளை " என அறிவித்தார்கள்


கட்டளை என்றாலே அதை மீற வேண்டும் போல் தோன்றும் எனக்கு புகைபிடிப்பாளர்கள் ரகசியமாக வெளியே போனார்கள். நானும் அவர்களுடன் போனேன்.



அங்கே நான் கண்ட காட்சி காணக்கிடைக்காத காட்சி.



மூன்று சூரியன்களை கிழக்கே அடிவானத்தில் கண்டேன்



ஆ என் வாய்பிளந்ததில் என் சிறு குடல் வரை உறைந்து விட்டது :)



புகை பிடிக்க வந்த நண்பர்கள் " அதுவா சிவா, இதை சூரியநாய் என்பார்கள்" என் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் சொல்லிவிட்டு புகை பிடிக்க போய்விட்டார்கள்.


அந்த காட்சியை போட்டோ எடுக்கலாம் என்றால் கையில் காமிரா இல்லை. செல் போன் காமிராவிலும் சரியாக பதிவாக வில்லை.


விக்கிபீடியாவில் கிடைத்த புகைபடம் கீழே உள்ளது.



மிஷ்டி தோய்யும் நீர் மோரும்



கடந்த ஆறுமாதங்களாக படு பிஸி. எண்ணையை எடுத்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலைப்பார்த்தோம் கனடாவின் வடமத்திய மேற்கே எண்ணை மணலில் ஆலைகட்டி எண்ணை எடுக்க செக்கிழுத்துக் கொண்டிருந்தோம்.

ஆலைக்கு ஓரத்தில் ஒரு ஓடுபாதை கட்டி பிரத்யேக விமானங்களில் தொழிலாளர்களை அள்ளிக் கொண்டு போய் ராட்சச லாட்ஜுகளை அங்கேயே கட்டி தொழிலாளர்களை தங்க வைத்து வேலை வாங்கி கொண்டிருந்தார்கள்.

வழக்கம்போல் கம்யூட்டர்/கண்ட்ரோல் ஸிஸ்டம் வேலைகளை செய்ய இந்திய இளைஞர்கள் கணிசமான அளவில் வந்திருந்தார்கள். நானும் அவர்களுடன் போயிருந்தேன். காடு இரண்டு வாரம் வீடு ஒரு வாரமென கடந்த ஆறுமாதகளாக வாழ்க்கை ஓடுகிறது.


கானகத்தில் கட்டிய லாட்ஜில் உள்ள மெஸ்ஸில் தினம் தினம் வேளைக்கு வேளை மாமிசம்தான். மாமிச பட்சிணி எனக்கே சலித்துவிட்டது என்றால் பாருங்கள். எத்தனை ஆயிரம் மாடுகள், பன்றிகள், கோழிகள், மீன்கள் உயிர்தியாகம் செய்தனவோ.

நம்மாட்களுக்கு மாமிசம் என்றாலே ஆகாது. இந்தியாவிலிருந்து வந்தவர்களெல்லாம் மிக வேகமாக கனடாவின் ரிசஷென் போல் எடை இழந்து கொண்ட்டிருந்தார்கள்.

ஒருநாள் என்னிடம் "சார், சப்பாத்தி, தால், தயிர், சோறு கிடைத்தால் போதும் சார்" என்றார்கள். நானும் மெஸ் மானேஜரிடம் பேசினேன். அவர் என்னை தர தரவென்று இழுத்துக் கொண்டு வித வித மான் யோகர்ட் அதாவது வெள்ளைகார மிஷ்டிதோய்யைக் காட்டினார். "சாமி இதெல்லாம் இருக்கம்ட்டும்யா..... நம்மாட்களுக்கு இதெல்லாம் பிடிக்காது . இந்த மாதிரி வெண்ணிலா, ஸ்ட்டிராபெர்ரி, ப்ளூ பெர்ரி பிளேவர்களை விட்டு சர்க்கரை போடாதத ப்ளேன் தயிரை காட்டுமய்யா எங்காட்கள் மிக சந்தோஷமாகிவிடுவார்கள்" என்றேன்.


அடுத்த நாள் முதல் நம்மாட்களின் முகத்தில் சந்தோஷ களை தாண்டவமாடியது. கால்கரியிலிருந்து ப்ரியா ஊறுகாய் பாட்டில்களை இறக்குமதி செய்யபட்டு தயிர்சாதத்தை கட்டு கட்டு என ரவுண்டடித்துக் கட்டினார்கள். முதலில் முகம் சுழித்த வெள்ளைக் கார துரைகள் பிறகு அதைப்பார்த்து பழகி கொண்டார்கள்


முந்தின இரவு சாப்பிட்ட ஸ்டேக் காலையில் சாப்பிட்ட சாசேஜ் மதியம் சாப்பிட மூஸ் ஸ்டூ இவைகள் வூடு கட்டி தாக்கியதி வயிற்றில் வெப்பம் அதிகரித்தது . வெளியே என்னவோ வெட்பம் -45 டிகிரி சி தான்.


என் வயிற்று வெப்பத்தை தணிக்க சமையலறைக்கு சென்றேன். அங்கே இரு வெள்ளைகார பெண்மணிகள் தங்கள் எடையை குறைக்கும் நோக்கத்தில் மிக சுவையான ராஸ்பெர்ரி யோகர்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சர்க்கரை போடாத, ப்ளேவர் இல்லாத யோகர்ட் கிடைக்குமா என கேட்டன். அவர்களும் ஒரு சின்ன கப் ப்ளேன் யோகர்டை கொடுத்தார்கள்.

ஒரு பெரிய கிளாஸை எடுத்து அந்த யோகர்டை அதில் காலி செய்தேன். அந்த பெண்மணிகள் சங்கடத்துடன் என்னைப் பார்த்தார்கள். பிறகு வெண்டிங் மெசினில் ஒரு அக்வா ஃபினா பாட்டிலை வாங்கி அந்த தண்ணீரை அதில் ஊற்றினேன். ஒரு பெண்மணி "ஏய்... சிவா என்ன செய்கிறாய்?" என அந்த ப்ளாண்ட்களுக்கே உரிய முகபாவனைகளை காட்டினாள். நான் அதில் சிறுது உப்பை போட்டதும் "ஏய்... ஏய்.. நீ வேடிக்கை தானே காட்டுகிறாய்" என்றாள். நான் புன்னகைத்து கொண்டே சிறிது மிளகு பவுடரை போட்டதும் அந்த பெண் வீல் என வீரிட்டாள்


கண்ட்ரோல் ரூமில் இருந்த எல்லோரும் என்ன சத்தம் என பார்க்க வந்து விட்டார்கள்.

அந்த பெண் "என் வாழ்க்கையில் பார்க்காத நிகழ்ச்சி இது.. இவன் தயிரில் உப்பும் மிளகும் போட்டு தண்ணீர் ஊற்றி சாப்பிடுகிறான்" என் கண்களை விரித்து தோள்களை குலுக்கி சொல்லிகொண்டிருந்தள்.


இதை கேட்ட என் வட இந்திய நண்பர்கள் "அரே யார், ச்சாஸ் (chaas) யார் மேரகோ ஏக் கிளாஸ் தேதோ" என உற்சாகமாகி விட்டார்கள்.


இந்த மாதிரி சமயத்தில் தான் திரு. சொக்கன் எழுதிய இந்தப் பதிவை பார்க்க நேரிட்டது.

என் வயிற்று வெப்பம் தணிந்ததோ இல்லையோ நீர்மோர் இந்த பனிக்காட்டில் கொடிகட்டி பறக்கிறது.






பி.கு. பனிகாட்டில் என் வெள்ளைகார நண்பர்கள் பனிஸ்கூட்டரில்(Snow mobile) போய் மேலே படத்தில் உள்ளதை போன்ற ஒரு மூஸை வேட்டையாடி அந்த இறைச்சியை சமைத்தார்கள்.

Friday, November 21, 2008

அந்த காட்சியை நானும் பார்த்தேன்..

நேற்று மாலை சுமார் 5.30 ஒரே கும்மிருட்டு ! :) வேலையை முடித்துவிட்டு காரில் செல்லும் போது தென்கிழக்கே தீடிரென்று தீப்பந்து குப்பென்று எழுந்தது.

சத்தம் ஏதுமில்லை....

பக்கது தொழிற்சாலை பத்திகிச்சா என நெஞ்சம் பதறியது.. அதில் வேலை பார்க்கும் என் நண்பருக்கு போன் செய்தால் அவரும் எங்க பாக்டரி இல்லையப்பா இன்னும் தெற்கே தெரிந்தது என்றார்.

மேலும் பதறி எல்லா தொழிற்சாலைகளிலும் போன் போட்டு கேட்டு பார்த்ததில் எல்லாரும் நலம் என்றார்கள்

கடைசியாக ருமுக்கு வந்து டிவி பார்த்து பிறகுதான் தெரிந்தது.... விண்கல்லாம்... ஆல்பெர்ட்டா சாஸ்கெச்சுவான் எல்லையில் விழுந்திருக்கிறது.

மறுநாள் அலுவலகத்தில் வீழும் பங்கு சந்தையைவிட வீழ்ந்த விண்கலலைப் பற்றிதான் பேச்சு பார்க்க்க யூட்யூப்

Monday, May 26, 2008

கனேடிய அமெரிக்க எல்லையில் நான்

போன வாரயிறுதியில் கனேடிய அமெரிக்க எல்லையில் உள்ள மலை வாசஸ்தலத்தில் எடுத்த படங்கள்

இந்த சிகரங்களை நோக்கி பயணித்தோம்...





ஆசையாய் படகோட்டி மகிழலாம் என அந்த ஏரியை நோக்கி போனோம். அந்த ஏரி இன்னும் இறுக்கமாய் உறைந்திருக்க தூரத்தில் இருந்த அமெரிக்க எல்லையை பார்த்தோம்

ஏரி உருகி காட்டாறாக ஓடி.....

காட்டருவியாய் கொட்டி....


குற்றால சாரலாய் பனிநீரை தூவி......


ஏரியில் சங்கமிக்கிறது அமைதியாய்.
அத்தனையும் நல்ல நீர்
அந்த ஏரிக்கரையில் மலைமீது அமைதியான ஓட்டல்

















Thursday, April 24, 2008

சாதரண காமிராவில் அசாத்திய படம்

போன வாரம் மகனைப் பார்க்க அவன் தங்கியிருக்கும் ஊருக்கு போயிருந்தேன்.
அவன் வீட்டிலிருந்து சற்று நடந்து சரேலென்று ஒரு பள்ளத்தில் இறங்கினால் ஒரு நதி அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. உடனே கையிலிருந்த பாய்ண்ட் அண்ட் சூட் காமிராவில் கீழே உள்ள படத்தை பிடித்தேன்.


என் மகனோ "உன் காமிரா சப்பை படங்களைதான் பிடிக்கும் இதனால் நல்ல படங்களை பிடிக்க முடியாதென்றான்".

"என்னப்பா செய்வது ஏழைக்கு எற்ற எள்ளுருண்டை" என்றேன்.

அவன் என் காமிராவை பிடிங்கி 5 போட்டோகளை எடுத்தான்.

அதில் ஒன்று நார்மல் எக்ஸ்போஸர். இரண்டு அண்டர் எக்ஸ்போஸர் இரண்டு ஓவர் எக்ஸ்போசர் எடுத்துக் கொண்டான். 5 போட்டோகளையும் வைத்து HDR (Hi Dyanamic Range) rendering என்ற சாப்ட்வேரில் இணைத்தான். கிடைத்த ரிசல்ட் கீழே.




சாப்ட்வேர் முழுக்க முழுக்க அவன் கல்லூரியில் அவனின் நண்பர்கள செய்தது.
பின்னே சும்மாவா அவன் படிக்கும் கல்லூரிக்கு பில் கேட்ஸும் அப்துல் கலாமும் வந்து உரையாற்றுகிறார்கள்?

Thursday, February 14, 2008

Bourbon Street ல் கையெறி குண்டு.

சில ஊர்களில் சில தெருக்கள் மிக பேமஸ் ஆக இருக்கும். மதுரையில் டவுன்ஹால் ரோடு, சென்னையில் ரெங்கநாதன் தெரு, பெங்களூரில் பிரிகேட் ரோடு.

இந்த மாதிரி தெருக்களில் போய் சாப்பிங் செய்வதும், பார்ட்டி செய்வதும் ஒரு காலத்தில் பெருமையாக இருந்தது.

இந்த வகையில் அமெரிக்காவின் கட்ரீனா புகழ் நியூஆர்லியன்ஸின் Bourbon Street.

இந்த தெரு மிகவும் நெரிசலான தெரு. பார்க்க படம்.















ஆனால் இங்குதான் அமெரிக்காவின் சிறந்த கடலுணவு கூடங்களும் மதுபான கூடங்களும் நிர்வாண நடன விடுதிகளும் நிறைந்துள்ளன.

மதுரையில் நான் வாழ்ந்த காலங்களில் எங்கள் தெருவிலிருந்த சண்டியர்கள் ஏதாவது பண்டிகை வந்துவிட்டால். தண்ணியடித்து விட்டு சலம்புவர்கள். முக்கியமாக சலம்பும் பண்டிகை காமன் பண்டிகை என்ற காமாண்டி பண்டிகை. இதில் ரதி மன்மதன் வேடமிட்டு இருவர் வெள்ளையானையில்(மிக பெரிய பொம்மை யானை) ஊர்வலம் வர, சிவன் இவர்களை எரிக்க, பிறகு உயிர் கொடுக்க என நாடகங்கள் நடைபெறும். இதில் எரிந்த கட்சி எரியாத கட்சி என தகறாறு வந்து அடிதடியில் முடியும்.

இந்த பண்டிகையின் போது எங்கள் தெரு சண்டியர்கள் ஜிஞ்சர் என்ற மதுபானத்தை அருந்துவார்கள். அது பார்பதற்கு டெட்டால் மாதிரி இருக்கும், தண்ணீர் உற்றியதும் டெட்டால் மாதிரியே பால் போல் மாறிவிடும். மதுவிலக்கு காலங்களில் அவர்கள் மது அருந்துவதை பார்ப்பதே படு டென்ஷன் ஆக இருக்கும்.

அந்த ஜிஞ்சரை மூக்கை மூடிக் கொண்டு, (முகர்ந்து பார்க்கும் படி அவ்வளவு நல்ல மணம் கொண்ட பானம் அல்ல அது) ஒரே மடக்காக வாயில் ஊற்று ஒரு ஊருகாய் அல்லது மட்டன் துண்டை வாயில் அமுக்குவர். என் மானசீக ஹீரோ கோவிந்து வாழைப்பழத்தை வாயில் அமுக்குவான்.

சிறிது நேரம் அமைதி அப்புறம் ஜாலிதான் அவர்கள் செய்யும் சேட்டைகள் தாங்க முடியாது. வேட்டி அவிழ கால்கள் தடுமாறி வாயில் கெட்ட வார்த்தைகள் கொட்ட சலம்பல் அட்டகாசம்தான். இவர்கள் செய்ததை வடிவேலு திரையில் நகைச்சுவையாக செய்து கோடிக்கணக்கில் காசு பார்த்துவிட்டார்.



நான் சிறுவனாக இருந்ததால் எனக்கு ஜிஞ்சர் அடிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. சிலவருடங்களுக்கு முன் கோவிந்தை மதுரை தெற்குமாசி வீதி ஒரு டீ கடையில் சந்தித்து ஒரு பாட்டில் ஜிஞ்சர் கேட்டேன். அவன் ஒரு முனிவர் ரேஞ்சுக்கு அட்வைஸ் செய்துவிட்டு போய்விட்டான்.


சரி Bourbon Street க்கு வருவோம். மதுரையின் காமண்டி போலவே இங்கும் Mardi Gras என்ற பண்டிகை உண்டு. இந்த பண்டிகையைப் பற்றி கூகுள்/ விக்கிபீடியாவைப் பார்த்து அதன் சரித்திரம் பாரம்பரியம் போன்றவைகளை தெரிந்து கொள்ளலாம்.


நான் சந்தித்த ஒரு எலக்டிரிஷியன், வெள்ளைக்காரர் மிக பெரிய உருவம் கொண்டவர். அவரிடம் "ஏனையா மார்டி கிரா கொண்டாடுகிறீர்கள்?" என கேட்டேன். அவரும் "ஆஷ் வெட்னஸ்டே முதல் நாங்கள் விரதம் இருப்போம் அதற்கு முன் ஆசை தீர குடித்து கும்மாளாம் அடிப்பதுதான் மார்டி கிரா" என ஒரு போடு போட்டார். "ஐயா தாங்கள் எப்படி விரதமெல்லாம்...." என்று தயங்கிய வாறு அவருடைய மாபெரும் தொப்பையை பார்த்துக் கொண்டே கேட்டேன். அவர் அந்த மாபெரும் தொப்பை குலுங்க குலுங்க சிரித்தார். "விரதமெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயத்துக்குதான் என்னால் சாப்பிடாமல் இருக்குமுடியாது "என்றார்



அதுசரிஅதுக்கென்ன இப்போ என்கிறீங்களா. இந்த மார்டி கிரா ஆரம்பிப்பதற்கு முன் ஒருவாரமும் முடிந்த மறுநாளிலிருந்து நாளை வரையில் நான் இங்கிருக்கிறேன்.........




டவுன்ஹால் ரோடில் நடக்கும் போது அங்கு ஜவுளிகடைகளும் பேன்ஸி ஸ்டோர்களும் எலக்ட்ரானிக் சாமான் விற்கும் கடைகளும் கொட்டிக் கிடக்கும். இவற்றிற்கு நடுவே சில சாப்பாடு கடைகளும் உண்டு. டில்லிவாலா என்ற ஒரு குட்டி ரெஸ்டாரண்ட். இங்கே ஸ்வீட்களும் அதை விட்டால் பூரி மற்றும் சப்பாத்தி மட்டும் கிடைக்கும். செண்ட்ரல் டாக்கீஸ் அருகில் இந்த பக்கம் இருக்கும் கரும்பு ஜூஸ் கடையும் அந்த பக்கம் பாப்ளி ப்ரதர்ஸ் பக்கத்தில் இருக்கும் காபி கடையும் பிரபலம். மேலும் இரயில் நிலையத்தை நோக்கி நகரும் போது தாஜ் பிரியாணி, காலேஜ் ஹவுஸ் கடைசியாக ரீகல் தியேட்டர் எதிரில் சூப்பர் ஹீட்டட் டீயும் சமோசாவும் விற்கும் ஜம்ஜம் டீ ஸ்டாலும் பேமஸ்.



Bourbon Streetல் அனைத்து கட்டிடங்களும் ரெஸ்டாரண்ட், பார், நிர்வாண நடனகூடம் மற்றும் பரிசு பொருட்கள் விற்கும் கடைகள்தான். விநோதமாக பிள்ளையார் சிலைகளயும் இங்கே விற்கிறார்கள். பிள்ளையார் மட்டுமல்ல மேரிமாதா, இயேசு நாதர் சிலைகள், சிலுவைகள் யூதர்களின் நட்சத்திரங்கள், புத்தர் சிலைகள், மெக்கா படங்களையும் விற்கிறார்கள். மக்கள் பாவங்களை செய்துவிட்டு பாவமன்னிப்பையும் கையோடு வாங்கிக் கொண்டு போகிறார்கள் :)












இந்த தெருவில் மிக அதிக அளவில் கடலுணவு கூடங்கள் உள்ளன. இங்கு சிப்பிகளை(Oysters) பிளந்து உள்ளே இருப்பதை பச்சையாகவும் சாப்பிடுகிறார்கள் சமைத்தும் சாப்பிடுகிறார்கள். முதலைகறி, ஆமை சூப் ஆகியவையும் மிக பேமஸ். பார்க்க மெனுகார்ட்























































அடிக்கடி கையெறி குண்டுகளைப் பற்றியும் சூறாவளிக்காற்றை பற்றியும் அந்த தெருவில் பேச்சுவந்தது. இங்கே அடிக்கடி சூறாவளி புயல் அடிப்பதால் அதைப்பற்றி பேசுகிறார்கள் போலிருக்கிறது என கவனியாமல் நான் கண்ணும் கருத்துமை சிப்பிகளையும், முதலை வாலையும் ஆமை கறியையும் அங்கே பிரபலமான கிரா பிஷ் என்ற நன்னீர் இறாலையும் சாப்பிட்டுக் கொண்டிடுந்தேன். கடல் உணவு நாற்றம் எனக்கு பிடிப்பதில்லை ஆனால் நியூ ஆர்லியன்ஸில் சற்றும் நாறாமல் சமைக்கிறார்கள். அவர்களின் பாரம்பரிய கேஜன் (Cajun) சமையல் முறை அற்புதம்.









கிராபிஷ் என்னும் நன்னீர் இறால் :











ஹார்ட் ராக் கஃபே என்னும் புகழ்மிக்க ரெஸ்டாரண்டில் ஒரு குசும்புதனமான எச்சரிக்கை இதோ:















சாப்பாட்டிற்கு பின் இசை. ஜாஸ் இசையின் தலைமை செயலகம் நியூ ஆர்லியன்ஸ். இங்கிருக்கும் அனைத்து மக்களின் இரத்தத்தில் இசை ஊறி ததும்புகிறது. நெஞ்சை உறுக்கும் இசையும் உண்டு உற்சாகமாக ஆட கேஜன் இசையும் உண்டு. இளைஞர்கள் ஆட்டம் போட அட்டகாசமான இசையும் உண்டு. எங்கும் இசை கலைஞர்கள். மெலிதான வெளிச்சத்தில் சீமான்களும் சீமாட்டிகளும் மெதுவாக ஆட ஐந்து நட்சத்திர கலைஞர்கள் இசைக்கிறறர்கள்.



தெருவில் அட்டகாசமாக இசைப்பாடி பிச்சையெடுக்கும் இசை கலைஞர்கள். வெறும் பிளாஸ்டிக் வாளிகளை கவிழ்த்து போட்டு அற்புதமாக இசைக்கும் ட்ரம்மர்கள். இரவு பத்திற்கு மேல் ம்யூசிக் மற்றும் நடனம் தான். அது தெருவாக இருக்கட்டும் ஐந்து நட்சத்திர ஓட்டலாக இருக்கட்டும்.



















நானும் என் கூட வந்த இரண்டு நண்பர்களும் வயிறு முட்ட உண்டு Bourbon Street ல் நடக்க ஆரம்பித்தோம்.



மீண்டும் Hurricane பற்றியும் Hand grenade பற்றியும் பேச்சு வந்தது, "யோவ் என்னப்பா அது எனக்கு புரியல என்றேன். அவர்கள் சிவா நீ சுத்த மண்டு நியூ ஆர்லியன்ஸ் வந்து இரண்டு நாளகிறது இன்னும் இந்த இரண்டைப் பற்றி தெரிந்து கொள்ளாத நீ மண்டுதான்பா என்றார்கள். "




ஐயா, என்னது அது?" என ஜிஞ்சர் அடிக்காத கோவிந்து போல் திணறினேன்.
ஹரிகேன் என்பதும் ஹாண்ட் கிரனெட் என்பதும் Bourbon Street ன் ப்ரேத்யேக மதுபான கலக்கல்கள் (Cocktails)!.





ஆ..ஆ... முதலில் ஒரு சூறாவளிக்கற்றை விழுங்குவோம் என வாங்கி நான் பாதி சூறாவளியை அடிப்பதற்குள் என் நண்பர்கள் இரண்டு சூறாவளியை தாக்கியிருந்தார்கள்.




சூறாவளியை கடந்து நடந்து கையெறிகுண்டு கடைக்கு வந்துவிட்டோம். அங்கே நான் ஒரு கையெறி குண்டை என் வயிற்றில் எறிவதற்கு முன் என் நண்பர்கள் ஆளுக்கு இரண்டு வீசி இருந்தார்கள்.




கையெறி குண்டு விற்கும் சாரய கடை :)









சூறாவளியாலும் கையெறி குண்டாலும் தாக்குண்டு தடுமாறி கொண்டிருக்கும் போது...

மதுரை டவுன்ஹால் ரோடில் ஒரு கரும்பு சாற்றை அருந்திவிட்டு திரும்பும் போது ஒரு கிராமத்து பெண்மணி கையில் ஒரு கூடையும் ஒரு கோலும் வைத்து "தம்பி சோசியம் பாருய்யா.. நாலணா தான்யா" என்றார். என் கையைப் பார்த்து " ஐயா இருபத்தஞ்சி வருசம் கழிச்சி கடலடிக்கடியிலே இருக்கிற ஒரு ஊருக்கு போவே. அங்கே பத்திரமா இருய்யா. உன் நண்பர்கள் இரண்டு பேரை தாங்கணும்யா நீ" என்றார். கடலக்கடியில் ஊரா...

நியூ ஆர்லியன்ஸ் கடல் மட்டத்திற்கு கீழ் உள்ளது. நான் சென்றிருந்த ஒரு தொழிற்சாலையும் ஒரு மாபெரும் கால்வாய் (Canal) பக்கத்தில் இருந்தது. தண்ணீர் மட்டும் தொழிற்சாலையை விட உயரத்தில் இருந்தது. அதில் சரக்கு கப்பல்கள் போய் கொண்டிருந்தன. கட்ரீனா வந்த பிறகு அந்த கால்வாயின் கரையை உயர்த்திருக்கிறார்கள்

பார்க்க படம் :



என் நண்பரைப் பார்த்து அரைகுறை ஆடை அணிந்த ஒரு கிழவி என் நண்பரிடம் வந்து "சோசியம் பார்க்கலையா..... சோசியம்" என ஆங்கிலத்தில் கேட்டார்.


அந்த கிழவியை ஜொள்ளிய என் நண்பர் அவளிடம் $20ஐ தந்து சொல் என்று சாமி ஆட ஆரம்பித்தார். அவர் அருந்தி இருந்தது பருத்த பிருஷ்டங்களை கொண்டவர்கள் அருந்தும் பியர்





















அந்த சூனிய கார கிழவியும் எதோ ஒரு கார்டை உருவி பார்த்து "உன் மனைவி இறந்து விடுவாள்" என் நண்பனிடம் சொல்லவும் எற்கனவே இரண்டு கையெறி குண்டை எறிந்தவன் ஓ..... என ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டான். "யோவ் இருய்யா கொஞ்சம் விவரமா கேட்போம்" என சொல்லி அந்த சூனிய காரியிடம்


"ஆத்தா இப்படி வா... இந்தாளாடோ பொண்டாட்டி எப்ப சவாள்" என கேட்டேன். அதை கேட்ட என் நண்பர் "என் பொண்டாட்டி எப்போ சாவாள் என சாவகசமா கேட்கிறீயே சிவா உனக்கு மனிதாபிமானமே கிடையாதா" என தன் ஒப்பாரியை பெரிதாக்கினார்.

அவருக்கு இன்னொரு சூறாவளியை அடித்துவிட்டு. ....


சூனிய காரியின் பக்கம் திரும்பினால் அவள் சாமியாடி கொண்டிருந்தாள்.

என்னைப் பார்த்து "டேய் பாபி ஜிந்தால் (பாபி ஜிந்தால் லூசியானா மாநில கவர்னர் அதாவது முதல்வர். ஒரு இந்திய வம்சாவளி அமெரிக்கர். நான் இந்தியன் என்பதால் அந்த சூனியகாரி என்னை அவ்வாறு அழைத்தாள்) என் கிட்டேயவா" என சந்திரமுகி ரேஞ்சுக்கு முகத்தை அஷ்ட கோணலாக்கினாள். நானும் சளைக்கமால் " என் நண்பரின் பொண்டாட்டி எப்ப சாவான்னு டேட் சொல்லு மே நான் உன் கையைப் பார்த்து நீ எப்ப சாவேன்னு டேட் சொல்றேன் சவாலுக்கு ரெடியா " என்றேன்.


இதைப்பார்த்து கொண்டிருந்த அங்கே கையெறிகுண்டை வீசி கொண்டிருந்த அமெரிக்கர்கள் கைதட்டி உற்சாகபடுத்தினார்கள்.....


அதற்குள் பாரில் இருந்த பார் டெண்டர்கள் அந்த சூனிய காரியையும் எங்களயும் வெளியேற்றினார்கள்.


என் நண்பரின் அழுகை அதிகமாயிருந்தது. அந்த அர்த்த ராத்திரியில் அவர் டோராண்டோ அருகே நியூமார்கெட்டில் இருக்கும் அவர் மனைவிக்கு போன் செய்ய அவர் மனைவி ஆஸ்பத்திரிக்கு போயிருப்பதாக தகவல் வந்திருந்தது. அவரை ஆசுவாசுபடுத்தி "உன் மனைவி என்ன வேலை பார்க்கிறார்" என்று கேட்டேன்.


அவர் மனைவி ஒரு டாக்டர். அன்று அவருக்கு நைட் டூட்டி ஆஸ்பத்திருக்கே போயிருக்கிறார் என்பதை அறிந்தேன். சூறாவளி தாக்கி கைகுண்டுகளை எறிந்தவரிடம் அதை புரியவைப்பதற்குள் எனக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.


. என்னை தாக்கிய சூறாவளிக்கு நான் எறிந்த கையெறிகுண்டுக்கும் வேலையே இல்லாமல் போய்விட்டது என என் ரூமுக்குள் நுழைந்தால் தலையில் அணுகுண்டு வெடிப்பது போல் இருந்தது. என் கையெறி குண்டு டேபிளில் சமர்த்தாக அமர்ந்த்ரிந்தது.

























அமெரிக்காவின் பாவ நகரங்கள் (Sin Cities) மூன்று. அவைகள் லாஸ் வேகாஸ், மையாமி மற்றும் நியூ ஆர்லியன்ஸ்.

லாஸ் வேகாஸில் பணக்காரர்களின் நகரம். செலப்ரட்டிகளும் பணக்காரர்களும் புழங்கும் இடம். இங்கே எனக்கு தாழ்வு மனபான்மை அதிகமானது.

மையாமியில் மக்கள் எந்த நேரத்திலும் முக்கால் அரைக்கால் நிர்வாணமாக இருக்கிறார்கள். நிர்வாணம் சில மணிநேரத்திற்குள் போரடித்து விட்டும்.

நியூ ஆர்லியன்ஸ் மட்டும் தான் கொண்டாடிகளின் தலைநகரம்...

பி.கு. சில படங்கள் கூகுளில் சுட்டவை. பல படங்கள் என்னிடமிருந்த மோசமான கைத்தொலைபேசி காமிராவில் எடுக்கப்பட்டவை.



Friday, December 14, 2007

கிளிகளை கொஞ்சுவது எப்படி- துக்ளக் க்கு ஒரு பதில்

இந்த வார துக்ளக்கில் டெலிவிஷயம் என்ற பகுதியில் கீழ்கண்ட செய்தி வந்திருந்தது :

அடுத்த வீட்டு நாய்க்குட்டி !

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது குறித்து, ஒரு துண்டுச்செய்தி சன் நியூஸில் வந்தது. நாய், பூனை மட்டுமின்றி, முயலையும் கிளியையும் வளர்ப்போரைப் பற்றிக் கூடக் காட்டினார்கள். குழந்தைகளுக்குத்தான் இதில் வெகு ஆனந்தம். "என் டாமியைப் போல எங்கேயும் பார்க்க முடியாது' என்று சொல்லி, கொஞ்சிக் கொஞ்சி அதற்கு முத்தம் கொடுக்கிறார்கள். (நாய்க்கும் பூனைக்கும் சரி. கிளிக்கு எப்படி முத்தம் கொடுப்பார்கள்?)
வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்தால், இதய நோய் உள்ளவர்களுக்கு விரைவில் குணமாகும் என்று ஒரு நிபுணர் தெரிவித்தார். சில அபார்ட்மென்ட்களில் நாய் வளர்க்கக் கூடாதென்று கட்டுப்பாடுகள் இருப்பதாக ஒரு பிராணி நேசர் வருத்தப்பட்டார். அதற்கென்ன செய்ய முடியும்? செல்ல நாய் வளர்த்தால், இவருடைய இருதய நோய் வேண்டுமானால் குணமாகலாம். நாள் பூரா அதன் குரைப்பைக் கேட்டுக்கொண்டிருக்கும் அடுத்த போர்ஷன்காரர்களுக்கு, இருதய நோய் வரும் அபாயம் இருக்கிறதே!
The pessimist complains about the wind; the optimist expects it to change; the realist adjusts the sails – என்ற யதார்த்தத்தை உணர்ந்து, நாய் பூனை இல்லாத வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடி போக வேண்டியதுதான்.

இந்த மாதிரி சினிமா கிசுகிசு களையும் டெலிவிஷயம் போன்ற filler ஐட்டங்களை எழுதுபவர்கள் ஆங்கில கோட்களை சொல்லி முடிப்பது என்ன வழக்கம் என புரியவில்லை

அவர்கள் வழியிலேயே நாமும் ஒரு கொட்டேஷனை சொல்லி ஆரம்பிப்போம். நம்ம காந்திஜி என்ன சொல்லியிருக்கார்னா :

"The greatness of a nation and its moral progress can be judged by the way its animals are treated."


இதன்படி பார்த்தா அமெரிக்காவும், ஜப்பானும், கனடாவும் உலகில் மிக சிறந்த நாடுகள். இது ஓரளவு உண்மையும் கூட.

சரி பாய்ண்டுக்கு வருவோம். கிளியை கொஞ்ச முடியுமா? நிச்சயமாக முடியும்.

கிளிகள்தாம் பறவையினங்களில் ஒரு உன்னத இனம்.

இதன் உணர்ச்சிகள், அறிவுதிறன் அபாரமானவை. கிளிகள் பல சைஸ்களில் உள்ளன. உங்கள் உள்ளங்கையில் ஆனந்த சயனம் கொள்ளும் மிக சிறிய பாரட்லெட்டுகள் முதல் ஒரு சிறு நாய் குட்டி சைஸில் உள்ள மக்கா (Macaw) வரை பல சைஸ்களில் உள்ளன.

எல்லா கிளிகளையும் உங்கள் கையில் ஏந்தி உங்கள் உதட்டையும் அதன் அலகையும் ஒத்தி கொஞ்சலாம்.

அதற்கு முன் அதனுடன் உங்கள் பாசத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

என்னிடம் இருக்கும் நீமோவுடன் சென்று கொஞ்சும் குரலில் "நீமோ பேபி, குட்டி பேபி , ஐ லவ் யு உச்..உச்..உச்.. "என்றால் ஒடி வந்து அதன் அலகை நம் உதட்டோடு உரசி கொள்ளும். சில சம்யம் என் தாடியை அதன் அலகால் வருடி கொடுக்கும். அதைப் பார்க்கும் நீமோவின் ஜோடியான ரமோவிற்கு பொறாமை வந்து அதுவும் என்னை கொஞ்சும். கொஞ்சுவதில் இரண்டிற்கும் பலத்த போட்டி இருக்கும்.

சில கிளிகளிகளுக்கு முதுகை தடவினால் பிடிக்கும், சிலவற்றிற்கு மார்பை தடவினால் பிடிக்கும்.

பெரும்பாலன கிளிகளுக்கு தலையை தடவினால் மிக பிடிக்கும். இந்த தடவலில் கிளிகள் அடிமையாகி கொஞ்ச சொல்லி கெஞ்சும். மெதுவாக பொறுமையாக கிளிகளின் தலையை தடவிவிட்டால் போதும். பிறகு நாள் முழுவதும் கொஞ்சிக் கொண்டே இருக்கலாம்.

காக்கடூ என்ற வகை கிளியின் தலையை தடவி அனைத்துக் கொண்டால் நாள் முழுவது உங்கள் உடலிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும்., ஒரு அன்பான குழந்தையை போல.

வீட்டில் வளரும் கிளிகள் மிக சுத்தமானவை. வேளா வேளைக்கு குளித்து ஒரு வித சுகந்த நறுமணத்துடன் இருக்கும். நாயும் பூனையும் என்னதான் பற்பல ஷாம்பு , சோப்பு போட்டு குளிப்பாட்டினாலும் அதன் மேல் ஒரு வித துர்நாற்றம் இருக்கும். இந்த துர்நாற்றத்தை அந்த நாய்/பூனை குடும்பத்தினருக்கு தெரியாது.

துக்ளக் நிருபர் நாய் குரைப்பதை பார்த்து குறைப்பட்டிருக்கிறார். நன்றாக பழக்கிய நாய்கள் தேவையில்லாமல் குரைப்பதில்லை. வீட்டில் இயற்கை உபாதைகளை கழிப்பதில்லை. சுமார் 8 மணிநேரம் வரைக்கும் அது இயற்கை உபாதையை அடக்கிகொள்ளும். சில பூனைகள் வீட்டிலிருக்கும் டாய்லெட்டை உபயோகித்து விட்டு அதை ஃப்ளஷ் செய்கின்றன. இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்


இனி சில படங்கள் :


கீழே இருப்பது எங்கள் வீட்டில் இருக்கும் நீமோ (க்ரே கலரில் எட்டிப் பார்க்கும் கிளி) மற்றும் ரமோ






கிழே உள்ள வீடியோவில் ஒரு சின்னஞ்சிறு பாரட்லெட் செய்யும் குறும்பை பார்க்கவும்




இறந்து போவதாக வேடிக்கைக் காட்டும் சன் கனூர் வகை கிளி



மிக புத்திசாலியான ஆப்ரிகன் க்ரே வகை கிளிகள். சுமார் 300 வார்த்தைகள் வரை அதன் அர்த்ததுடன் புரிந்து கொள்ளும்


கீழே உள்ளது நம் இந்திய பச்சைகிளிகள். இவைகளும் பாசகார பசங்கதான்.


கீழே அமேசான் என்ற தென் அமெரிக்க கிளி ஒன்று கால்கரியில் ஒரு செல்ல ப்ராணிகளை விற்கும் கடையில் என்னைப் பார்த்து "hai guy.. " என அழைத்தது. கையில் எடுத்து தலையை தடவியவுடன் வீட்டிற்கு அழைத்து போ என் ஏக்கத்துடன் பார்த்தது. அதன் விலையைப் பார்த்து நானும் ஏக்கத்துடன் விட்டு விட்டு வந்துவிட்டேன் . அதன் விலை சுமார் $2000.

மடியில் குழந்தையை போல் கொஞ்சி விளையாடும் காக்கடூ வகை கிளிகள்









Sunday, December 09, 2007

ஜெனிபர் என் உற்ற தோழி.......

கடந்த ஒரு மாதமாக பல நகரங்களுக்கு சுற்றுலா. எல்லாம் தொழில் நிமித்தம்தான். கால்கரி போன்ற சின்ன ஊரில் குடும்பம் இருந்ததால் ஜெனிபரின் தேவை அவசியமில்லாமல் இருந்தது. அமெரிக்காவில் தன்னந்தனியே கும்மிருட்டில், பெரும்பாலும் இரவு நேரங்களில் ஜெனிபர் இல்லாமல் வழி தெரியவில்லை. ஜெனிபர் என் உற்ற தோழி, என் வழிகாட்டி, என் வயிற்று பசிக்கு வழிகாட்டுபவள், என் தேவைகளை வாங்க கடைகளுக்கு அழைத்து செல்வாள், பொழுது போக்க போதை ஏற்ற என பல இடங்களுக்கு வழிகாட்டுவாள். காலையில் சரியாக அலுவலகம் அனுப்பி ஆபிஸில் நல்ல பெயர் வாங்க வைப்பாள்.







என்னடா அமெரிக்காவில் வெள்ளைகாரியை செட்டப் செய்துவிட்டானா இந்த பாழாய் போன கால்கரி என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல..



இதோ என் ஜெனிபர்.......









இந்த ஜிபிஎஸ் தாங்க என் வழிகாட்டி. இதை காரில் பொறுத்தி ஏர்போர்ட்டிலிருந்து எந்த இடியாப்ப மேம்பாலத்தில் ஏறுவது என்ற கவலை வேண்டாம். வலது புறத்தில் 4 மைல் போய் திரும்பு, இடது புறம் ஆறாவது மைலில் இரண்டாம் தெருவில் திரும்பு சிறிது தூரம் போ வலபுறத்தில் பார் உன் ஓட்டல் என வழி சொல்லும்.

சரி பசியாக இருக்கிறதா ஜெனிபர் 5 மைல் சுற்றுவட்டாரத்தில் என்னன்ன ஓட்டல்கள் உள்ளன என்றால் ஜெனிபர் கபால் எனக் காட்டிவிடுவாள். இந்திய ஓட்டல்கள், இந்திய பலசரக்கு கடைகள், பெட்ரோ பங்குகள், ஏடிஎம் கள், சாப்பிங் சென்டர்கள், ஆஸ்பத்திரி, பார்க்கிங்கள் என சகலத்தையும் காட்டிவிடுவாள். இந்த விலாசத்திற்கு போக எந்த வழியில் போனால் சீக்கிரம் போகலாம், எந்த வழி மிக கம்மியான தூரம் என சொல்லுவாள். எந்த ரோட்டில் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள், எந்த வழியில் ட்ராபிக் அதிகம் என்பதையும் சொல்லுவாள், எந்த திசையில் பயணிக்கிறோம் எத்தனை வேகத்தில் பயணிக்கிறோம், எத்தனை மணிக்கு போய் சேருவோம் என்பதையும் சொல்லுவாள். எம்பி3 பாடல்களை இசைப்பாள், ப்ளூடூட்ல் உங்கள் போனை எடுப்பாள். மிக பெரிய நகரங்களில் கார் எந்த பார்க்கிங்கில் உள்ளது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்வாள்.

மொத்தத்தில் உற்ற தோழி இந்த ஜெனிபர்...

இந்த ஜிபிஎஸ் பிரயாணிகளுக்கு ஒரு வரப்ரசாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில்.

என்னங்க இந்த கிறிஸ்துமஸ் பர்சேஸ் ஜிபிஎஸ் தானே


Sunday, December 02, 2007

புஷ் பேட்டையில் கால்கரி

தந்தைக்கோ வயது 83. போரில் வெற்றிவாகை சூடி எதிரியை ஓட ஓட விரட்டியவர். இந்த வயதிலும் வானத்திலிருந்து பாராசூட்டில் குதிப்பதென்ன? ஓடியாடி வேலைப் பார்பதென்ன பேட்டி அளிப்பதென்ன..தனயனோ... அஞ்சா நெஞ்சன் எதிரிகளின் சிம்ம சொப்பனம்...எதிரிகளை வேட்டையாடி துவம்சம் செய்தவர். இவ்வீரமிக்க தலைவர்களின் ஊரான ஹூஸ்டனில் கால்கரியின் மாபெரும் பதிவாளாராகிய நான் வந்ததில் பெருமை அடைகிறேன்.

அடுத்த ஒரு வருடம் இங்குதான் வாழ்க்கை. என்னை வரவேற்க பெரிய புஷ் ஏர்போர்ட்டில் காத்திருந்தார் :)



நீங்க ஹூஸ்டனுக்கு வந்தாலும் உங்களையும் வரவேற்பார். பெரிய புஷ்ஷின் சிலை இங்கே உள்ளது.


கால்கரியில் -25 டிகிரி சி இங்கே +25 அருமையாக உள்ளது. அருமை..


பல மாதங்களாக வலைப்பதிவில் எழுத முடியவில்லை. அதனால் யாருக்கும் நஷ்டமில்லை யாரும் வருந்தவும் இல்லை. சில விஷயங்கள் என்னை வருத்தின.


கடந்த வருடங்களில் நான் எழுதிய அரேபிய அனுபவங்களில் நம் இந்திய உழைப்பாளிகளின் அவல நிலையை சொல்லியிருந்தேன். அதற்கு காரணமான அரபு நாட்டினரை ஏசியும் இருந்தேன். அவர்களின் அடிமை காலசாரத்தை சாடியுமிருந்தேன். அதற்கு பல முனை தாக்குதல் எனக்கு இணைய இஸ்லாமிஸ்ட்களிடமிருந்து வந்தன. உழைப்பவரின் வேர்வை தரையில் சிந்துமுன் ஊதியம் வழங்கும் உன்னத குடியினர் அரேபியர் என தங்களது எஜமானரை தாங்கியவரும் உண்டு.


ஆனால் நடப்பது என்ன?


தினம் தினம் இந்தியர்/தமிழர் இவர்களின் துயர செய்திகள், தற்கொலை செய்திகள், சம்பளம் தரவில்லை, உழைக்கும் இடத்தில் சேப்டி இல்லை. தொழிலாளர் போராட்டம் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்திய அரசாங்கத்திற்கோ அரபு அரசாங்களை கண்டிக்கும் மன தைரியமில்லை.


அரபுகளை வக்கலாத்து வாங்கியவர்கள் காணவில்லை. உழைப்பாளிகள் என்றதும் ஓடிவரும் சமூகநீதி காவலர்கள் எங்கே போனார்கள்.. ஐயா வாங்கய்யா எல்லாரும் சேர்ந்து கண்டிக்கலாம் அரபு அடிமை கலாசாரத்தை எதிர்க்கலாம்.



அடுத்து என்னை பாதிக்க வைத்தது. மலேஷிய இந்துகளின் போராட்டம். அவர்கள் இந்துகள் அல்ல தமிழர்கள் என சில வெண்தாடி வேஸ்ட்டின் சிஷ்ய கோடிகள் கூக்குரல் இடுகின்றனர்.


அமைதி மார்க்கத்தினரின் வாடிக்கை இதுதான். முதலில் சமூதாயத்தின் கீழ்தட்டில் இருக்கும் மக்களை அடிமை படுத்துவர்கள். மேல்தட்டில் உள்ள அறிவாளிகளான இந்துகளை பகைத்துக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் அவர்க்ளின் தயவு மலேஷியற்கு தேவை. பிறகு மெதுவாக மொத்தமாக எல்லாரையும் அரபு அடிமையாக்குவர். இது சரித்திரம் சொல்லும் உண்மை.


அங்கே மைனாரிட்டிகளின் வழிபாடு தளங்கள் தினம் தினம் இடிக்கபடுகின்றன. மலேஷியாவில் நடப்பது மைனாரிட்டி அடக்குமுறை. இதை இந்திய மைனாரிட்டிகள் உட்பட அனைவரும் எதிர்க்க வேண்டும்.


புஷ்பேட்டையிலிருந்து கால்கரி

Monday, June 04, 2007

எண்ணை வற்றிவிடுமா?

இதோ வந்துவிட்டேன் மீண்டும் எண்ணை மேல் அப்ஷசன் கொண்டுள்ள நான். இன்னும் 40 வருடம் தான், இன்னும் 100 வருடம்தான் பிறகு எண்ணை வற்றிவிடும் என சில பேர் பய முறுத்திக் கொண்டே இருப்பார்கள். மேலும் சிலர் இப்போது எண்ணை உற்பத்தி அதி உயரத்தில் இருக்கிறது இனிமேல் எண்ணை உற்பத்தி இறங்கியாக வேண்டும். அவ்வாறு உற்பத்தி இறங்கினால் எண்ணை விலை பீப்பாய்க்கு $150 க்கு மேல் உயரும். உலக பொருளாதாரம் சீரழியும் என பயமுறுத்துவார்கள். எப்படியிருந்தாலும் அரபு நாடுகள் பணக்காரர்களாக இருப்பார்கள். அதை வைத்துக் கொண்டு உலகை ஆளுவார்கள் என சில இஸ்லாமிஸ்டுகள் கனவுலகில் மிதப்பார்கள்.

ஆனால் மேற்குலகில் மாற்று ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்கள். எலட்ரிக் கார்கள், ஹைட்ரஜன் கார்கள், பயோ டீசல் என ஆரவாரத்துடன் ஆராய்சிகள் செய்பவர்கள் ஒரு பக்கம். அமைதியாக நிலத்தடியில் இருக்கும் எண்ணையை தேடி அலைபவர்கள் இன்னொரு பக்கம்.

அமெரிக்காவின் அலாஸ்காவிலும், ரஸ்யாவின் சைபீரியாவிலும், கனடாவின் வட மாநிலங்களிலும் உள்ள எண்ணைவளம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு போதுமானது, அந்த உறைபனியிலிருந்து எண்ணை எடுக்கும் தொழில் நுட்பம் கடந்த பத்து ஆண்டுகளில் நேர்த்தி செய்யப் பட்டுவிட்டன. உலக கூட்டு களவாணிகளான ஓபெக் நாடுகளின் பிடியிலிருந்து உலக எண்ணை விலை இன்னும் சில ஆண்டுகளில் விடுதலை பெறும். பிறகு இக்கூட்டு களவாணிகள் அமெரிக்க/சீன/இந்திய நாடுகளின் நுகர்வை நம்ப வேண்டியிருக்கும்.

கடந்த முப்பது வருடங்களாக கிடப்பில் போட பட்டிருந்த ஒரு பகுதியை அமெரிக்க கம்பெனிகள் மீண்டும் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் வடமேற்கில் இருக்கும் ராக்கி மலைகள் உள்ள கொலராடோவும் யுடாவும் (உச்சரிப்பு சரியா?) தான் அந்த பகுதி. ராக்கி மலைகளின் அடியில் உள்ள சுண்ணாம்பு கற்களில் எண்ணை உள்ளது. இந்த எண்ணையை எடுக்க அமெரிக்க கம்பெனிகள் கடந்த சில ஆண்டுகளாக பற்பல ஆராய்ச்சிகளை மேற்க் கொண்டுள்ளன. இந்த கற்களை சூடாக்கி எண்ணையை எடுப்பதா, இல்லை வேதிப் பொருட்களைக் கொண்டு எண்ணையை எடுப்பதா என சில ஆராய்ச்சிகள் நடக்கின்றன. 2005ல் இங்கிருந்து எண்ணை எடுக்க ஆகும் செலவு பீப்பாய்க்கு $70 என இருந்தது. இதை எப்படியும் $30 க்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதில் ஓரளவிற்கு ஷெல் (Shell) வெற்றியும் பெற்றுவிட்டது. ஆராய்ச்சி சாலையில் பெற்ற வெற்றி வணிக படுத்த இன்னும் 5 முதல் பத்து வருடங்கள் ஆகும். பிறகு அமெரிக்கா எண்ணை இறக்குமதியை அடியோடு நிறுத்தி எண்ணை ஏற்றுமதியை ஆரம்பிக்கும் !!!!.

அது சரி ஏன் தீடிரென்று இந்த பதிவென்று பார்ர்கிறீர்களா?

இந்த இரு மாநிலங்களில் உள்ள எண்ணையின் அளவு, கூட்டுகளவாணிகளான ஓபெக் நாடுகளின் மொத்த எண்ணை வளத்தை விட மிக அதிகம் :)

Wednesday, May 02, 2007

நீமோவின் துணை(வன்)(வி)

எங்கள் நீமோவிற்கு துணையாக ரமோ வீட்டிற்கு வந்தாகிவிட்டது. ரமோ 21/2 மாதக் குழந்தை. இன்னும் ஒரு ஆணிற்குறிய அடையாளங்களை காட்டவில்லை. பெண்ணாக இருக்க வாய்ப்புகள் அதிகம். பெண்ணாக இருந்தால் நீமோவின் தோழி, ஆணாக இருந்தால் தோழன்.

மரகதமும் வெண்மையும் பழுப்பும் கலந்த கலவை ரமோ. பயங்கர சுட்டி.
ரமோ வந்ததிலிருந்து நீமோ ஒரு சவலைக் குழந்தைபோல் இருக்கிறது. ரமோவிடம் பேசக்கூடாது, ரமோவை தூக்க கூடாது என்ற ஒரே அலம்பல் மற்றும் அடம் பிடிக்கிறது.

நீமோ மற்றும் ரமோ இவைகளுடன் வாழ்க்கை சுவாரசியமாய் உள்ளது.