Thursday, February 14, 2008

Bourbon Street ல் கையெறி குண்டு.

சில ஊர்களில் சில தெருக்கள் மிக பேமஸ் ஆக இருக்கும். மதுரையில் டவுன்ஹால் ரோடு, சென்னையில் ரெங்கநாதன் தெரு, பெங்களூரில் பிரிகேட் ரோடு.

இந்த மாதிரி தெருக்களில் போய் சாப்பிங் செய்வதும், பார்ட்டி செய்வதும் ஒரு காலத்தில் பெருமையாக இருந்தது.

இந்த வகையில் அமெரிக்காவின் கட்ரீனா புகழ் நியூஆர்லியன்ஸின் Bourbon Street.

இந்த தெரு மிகவும் நெரிசலான தெரு. பார்க்க படம்.















ஆனால் இங்குதான் அமெரிக்காவின் சிறந்த கடலுணவு கூடங்களும் மதுபான கூடங்களும் நிர்வாண நடன விடுதிகளும் நிறைந்துள்ளன.

மதுரையில் நான் வாழ்ந்த காலங்களில் எங்கள் தெருவிலிருந்த சண்டியர்கள் ஏதாவது பண்டிகை வந்துவிட்டால். தண்ணியடித்து விட்டு சலம்புவர்கள். முக்கியமாக சலம்பும் பண்டிகை காமன் பண்டிகை என்ற காமாண்டி பண்டிகை. இதில் ரதி மன்மதன் வேடமிட்டு இருவர் வெள்ளையானையில்(மிக பெரிய பொம்மை யானை) ஊர்வலம் வர, சிவன் இவர்களை எரிக்க, பிறகு உயிர் கொடுக்க என நாடகங்கள் நடைபெறும். இதில் எரிந்த கட்சி எரியாத கட்சி என தகறாறு வந்து அடிதடியில் முடியும்.

இந்த பண்டிகையின் போது எங்கள் தெரு சண்டியர்கள் ஜிஞ்சர் என்ற மதுபானத்தை அருந்துவார்கள். அது பார்பதற்கு டெட்டால் மாதிரி இருக்கும், தண்ணீர் உற்றியதும் டெட்டால் மாதிரியே பால் போல் மாறிவிடும். மதுவிலக்கு காலங்களில் அவர்கள் மது அருந்துவதை பார்ப்பதே படு டென்ஷன் ஆக இருக்கும்.

அந்த ஜிஞ்சரை மூக்கை மூடிக் கொண்டு, (முகர்ந்து பார்க்கும் படி அவ்வளவு நல்ல மணம் கொண்ட பானம் அல்ல அது) ஒரே மடக்காக வாயில் ஊற்று ஒரு ஊருகாய் அல்லது மட்டன் துண்டை வாயில் அமுக்குவர். என் மானசீக ஹீரோ கோவிந்து வாழைப்பழத்தை வாயில் அமுக்குவான்.

சிறிது நேரம் அமைதி அப்புறம் ஜாலிதான் அவர்கள் செய்யும் சேட்டைகள் தாங்க முடியாது. வேட்டி அவிழ கால்கள் தடுமாறி வாயில் கெட்ட வார்த்தைகள் கொட்ட சலம்பல் அட்டகாசம்தான். இவர்கள் செய்ததை வடிவேலு திரையில் நகைச்சுவையாக செய்து கோடிக்கணக்கில் காசு பார்த்துவிட்டார்.



நான் சிறுவனாக இருந்ததால் எனக்கு ஜிஞ்சர் அடிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. சிலவருடங்களுக்கு முன் கோவிந்தை மதுரை தெற்குமாசி வீதி ஒரு டீ கடையில் சந்தித்து ஒரு பாட்டில் ஜிஞ்சர் கேட்டேன். அவன் ஒரு முனிவர் ரேஞ்சுக்கு அட்வைஸ் செய்துவிட்டு போய்விட்டான்.


சரி Bourbon Street க்கு வருவோம். மதுரையின் காமண்டி போலவே இங்கும் Mardi Gras என்ற பண்டிகை உண்டு. இந்த பண்டிகையைப் பற்றி கூகுள்/ விக்கிபீடியாவைப் பார்த்து அதன் சரித்திரம் பாரம்பரியம் போன்றவைகளை தெரிந்து கொள்ளலாம்.


நான் சந்தித்த ஒரு எலக்டிரிஷியன், வெள்ளைக்காரர் மிக பெரிய உருவம் கொண்டவர். அவரிடம் "ஏனையா மார்டி கிரா கொண்டாடுகிறீர்கள்?" என கேட்டேன். அவரும் "ஆஷ் வெட்னஸ்டே முதல் நாங்கள் விரதம் இருப்போம் அதற்கு முன் ஆசை தீர குடித்து கும்மாளாம் அடிப்பதுதான் மார்டி கிரா" என ஒரு போடு போட்டார். "ஐயா தாங்கள் எப்படி விரதமெல்லாம்...." என்று தயங்கிய வாறு அவருடைய மாபெரும் தொப்பையை பார்த்துக் கொண்டே கேட்டேன். அவர் அந்த மாபெரும் தொப்பை குலுங்க குலுங்க சிரித்தார். "விரதமெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயத்துக்குதான் என்னால் சாப்பிடாமல் இருக்குமுடியாது "என்றார்



அதுசரிஅதுக்கென்ன இப்போ என்கிறீங்களா. இந்த மார்டி கிரா ஆரம்பிப்பதற்கு முன் ஒருவாரமும் முடிந்த மறுநாளிலிருந்து நாளை வரையில் நான் இங்கிருக்கிறேன்.........




டவுன்ஹால் ரோடில் நடக்கும் போது அங்கு ஜவுளிகடைகளும் பேன்ஸி ஸ்டோர்களும் எலக்ட்ரானிக் சாமான் விற்கும் கடைகளும் கொட்டிக் கிடக்கும். இவற்றிற்கு நடுவே சில சாப்பாடு கடைகளும் உண்டு. டில்லிவாலா என்ற ஒரு குட்டி ரெஸ்டாரண்ட். இங்கே ஸ்வீட்களும் அதை விட்டால் பூரி மற்றும் சப்பாத்தி மட்டும் கிடைக்கும். செண்ட்ரல் டாக்கீஸ் அருகில் இந்த பக்கம் இருக்கும் கரும்பு ஜூஸ் கடையும் அந்த பக்கம் பாப்ளி ப்ரதர்ஸ் பக்கத்தில் இருக்கும் காபி கடையும் பிரபலம். மேலும் இரயில் நிலையத்தை நோக்கி நகரும் போது தாஜ் பிரியாணி, காலேஜ் ஹவுஸ் கடைசியாக ரீகல் தியேட்டர் எதிரில் சூப்பர் ஹீட்டட் டீயும் சமோசாவும் விற்கும் ஜம்ஜம் டீ ஸ்டாலும் பேமஸ்.



Bourbon Streetல் அனைத்து கட்டிடங்களும் ரெஸ்டாரண்ட், பார், நிர்வாண நடனகூடம் மற்றும் பரிசு பொருட்கள் விற்கும் கடைகள்தான். விநோதமாக பிள்ளையார் சிலைகளயும் இங்கே விற்கிறார்கள். பிள்ளையார் மட்டுமல்ல மேரிமாதா, இயேசு நாதர் சிலைகள், சிலுவைகள் யூதர்களின் நட்சத்திரங்கள், புத்தர் சிலைகள், மெக்கா படங்களையும் விற்கிறார்கள். மக்கள் பாவங்களை செய்துவிட்டு பாவமன்னிப்பையும் கையோடு வாங்கிக் கொண்டு போகிறார்கள் :)












இந்த தெருவில் மிக அதிக அளவில் கடலுணவு கூடங்கள் உள்ளன. இங்கு சிப்பிகளை(Oysters) பிளந்து உள்ளே இருப்பதை பச்சையாகவும் சாப்பிடுகிறார்கள் சமைத்தும் சாப்பிடுகிறார்கள். முதலைகறி, ஆமை சூப் ஆகியவையும் மிக பேமஸ். பார்க்க மெனுகார்ட்























































அடிக்கடி கையெறி குண்டுகளைப் பற்றியும் சூறாவளிக்காற்றை பற்றியும் அந்த தெருவில் பேச்சுவந்தது. இங்கே அடிக்கடி சூறாவளி புயல் அடிப்பதால் அதைப்பற்றி பேசுகிறார்கள் போலிருக்கிறது என கவனியாமல் நான் கண்ணும் கருத்துமை சிப்பிகளையும், முதலை வாலையும் ஆமை கறியையும் அங்கே பிரபலமான கிரா பிஷ் என்ற நன்னீர் இறாலையும் சாப்பிட்டுக் கொண்டிடுந்தேன். கடல் உணவு நாற்றம் எனக்கு பிடிப்பதில்லை ஆனால் நியூ ஆர்லியன்ஸில் சற்றும் நாறாமல் சமைக்கிறார்கள். அவர்களின் பாரம்பரிய கேஜன் (Cajun) சமையல் முறை அற்புதம்.









கிராபிஷ் என்னும் நன்னீர் இறால் :











ஹார்ட் ராக் கஃபே என்னும் புகழ்மிக்க ரெஸ்டாரண்டில் ஒரு குசும்புதனமான எச்சரிக்கை இதோ:















சாப்பாட்டிற்கு பின் இசை. ஜாஸ் இசையின் தலைமை செயலகம் நியூ ஆர்லியன்ஸ். இங்கிருக்கும் அனைத்து மக்களின் இரத்தத்தில் இசை ஊறி ததும்புகிறது. நெஞ்சை உறுக்கும் இசையும் உண்டு உற்சாகமாக ஆட கேஜன் இசையும் உண்டு. இளைஞர்கள் ஆட்டம் போட அட்டகாசமான இசையும் உண்டு. எங்கும் இசை கலைஞர்கள். மெலிதான வெளிச்சத்தில் சீமான்களும் சீமாட்டிகளும் மெதுவாக ஆட ஐந்து நட்சத்திர கலைஞர்கள் இசைக்கிறறர்கள்.



தெருவில் அட்டகாசமாக இசைப்பாடி பிச்சையெடுக்கும் இசை கலைஞர்கள். வெறும் பிளாஸ்டிக் வாளிகளை கவிழ்த்து போட்டு அற்புதமாக இசைக்கும் ட்ரம்மர்கள். இரவு பத்திற்கு மேல் ம்யூசிக் மற்றும் நடனம் தான். அது தெருவாக இருக்கட்டும் ஐந்து நட்சத்திர ஓட்டலாக இருக்கட்டும்.



















நானும் என் கூட வந்த இரண்டு நண்பர்களும் வயிறு முட்ட உண்டு Bourbon Street ல் நடக்க ஆரம்பித்தோம்.



மீண்டும் Hurricane பற்றியும் Hand grenade பற்றியும் பேச்சு வந்தது, "யோவ் என்னப்பா அது எனக்கு புரியல என்றேன். அவர்கள் சிவா நீ சுத்த மண்டு நியூ ஆர்லியன்ஸ் வந்து இரண்டு நாளகிறது இன்னும் இந்த இரண்டைப் பற்றி தெரிந்து கொள்ளாத நீ மண்டுதான்பா என்றார்கள். "




ஐயா, என்னது அது?" என ஜிஞ்சர் அடிக்காத கோவிந்து போல் திணறினேன்.
ஹரிகேன் என்பதும் ஹாண்ட் கிரனெட் என்பதும் Bourbon Street ன் ப்ரேத்யேக மதுபான கலக்கல்கள் (Cocktails)!.





ஆ..ஆ... முதலில் ஒரு சூறாவளிக்கற்றை விழுங்குவோம் என வாங்கி நான் பாதி சூறாவளியை அடிப்பதற்குள் என் நண்பர்கள் இரண்டு சூறாவளியை தாக்கியிருந்தார்கள்.




சூறாவளியை கடந்து நடந்து கையெறிகுண்டு கடைக்கு வந்துவிட்டோம். அங்கே நான் ஒரு கையெறி குண்டை என் வயிற்றில் எறிவதற்கு முன் என் நண்பர்கள் ஆளுக்கு இரண்டு வீசி இருந்தார்கள்.




கையெறி குண்டு விற்கும் சாரய கடை :)









சூறாவளியாலும் கையெறி குண்டாலும் தாக்குண்டு தடுமாறி கொண்டிருக்கும் போது...

மதுரை டவுன்ஹால் ரோடில் ஒரு கரும்பு சாற்றை அருந்திவிட்டு திரும்பும் போது ஒரு கிராமத்து பெண்மணி கையில் ஒரு கூடையும் ஒரு கோலும் வைத்து "தம்பி சோசியம் பாருய்யா.. நாலணா தான்யா" என்றார். என் கையைப் பார்த்து " ஐயா இருபத்தஞ்சி வருசம் கழிச்சி கடலடிக்கடியிலே இருக்கிற ஒரு ஊருக்கு போவே. அங்கே பத்திரமா இருய்யா. உன் நண்பர்கள் இரண்டு பேரை தாங்கணும்யா நீ" என்றார். கடலக்கடியில் ஊரா...

நியூ ஆர்லியன்ஸ் கடல் மட்டத்திற்கு கீழ் உள்ளது. நான் சென்றிருந்த ஒரு தொழிற்சாலையும் ஒரு மாபெரும் கால்வாய் (Canal) பக்கத்தில் இருந்தது. தண்ணீர் மட்டும் தொழிற்சாலையை விட உயரத்தில் இருந்தது. அதில் சரக்கு கப்பல்கள் போய் கொண்டிருந்தன. கட்ரீனா வந்த பிறகு அந்த கால்வாயின் கரையை உயர்த்திருக்கிறார்கள்

பார்க்க படம் :



என் நண்பரைப் பார்த்து அரைகுறை ஆடை அணிந்த ஒரு கிழவி என் நண்பரிடம் வந்து "சோசியம் பார்க்கலையா..... சோசியம்" என ஆங்கிலத்தில் கேட்டார்.


அந்த கிழவியை ஜொள்ளிய என் நண்பர் அவளிடம் $20ஐ தந்து சொல் என்று சாமி ஆட ஆரம்பித்தார். அவர் அருந்தி இருந்தது பருத்த பிருஷ்டங்களை கொண்டவர்கள் அருந்தும் பியர்





















அந்த சூனிய கார கிழவியும் எதோ ஒரு கார்டை உருவி பார்த்து "உன் மனைவி இறந்து விடுவாள்" என் நண்பனிடம் சொல்லவும் எற்கனவே இரண்டு கையெறி குண்டை எறிந்தவன் ஓ..... என ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டான். "யோவ் இருய்யா கொஞ்சம் விவரமா கேட்போம்" என சொல்லி அந்த சூனிய காரியிடம்


"ஆத்தா இப்படி வா... இந்தாளாடோ பொண்டாட்டி எப்ப சவாள்" என கேட்டேன். அதை கேட்ட என் நண்பர் "என் பொண்டாட்டி எப்போ சாவாள் என சாவகசமா கேட்கிறீயே சிவா உனக்கு மனிதாபிமானமே கிடையாதா" என தன் ஒப்பாரியை பெரிதாக்கினார்.

அவருக்கு இன்னொரு சூறாவளியை அடித்துவிட்டு. ....


சூனிய காரியின் பக்கம் திரும்பினால் அவள் சாமியாடி கொண்டிருந்தாள்.

என்னைப் பார்த்து "டேய் பாபி ஜிந்தால் (பாபி ஜிந்தால் லூசியானா மாநில கவர்னர் அதாவது முதல்வர். ஒரு இந்திய வம்சாவளி அமெரிக்கர். நான் இந்தியன் என்பதால் அந்த சூனியகாரி என்னை அவ்வாறு அழைத்தாள்) என் கிட்டேயவா" என சந்திரமுகி ரேஞ்சுக்கு முகத்தை அஷ்ட கோணலாக்கினாள். நானும் சளைக்கமால் " என் நண்பரின் பொண்டாட்டி எப்ப சாவான்னு டேட் சொல்லு மே நான் உன் கையைப் பார்த்து நீ எப்ப சாவேன்னு டேட் சொல்றேன் சவாலுக்கு ரெடியா " என்றேன்.


இதைப்பார்த்து கொண்டிருந்த அங்கே கையெறிகுண்டை வீசி கொண்டிருந்த அமெரிக்கர்கள் கைதட்டி உற்சாகபடுத்தினார்கள்.....


அதற்குள் பாரில் இருந்த பார் டெண்டர்கள் அந்த சூனிய காரியையும் எங்களயும் வெளியேற்றினார்கள்.


என் நண்பரின் அழுகை அதிகமாயிருந்தது. அந்த அர்த்த ராத்திரியில் அவர் டோராண்டோ அருகே நியூமார்கெட்டில் இருக்கும் அவர் மனைவிக்கு போன் செய்ய அவர் மனைவி ஆஸ்பத்திரிக்கு போயிருப்பதாக தகவல் வந்திருந்தது. அவரை ஆசுவாசுபடுத்தி "உன் மனைவி என்ன வேலை பார்க்கிறார்" என்று கேட்டேன்.


அவர் மனைவி ஒரு டாக்டர். அன்று அவருக்கு நைட் டூட்டி ஆஸ்பத்திருக்கே போயிருக்கிறார் என்பதை அறிந்தேன். சூறாவளி தாக்கி கைகுண்டுகளை எறிந்தவரிடம் அதை புரியவைப்பதற்குள் எனக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.


. என்னை தாக்கிய சூறாவளிக்கு நான் எறிந்த கையெறிகுண்டுக்கும் வேலையே இல்லாமல் போய்விட்டது என என் ரூமுக்குள் நுழைந்தால் தலையில் அணுகுண்டு வெடிப்பது போல் இருந்தது. என் கையெறி குண்டு டேபிளில் சமர்த்தாக அமர்ந்த்ரிந்தது.

























அமெரிக்காவின் பாவ நகரங்கள் (Sin Cities) மூன்று. அவைகள் லாஸ் வேகாஸ், மையாமி மற்றும் நியூ ஆர்லியன்ஸ்.

லாஸ் வேகாஸில் பணக்காரர்களின் நகரம். செலப்ரட்டிகளும் பணக்காரர்களும் புழங்கும் இடம். இங்கே எனக்கு தாழ்வு மனபான்மை அதிகமானது.

மையாமியில் மக்கள் எந்த நேரத்திலும் முக்கால் அரைக்கால் நிர்வாணமாக இருக்கிறார்கள். நிர்வாணம் சில மணிநேரத்திற்குள் போரடித்து விட்டும்.

நியூ ஆர்லியன்ஸ் மட்டும் தான் கொண்டாடிகளின் தலைநகரம்...

பி.கு. சில படங்கள் கூகுளில் சுட்டவை. பல படங்கள் என்னிடமிருந்த மோசமான கைத்தொலைபேசி காமிராவில் எடுக்கப்பட்டவை.