Friday, December 29, 2006

இஞ்ஜூஸ் என்றால் என்ன?

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை உல்லாசமாக போய் கொண்டிருக்கின்றன.

ஒரு நாள் என் மகனின் நண்பர்கள் பட்டாளம் கூடி எங்கள் வீட்டில் ஒரு இளமை கொண்டாட்டம் நடந்தது. கூடியிருந்த கும்பலில் இந்தியர், சீனர், வெள்ளையர், யூதர் மற்றும் அரேபியர் இருந்தனர்.

அனைவரும் பேஸ்மெண்ட்டில் அமர்ந்து கோக் குடித்து (பீர் குடிக்கும் வயதை யாரும் நெருங்கவில்லை) பீட்ஸா சாப்பிட்டு போக்கர் ஆடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து டிவி சத்தம் பெரிதாக கேட்க அதை விட இந்த இளைஞர்/ஞிகள் சிரிப்பலை காதைக் கடித்தது.

என்ன அவ்வளவு சத்தம் என போய் பார்த்தால்

இஞ்ஜூஸ் என்றால் என்ன?

ஐஸ்க்யூப் என்றால் என்ன?

ஹாலோபீனோ என்றால் என்ன?

ஃப்ரீக் என்றால் என்ன?

என ஒருவர் விளக்கம் அளிக்க அதைக் கேட்டு இந்த இளைஞர்/ஞிகள் குபீர் என சிரித்தனர்.

நீங்களும் சிரிங்களேன்........


Thursday, December 21, 2006

கிறிஸ்துமஸ் சீசன்

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எனக்கு சிறிது அதிகமாகவே இருந்தன(லோக்கல் கலாசாரத்துடன் கலக்கிறேனோ என்னவோ). கடந்த 3 வாரத்தில் 10 பார்ட்டிகள். அதாவது இரண்டு நாளைக்கு ஒரு பார்ட்டி.

பேர்தான் கிறிஸ்துமஸ் பார்ட்டி. ஆனால் அங்கே சற்றும் மதச்சாயம் இல்லை.

பீப்பாய் பீப்பாய் களாக திராட்சை மதுவும் பீர்களும் குடிக்கப் பட்டன. மாடுகளும் கோழிகளும் உண்ணப்பட்டன. பரிசு பொருட்களும் வாழ்த்துகளும் பரிமாறபட்டன. புதுப்புது நண்பர்கள் என வட்டம் பெரிதாகியது.

நேற்றைக்கு CNN இல் After Jesus என்ற ஒரு இரண்டு மணிநேர ஆவணத் திரைப்படம் காட்டப்பட்டது. அதில் புதுப்புது செய்திகள் எனக்கு ஆச்சரியம் அளித்தது. கிருத்துவம் பரவ காரணமே யேசுவிற்கு பின்னால் வந்த அவரின் சீடர்களான பீட்டரும் மற்றும் அறிவுஜீவியான பால் என்பவரும் தான். என்பது மிக ஆச்சரியம்.

மேலும் சில ஆச்சரியங்கள்

1. சில முந்திய காலத்து கிறித்துவர்கள் பல கடவுளர்களை நம்பினார்கள்

2. பல கோஸ்பெல்கள் புதிய ஏற்பாட்டில் சேர்க்கவேவில்லை

3. கிறிஸ்துமஸ் ஒரு வசந்தகால விழாவாகதான் இருந்தது பின்னர் குளிர்கால விழாவாக மாறியது

4. க்நாஸ்டிக்ஸ் (The Gnostics) என்ற பிரிவினர் ஏதோ தெய்வகுற்றத்தால் தான் மனிதனுக்கு இந்த லெளகீக ஆசைகள் வந்துவிட்டன என நம்பினர். இதை அழிக்க ஒரே வழி மனிதன் தன்னைதானே அறிந்தும் தன்னுள் இருக்கும் தெய்வீகத்தையும் அறிவதுதான் என்பதே . (இது நம் இந்து வேதங்களிலும் உபநிடதங்களிலும் கூறப்பட்டுள்ள மையக்கருத்துக்கள்)

5. தத்தமது நம்பிக்கைகளை நிலைநாட்ட போர்கள், கொலைகள் கொள்ளைகள் நடந்தேறின முதல் 400 வருடங்களில்

6. முதல் நூற்றாண்டில் இருந்த அதே சந்தேகம் இன்னும் இருக்கிறது. அதாவது யேசு ஒருவர் இருந்தாரா அவர் இறந்து உயிர்த்தெழுந்தாரா என்பதே

இங்கே மக்கள் இந்தப் படத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை

இந்த ஆவணப்படம் இப்போது ஒளிப்பரப்பக் காரணம் பரபரப்பிற்குதான். இதேபோல் இந்தியாவில் ஒரு விழாக்காலத்தில் ஒரு மதக் காண்ட்ராவோர்ஷியல் ஆவணப்படம் திரையிடப்பட்டிருந்தால் இந்தியாவில் கலவரம் வெடித்திருக்கும்.
அரசியல்வாதிகள் முதல் சமூகநீதி காவலர்கள் வரை தொண்டைக் கிழிய கத்திருப்பார்கள்.

அந்தத் திரைப்பட தயாரிப்பாளர் தலைமறைவாகியிருப்பார்.

நாம் போகவேண்டிய தூரம் வெகுதூரம்....

Tuesday, December 19, 2006

ஈஸ்வர அல்லா தேரே நாம்

இன்று கூத்தாடி அவர்களின் பதிவில் ஒரு அனானிமஸ் ஒரு கவிதையை பின்னூட்டமிட்டிருந்தார்.

மிக நல்ல கவிதை அது.

யதார்த்தத்தை சுள்ளென்று உறையவைக்கும் கவிதை

அது பின்னூட்டத்தில் அமுங்கி போகலாமா?

அந்த கவிதையை முன் வைத்து இந்த பதிவு.

அனானிமஸ் அவர்களே உங்களுக்கு நன்றி.... நன்றி...நன்றி...


ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று
பெருங்குரலெடுத்துப் பாடி மகிழ்ந்திருப்போம்,
இணைவைத்த குற்றத்திற்காக நம்
குரல்வளை அறுக்கப்படும் நாள் வரும்வரை


Thursday, December 07, 2006

ஒரு இராணுவ வீரரின் பார்வை

நேற்றைக்கு என்னுடைய ப்ராஜெட்டில் ஒரு புது மெம்பர் சேர்ந்தார். இவர் கனேடிய பொறியாளர். இராணுவத்தில் பணியாற்றிவிட்டு டிஸ்சார்ஜ் பெற்றுக் கொண்டு சிவிலியன் வாழ்க்கைற்கு திரும்பியுள்ளார். அவரின் முதல் சிவில் வேலை இது. மனிதர் கடோத்கஜனை போன்ற உடலுடனும் தீர்க்கமான பார்வையுடன், பொடியாக முடிவெட்டி இன்னும் இராணுவ வீரன் போல் காட்சிய்ளிக்கிறார். சமீபத்தில் ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தஹாரில் பணிபுரிந்துள்ளார். அவருடன் மதிய உணவு உட்கொள்ளும் போது நடந்த விவாதத்தில் ஒரு பகுதி. இவருடை பெயரை பீட் (Pete) என்று வைத்துக் கொள்வோம்:

நான் : ஆப்கானிஸ்தானில் அநாவசியமாக் நம் படைவீரர்கள் மடிகிறார்கள். (இங்கே நம் என்று என்னை பீட்டுடன் கனேடிய அடையாளம் காணுகிறேன்)

பீட் : மரணம் என்பது எல்லாருக்கும் நிச்சயம். படை வீரர்களுக்கு அது மிக நிச்சயம். அந்த மன்பான்மை இருந்தால் தான் படை வீரானாக இருக்க முடியும்.

நான் : நான் சொல்லவருவது என்னவென்றால் பீட், நம் படைவீரர்கள் நம் நாட்டை காக்க மடிந்தால் அதற்கு அர்த்தம் இருக்கிறது ஆனால் எங்கோ இருக்கும் அப்கானிஸ்தானில் போய்....

பீட் : சிவா நீ மிக குறுகிய நோக்கில் பார்க்கிறாய். நாம் அங்கே போனது ஒரு சர்வதேச உடன்படிக்கையில் ஒரு பயங்கரமான தீவிரவாதியை பிடிக்க. தீவிரவாதி ஓடி ஒளிந்துவிட்டான் அவனை நம்பிய மக்களை அம்போ என்று விட்டு விட்டு. நாம் திரும்பி வந்துவிட்டால் அவன் திரும்ப வருவான். அவனைப் பிடித்த பின்னால் உடனே நாம் திரும்பிவிட்டால் அதுவும் தவறு. சோவியத் ஆப்கானிஸ்தானை விட்டவுடன் நாம் திரும்பியது எவ்வளவு தவறு. ஒரு தீவிரவாத சமுதாயத்தை அல்லவா உருவாக்கிவிட்டோம். அந்த பாவத்திற்கு ப்ராயசித்தம் செய்ய வேண்டும்.

அங்கே பிறந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களுக்கு நல்ல கல்வி, சுகாதாரம், மருத்துவ வசதிகள் ஆகியவற்றை அளிக்கவேண்டும். அவர்களை நல்ல மனிதராக ஆக்கி உலகில் தலை நிமிர்ந்து நடக்க வைக்கவேண்டும். அதற்கு 50/60 ஆண்டுகள் ஆகலாம்.

கல்வி ஒன்றே இந்த காலத்தில் முன்னேற வழிவகுக்கும்.

இயற்கை வளங்கள் அதிகம் இல்லாத உன் தேசம் வளரவில்லையா. மிக சிலர் மேற்கத்திய கல்வி மற்றும் விஞ்ஞானம் கற்றார்கள் முதலில். அவர்கள் நன்றாக வாழ்வதைப் பார்த்து மேலும் பலர் கல்வி கற்க முன் வந்தனர். உங்கள் நாட்டில் கல்வி கூடங்களில் இடம் கேட்டு போரட்டங்கள் நடப்பதைப் பார்த்து நான் பெருமை அடைகிறேன். (மிக விவரமான படைவீரர். நம் நாட்டின் ரிசர்வேஷன் பாலிஸி முதல் சாதி பிரிவுகள் வரை இவருக்கு தெரிகிறது). அவ்வாறு போரடுபவர் நிச்சயமாக முன்னேறுவர்.

ஆப்கானிஸ்தானில் கல்வி கற்றவர்கள் இல்லை. அங்கே கல்வி கற்று நல்ல வாழ்வு வாழியில்லாமல் கற்றவர்கள் வேறு இடத்திற்கு போய் விட்டார்கள். அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வியின் மதிப்பு தெரியவில்லை. என் போன்றவர்கள் துப்பாக்கி ஏந்தி தற்கொலை படையினரை கொல்வது மட்டும் எங்கள் வேலையில்லை மேலும் தற்கொலைப் படையினர் உருவாவதை தவிர்ப்பதும் எங்கள் வேலை. அதன் முதல் படியாக அந்த இளம் பிஞ்சுகளின் மனதில் கல்வி என்ற ஞானத்தை ஏற்றுவதுதான். இந்த வாழ்க்கை எவ்வளவு இனிமையானது. நிகழ்காலம் எவ்வளவு சிறந்தது என்பதை அவர்களுக்கு உணர்த்தினால் போதும். என்னால் ஒரு குழந்தை தற்கொலைப் படைவீரன் ஆவதை தவிர்க்க முடிந்திருந்தால் அதுவே நான் படைவீரனாய் பணியாற்றியதின் பெரிய பயன்.

நான் : அமெரிக்க இராணுவத்தில் வேலைக் கிடைக்காத ஒன்றுக்கும் உதவாத இளைஞர்கள் தான் உள்ளனர் என்ற பத்திரிக்கை/டிவி செய்திகள் உண்மையா?

பீட் : (பீட்டின் முகம் சிவக்கிறது) அமெரிக்க டாப்லாய்ட்கள் செய்யும் பரபரப்பு செய்தி இது. (டாப்லாய்ட் என்பது நம் ஜுனியர் விகடன், ந்க்கீரன் போன்ற பத்திரிக்கைகள்) நான் அமெரிக்க இராணுவத்தினருடன் மிக அதிகமாக வேலை செய்தவன். அவர்களின் நாட்டு பற்று என்னை வியக்க வைக்கிறது. அவர்களின் ஜனாதிபதி தவறு செய்கிறார் என் தெரிந்தும் அவர்கள் அளப்பறிய தியாகங்களை செய்கிறார்கள் . குள்ளநரிகள் எங்கும் இருக்கும் அந்த சதவீதம் மிக சிறிது. அது நம்முடைய இராணுவமாக இருக்கட்டும் அல்லது அமெரிக்க இராணுவமாக இருக்கட்டும். ஒருவருக்கு விருப்பமில்லையென்றால் அவர் இராணுவத்தில் சேர அவசியமில்லை. அரசாங்கம் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. இராணுவத்தில் சேருபவர்கள் அவர்கள் விரும்பியே சேருகிறார்கள்.

அந்த நேரத்தில் அந்த உணவகத்தில் ஆல்பெர்ட்டாவின் (நான் வசிக்கும் மாநிலம்) முன்னாள் முதலைமச்சர் ரால்ப் கிளெய்ன் நாங்கள் அமந்திருந்த மேஜைக்கு அடுத்த மேஜைக்கு வருகிறார்.

ரால்ப் கிளெய்ன் சில நாட்களுக்கு முன் முதலைமச்சர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். பீட் அவரிடம் சென்று தன்னை தானே அறிமுகம் செய்து கை குலுக்குகிறார். பிறகு என்னையும் அழைத்து ரால்ப் கிளெய்னிடம் அறிமுகப்படுத்தினார். நம் நாட்டில் முன்னாளோ இன்னாளோ என் போன்ற சாமனியர்கள் அருகில் போகதான் முடியுமா?

நான் : பீட் அங்கே மதபோதனைகளால் தான் மக்கள் மனம் மாறுகிறார்கள் என ஒரு கருத்து நிலவுகிறதே?

பீட் : சிவா... மனிதனுக்கு முதல் தேவை உணவு. அவன் பசி அடங்க எதையும் செய்வான். ஆப்கானில் உள்ள ஏழ்மையை இந்த அரபுகள் மதம் பக்கம் திருப்பி குளிர் காய்கின்றன. அதிகமான பணம் மூர்க்கனிடம் இருந்தால் அதுவும் ஆபத்தே.

உதாரண்மாக ஒசாமாவை எடுத்துக் கொள்வோம் அவன் ஏன் இன்னும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. உண்மையில் அவனுக்கு சொர்க்கம் கிடைக்கும் என நம்பிக்கை இருந்தால் சீக்கிரம் அங்கே போகலாமே. இங்கே என்ன வேலை. அவன் அனுப்பிய தற்கொலை படையினர் ஒன்றும் சும்மா வேலை செய்யவில்லை பணத்திற்காக தான். தான் அழிந்தும் தன் குடும்பத்தினர் வாழவேண்டும் என்ற தியாக மனபான்மையை மதம் என்னும் விஷம் கொடுத்து வ்ரவைத்தனர். மதம் மட்டுமே காரணம் என்றால் பணம் எதற்காக?. ஆப்கானில் சாகும் ஒவ்வொரு மனிதனுக்கும் பணம் தரப் படுகிறது. தற்கொலை என்பது ஒரு வியாதி. எத்தனைத் தற்கொலைப் படையினரை தடுத்து அவர்களுக்கு மருத்துவம் செய்து சரி செய்திருக்கிறோம் தெரியுமா உனக்கு?


இப்போது நாம் பேசியதை பதிவாக போடட்டுமா என கேட்டேன். ஓ தாரளமாக நான் ஆப்கானில் எடுத்த போட்டோ வேண்டுமா என்றான். இல்லை தேவை என்றால் எடுத்துக் கொள்கிறேன் என்றேன். பீட் என் டீமில் எனக்கு இணையாக வேலை செய்பவ்ர். அவர் என் பதிவுகளுக்கு அடிக்கடி தீனி போடுவார்

Wednesday, December 06, 2006

கடவுள்

இன்று காலை அலுவலகம் வரும்போது ரேடியோவில் கேட்ட ஒரு "இன்றைய நாள் நல்ல நாள்" என்ற டைப்பில் ஒரு துணுக்கு

அந்த துணுக்கு இதோ:


ஆசிரியை : என்ன படம் வரைந்து கொண்டிருக்கிறாய்.

குழந்தை : கடவுளின் படம்

ஆசிரியை : கடவுளை உருவகப் படுத்த முடியாது. இதுவரை கடவுளை கண்டவர் யாருமில்லை.

குழந்தை : ஓ.கே. ஒரு 5 நிமிடம் காத்திருங்கள் நான் வரைந்து முடிந்தவுடன் என்னுடைய படத்தில் கடவுளைக் காணலாம்


இந்த துணுக்கு என் மனதில் பல சிந்தனைகளை தூண்டிவிட்டது.

உங்களுக்கு...?

Friday, December 01, 2006

தமிழர்கள் மட்டும்தான் இப்படியா?

இன்றைய விகடனில் சுஜாதவின் கற்றதும் பெற்றதும் பகுதியில் அவருக்கு கெட்டவார்த்தையில் அவரது ஜாதியை திட்டி லெட்டர் வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

அடடே அவருக்கும் ஒரு போலியின் தொல்லை இருக்கா...

நானும் சில பப்ளிக் பாரும் (Forum) களில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். இந்தியா - பாகிஸ்தான், அமெரிக்க ஆதரவு-எதிர்ப்பு போன்ற தலைப்புகளில் பங்கு கொண்டிருக்கிறேன். இவைகள் சில இந்திய தளங்கள், சில மேல்நாட்டு தளங்கள், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தளமும் ஒன்று.

இந்த தளங்களில் விவாதங்கள் நடைபெற ஒரு இயங்ககூடிய மின்னஞ்சல் முகவரி தேவை. ஒரு முறை கூட தனி மனித தாக்குதலில் எனக்கு மின்னஞ்சல் வரவில்லை.

முட்டாள் என்றும், மதவெறிபிடித்தவன் என்றும், இந்திய தீவிரவாதி என்றும் பொதுவில் திட்டு வாங்கினதோடு சரி. இந்த திட்டு கூட பாகிஸ்தானிலிருந்து தான் வரும். இந்த விவாதங்களில் பங்கு கொண்ட அரேபியர்கள் கூட இந்த அளவிற்கு மோசமாக தனிமனித தாக்குதல் நடத்தியதில்லை.

இப்படி தனிமனித தாக்குதல் நடத்துவது சில தமிழர்கள் மட்டும்தானா அல்லது ஒரே ஒரு பைத்தியம் பிடித்த மனிதனா?

இந்த மாதிரி தனிமனித தாக்குதல் நடத்துவது சமீப காலமாகவா அல்லது கல் தோன்றா மண் தோன்றா காலத்திலிருந்தா?

தமிழர்கள் மட்டும் தான் இப்படியா?

அனுபவம் பெற்றவர்கள் பதில் சொன்னால் நன்றாயிருக்கும்