Thursday, March 03, 2011

தேங்காயும், முட்டையும் பின்னே வீணாய் போன கால் நூற்றாண்டும்

எனக்கு பிடித்த காய் என்னவென்று கேட்டால் தேங்காய் என டக்கென்று என்னிடமிருந்து பதில் வரும். இளநீர், வழுக்கை, முத்திய தேங்காய் போட்ட குழம்பு, தேங்காய் பால் இடியாப்பம், தேங்காய் துறுவலுடன் இடியாப்பம் மற்றும் புட்டு, தேங்காய் மிட்டாய், தேங்காய் குக்கி, தேங்காய் கேக், கொப்பரை தேங்காய் போட்ட மிக்சர், தேங்காய் எண்ணையில் வறுத்த நேந்திரங்கா சிப்ஸ், தேங்காய் எண்ணையில் வறுத்த சிக்கன் சிக்ஸ்டி பைவ், தேங்காய் போளி, தேங்காய் பன் (தில் பசஞ்த்), தேங்காய் மக்ரூன் இப்படி பல திண்பண்டங்கள் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயில் செய்தது எனக்கு உயிர்.


அதே போல் முட்டை. அவித்த முட்டை, முட்டை பால், முட்டை தோசை, முட்டை
குழம்பு, முட்டை குருமா, உடைத்து விட்ட முட்டை குழம்பு, முட்டை ப்ரைட் ரைஸ், முட்டை ப்ரியாணி, முட்டை ப்ளேன் ஆம்லெட், முட்டை மசாலா அம்லெட், முட்டை புல் ஃப்ரை முட்டை ஆப்பாயில் (புல்ஸ் ஐ) முட்டை ஆப்பாயில் பொரட்டி போட்டது (ஓவர் ஈஸி), முட்டை போட்ட ப்ரென்ச் வெண்ணிலா ஐஸ்கிரீம், முட்டை பொடிமாஸ், முட்டை பஜ்ஜி, சப்பாதியில் சுற்றிய முட்டை பொடிமாஸ், முட்டை பரோட்டா இப்படி முட்டையை என்ன ஃபார்மில் கொடுத்தாலும் சாப்பிட்டு கொண்டிருந்தேன்.

இப்படியாக தேங்காயுடனும் முட்டையுடனும் காலம் இனிமையாக கடந்து கொண்டிருந்த போது டாக்டர் செக்கப்பிற்கு போன என் தந்தையார் இருண்ட முகத்துடன் வந்தார். அவருக்கு இரத்தத்தில் கொழுப்பாம், அது பரம்ப்பரை வியாதியாம் அதனால் அவரின் சந்ததியே தேங்காய் முட்டை ஆட்டுக்கறி மற்றும் இதர கொழுப்பு பதார்த்தங்கள் சாப்பாடு கூடாது அதிலும் முட்டையும் தேங்காயும் கூடவே கூடாது என்று சொல்லிவிட்டார். எங்கள் வீட்டில் தலைக்கு தடவகூட தேங்காய் எண்ணைக்கு தடை போட்டுவிட்டார்கள். தேங்காயும் முட்டையும் இல்லா வாழ்கை இருண்டுவிட்டது.

போனல் போகிறதென்று வாரம் இரண்டு முட்டைக்கு மட்டும் டாக்டர் பெர்மிட் தந்துவிட்டார். முட்டை சாப்பிடும் ஞாயிறு காலைக்கு சமீப காலம் வரை தவமிருந்தது உண்டு.

சோ...இவ்வாறாக கால் நூற்றாண்டு கடந்து விட்டது. இப்ப என்னங்கிறீங்க..

சமீபகாலமாக கனடா டிவியிலும் இணையத்திலும் முட்டையை சாப்பிடுங்கள். அதில் நல்ல கொழுப்பு இருக்கிறது, புரதம் இருக்கிறது அது இருக்கிறது இது இருக்கிறது என கூவி கூவி முட்டையை பரிமாறுகிறார்கள் பார்க்க

http://ca.shine.yahoo.com/healthy-living/great-reasons-to-love-eggs-blog-764-daniela-nahas.html

நேற்றைக்கு வலையை மேய்ந்த போது இந்த சுட்டியில் தடுக்க நேர்ந்தது.

http://www.nytimes.com/2011/03/02/dining/02Appe.html?pagewanted=1&_r=1

இவிங்க என்ன சொல்றாங்கன்னா தேங்கா ஒரு சூப்பர் சாப்பாடு, இது இதயத்திற்கு நல்லது தலைமுடிக்கு நல்லது சருமத்திற்கு நல்லது அது இதுன்னு உசுப்பேத்தறங்க

நானும் இந்த கார்ப்பரேட் ஆசாமிங்க அடங்கவே மாட்டாங்க எவனோ ஒருத்தன் ஒரு மெகா கோழி பண்ணையோ இல்லேன்னா சவுத் அமெரிக்காவிலே ஒரு மெகா தென்னை தோட்டத்தை வாங்கியிருப்பான் அவன் பிஸினஸ் அதிகமாக்க கெளப்பி விடாறன் என நினைச்சு அடங்கிட்டேன். நமக்கு தான் தேங்காயும் முட்டையும் சாப்பிடாமே நாக்கு செத்து போயிருச்சே.

நேற்றைக்கு ஒரு சயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிக்கையை மேயும் போது அதில் பத்தாண்டுகளுக்கு முன்னால் உணவுகளைப் பற்றிய அபிப்ராயங்களை விஞ்ஞானிகள் இப்போது மாற்றிக் கொள்கிறார்கள் என இருந்தது.

ஆஹா மீண்டும் முட்டையும் தேங்காயும் சாப்பிடலாம் என முடிவெடுத்து என ஒரு ட்ரே முட்டையும், இரண்டு தேங்காயும், ஒரு கேன் தேங்காய் எண்ணையும், ஒரு கார்ட்டன் இந்த இளநீர் தண்ணியும் வாங்க கிளம்பிட்டேன்

கால் நூற்றாண்டை வீணடித்து விட்டேன் முட்டையும் தேங்காயும் இல்லாமல் :)

Sunday, April 11, 2010

கனடாவிலிருந்து..............: நிறங்களில் ஆனந்தம்

கனடாவிலிருந்து..............: நிறங்களில் ஆனந்தம்

Sunday, February 21, 2010

என் சமீபத்திய பொம்மை

அவ்வபோது எனக்கின்று சில டாய்ஸ்கள் வாங்குவது வழக்கம். கடந்த கருப்பு வெள்ளியன்று ஒரு Canon SX20IS என்ற மற்றும் ஒரு பொம்மையை வாங்கினேன்.

எல்லா இளைஞர்கள் போல பாரின் வந்த புதிதில் ஒரு ப்ரோபெஷனல் போட்டோகிராபர் ஆக வேண்டும் என்ற வைராக்யத்தில் பிலில் யுகத்தில் ஒரு எஸ் எல் ஆர் காமிரா மற்றும் அதன் லென்சுகள் ப்ளாஷ்கள், ஃபில்டர்கள் என பல அய்டங்களை சில ஆயிரம் டாலர்களை செலவழித்து வாங்கினேன். எங்காவது சுற்றுலா செல்லும் போது அந்த காமிரா பையை தூக்கினாலே வீட்டில் கலகம் வரும் நிலை வந்தது.

பிலிம் யுகத்தில் போட்டோ எடுத்து அதை ப்ராசஸ் செய்ய தந்து பிரசவ வேதனையுடன் காத்திருப்பது தனி சுகம்....

டிஜிட்டல் யுகம் வந்தவுடன் மெகா பிக்ஸல்கள் ஏற ஏற காமிரகளும் என் கையில் மாறிக் கொண்டே இருந்தது.

கடைசியாக ஒரு ஸ்பெசிபிகேஷனை நானே எழுதினேன். என்னுடைய ஸ்பெசிபிகேஷன் இதோ :

ஒரு காம்பெக்ட் காமிராவாக இருக்க வேண்டும். வைட் ஆங்கிள் முதல் நல்ல ஜூம் வரை ஒரே லென்சாக இருக்கவேண்டும். சின்ன பையில் அடங்க வேண்டும். விலை சகாயமாக இருக்க வேண்டும். முக்கியமாக ஹை டெஃப் வீடியோ எடுக்கவேண்டும். இந்த கண்டிஷனுடன் தேட ஆரம்பித்தேன். மூன்று காமிராக்கள் தேறியது. நைகானின் பி90, சோனியின் எச் எக்ஸ் என நினைக்கிறேன் மற்றும் கானனின் SX20IS. இதில் சோனியை முதலியே கழித்து விட்டேன். இதன் ப்ரத்யேக பாட்டரி, பாட்டரி ஜார்ஜர் மற்றும் மெமரி ஸ்டிக்குகள் காரணமாயின.

நைகானின் பி-90 பற்றிய இணைய விமர்சனங்கள் சரியாக இல்லை. பெஸ்ட் பை சேல்ஸ்மேன் கூட ரெகமண்ட் செய்யவில்லை :)

கடைசியாக ஒரு கருப்பு வெள்ளியில் $350க்கு இந்த பொம்மையை வாங்கினேன். இந்த விலையில் இவ்வளவு வசதிகளுடன் கூடிய ஒரு நல்ல காமிரா.

இந்த காமிராவின் நிறைகள்

லென்ஸ் 28 எம் எம் முதல் 516 எம் எம் வரை (20 x optical 80 x Digital)

சுழலும் திரை

ஹை ஃடெப் வீடியோ

AA பாட்டரிகள் மற்றும் சாதா மெமரி கார்டுகள்

பாட்டரி லைப்

காமிரவிலிருந்து HDMI cable பெரிய திரையில் பார்க்க வசதியாக

பல ஆட்டோ செட்டிங்கள் மற்றும் மானுவல் செட்டிங்கள்

எடிட்டிங் வசதிகள்

முகத்தை கண்டுபிடித்து ஆட்டோ கிளிக்கும் வசதி

பல போட்டக்களை எடுத்து அவற்றைக் கோர்த்து மிக பெரிய படமாக்கும் வசதி

மற்றும் பல..

இந்த காமிராவின் குறைகள்

குறைந்த லைட்டிங்கில் அல்ட்ரா ஜூமில் ஆட்டோ ஃபோகஸ் மிகவும் ஸ்லோ ( இந்த விலைக்கு இவ்வளவு தான் வரும். என்னுடையது பேராசை)

ஆட்டோ மோடில் இண்டோர் போட்டக்களில் அதிக ஐ எஸ் ஓ செட்டாகிறது அதனால் படத்தில் Noise அதிகமாக இருக்கிறது. (அடுத்த மாடலில் இந்த குறை தீரும் என நினைக்கிறேன்)

பில்ட் இன் ஃப்ளாஷ் சராசரியாக இருக்கிறது. ஆனால் பெரிய ஃப்ளாஷ் மாட்ட ஷூ இருக்கிறது (விலை $150)

ரிசல்ட் பார்க்கலாமா

கீழே உள்ள வீடியோ ஹூஸ்டன் ஏர்போர்ட் ரெஸ்டாரண்டின் ஜன்னல் வழியாக ரன் வேயை எடுத்தது.
















சான் அண்டோனியவின் ரிவர் வாக்....





சான் ஆண்டோனியோவின் சீ வோர்ல்ட்டின் சில காட்சிகள்










விமானத்திலிருந்து டொராண்டோ நகரம்




பனித்துளி.... மாக்ரோ ஷாட்டில்





அல்ட்ரா ஜுமில் பௌர்ணமி நிலவு




பெட்ரூம் சைட் டேபிள் லாங் ஷாட்டில்..




அதே அல்ட்ரா ஜூமில்





இந்த காமிராவை உபயோகிக்கும் முன் இதன் உபயோக நூலை நன்றாக படிக்க வேண்டியிருக்கிறது.

சிறிது போட்டோ கிராபி ஞானம் உள்ளவர்களுக்கு..

காம்பாக்ட் காமிராவை விட்டு வெளியே வர துடிப்பவர்களுக்கு

சகாயவிலையில் அதிக வசதிகளுடன் கூடிய ஒரு நல்ல காமிரா..


சுமார் பத்துவருடங்களுக்கு முன் இதேவிலையில் நான் வாங்கிய 1.3 மெகா பிக்ஸல் காமிராவுடன் ஒப்பிட்டால் இது ஒரு பரிணாம வளர்ச்சி.
நண்பர் இலவசக் கொத்தனாரின் வேண்டுக்கோளுக்கிணங்க காமிரவின் படங்கள். (Courtesy : http://www.photographyblog.com/reviews/canon_powershot_sx20_is_review/product_images/



















ஒரு திருத்தம் : என்னுடைய நேற்றைய பதிவில் ஒரு டைப்போ Canon SX10IS என்பது Canon SX20IS என சரி செய்து கொள்ளவும். 10 முந்தைய மாடல்

Tuesday, February 16, 2010

வாட்..இஃப்...

பொய்யே பேசாத உலகம் எப்படி இருக்கும்.....

பிறக்கும் போது மூப்புடன் பிறந்து வயதாக ஆக இளமை அடைந்து கடைசியில் குழந்தையாக இறந்தால் என்னாகும்

எப்போதும் No சொல்பவன் எல்லாவற்றுக்கும் Yes என்றால் என்னாகும்


இவையெல்லாம் சமீபத்தில் விமான பயணங்களில் நான் பார்த்த படங்களின் ஒன் - லைன்கள்


The Invention of Lying http://www.imdb.com/title/tt1058017/ என்ற படம் நல்ல காமெடி. உண்மை மட்டும் பேசும் உலகில் சினிமா எப்படி இருக்கும்...பிடிக்காத பிளைண்ட் டேட் எப்படி இருக்கும் என்பதை அட்டகாசமாக விவரிக்கிறார் டைரக்டர் ஆக்டர் Ricky Gervais. உண்மை மட்டும் பேசும் உலகில் கடவுள் இல்லை கபடம் இல்லை. இவர் பொய் பேசி கடவுளை உருவாக்கி தேவதூதனாகி உலகை சுவாரசியமாக்குகிறார். பார்க்க வேண்டிய படம். இந்தியாவில் கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் இந்தப் படத்திற்கு தடை வாங்குவார்கள் :)


The Curious Case of Benjamin Button http ://www.imdb.com/title/tt0421715/

ப்ராட் பிட்டின் நடிப்பிற்காகவும் மேக்கப்காகவும் இந்த படத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு நன்றாக இருந்தது.

கடவுளே இந்த படத்தை கமலஹாசனிமிருந்து மறைத்து விடு. கடித்து குதறிவிடுவார்.

Yes Man http://www.imdb.com/title/tt1068680/ என் அபிமான நடிகர் ஜின் கேரி நடித்தது. எதற்கும் மறுப்பு தெரிப்பவன் மனது எல்லாவற்றுகும் ஆமாம் சொல்வதால் எவ்வாறு விரிகிறது என்பது படம். மிகுந்த விறுவிறுப்புடன் போகிறது.

Monday, February 08, 2010

1000 வழிகளில் சாவு

சமீபத்தில் 1000 ways to die என்ற டிவி நிகழ்ச்சியைப் பார்க்க நேரிட்டது. இது Spike என்ற சானலில் ஒளிபரப்பபடுகிறது.



சில நிஜ சாவுகள் எப்படி நிகழ்ந்தன என்பதை காட்டுகிறார்கள்



சில சாவுகள் செத்தவர்களின் முட்டாள்தனத்தால் நிகழ்கிறது, சில விபத்துகள், சில பொய் சொல்வதினால், சில பேராசையால், சில திமிர் பிடித்த செயல்களால்.



ஒருவருக்கு பங்ஜி ஜம்பிங் செய்ய ஆசை ஆனால் பணம் இல்லை. பக்கத்தில் நிற்கும் ஒரு உயர கிரேனில் ஏறி குதிக்கிறார். இவரின் முட்டாள் தனம் இவர் காலில் கட்டிய கயிறு கிரேனின் உயரத்தை விட அதிகமாய் இருந்தது. பாவம் ஸ்பாட்டில் அவுட்.


பணக்கார ஆனால் வயதான தாத்தா. மூக்கில் ஆக்ஸிஜன், மூச்சுவிட வெண்டிலெட்டர், மருத்துவர்கள். நர்ஸ்கள், மருந்துகள் இவைகளை வைத்துத் தான் இவர் வாழ்க்கை ஓடுகிறது. இந்த வயதிலும் இவருக்கு பலான பெண்களை ஆடவிட்டு ஜொள்ளுவிடுவார். இவ்வாறு ஒரு நாள் இவருக்காக ஒரு பெண் கவர்ச்சி ஆட்டம் ஆடும் போது கால் தவறி வெண்டிலெட்டர் மெஷின் மேல் விழுந்து அதன் பவர் பிடுங்கி கொள்கிறது. தாத்த வைகுண்ட பதவியை இஸ்டண்ட் ஆக அடைகிறார்.


இவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். இவருக்கு தீவிர ஆஸ்துமா நோய் இருக்கிறது. ஆனால் தன் காதலியிடம் தன் நோயை மறைக்கிறார் இவர். ஒரு நாள் இவர் காதலி காதல் செய்ய இவரை வீட்டிற்கு அழைக்கிறார். காதலிக்கு இந்திய உணவு பிடிக்கும். அதனால் இந்திய உணவை இவருக்காக சமைக்கிறார். ஒவ்வொரு மசாலா பொடியை இவரின் மூக்கிற்கு அருகில் சென்று முகர வைக்கிறார். காதலுனுக்கு ஆஸ்த்துமா அட்டாக் அதிகம் வந்து இவர் அவுட் பாவம் உண்மை சொல்லியிருந்தார் பிழைத்திருப்பார்.

இவருக்கு வர வர ஆண்மை குறைய தொடங்கியிருக்கிறது. இவருக்கு மனைவியும் உண்டு ஆசை நாயகியும் உண்டு. அதனால் வயாக்ரா சாப்பிடுகிறார். ஒருநாள் மனைவியிடம் உடலுறவு கொள்ள தயாராகும் போது ஆசை நாயகியிடமிருந்து போன் வருகிறது. பாத்ரூமிற்கு போய் 3 மாத்திரைகளை போட்டுக் கொண்டு மனைவியிடம் வருகிறார். தன் கணவனின் ஆண்மையை அதிகமாக்க கணவனுக்கு மனைவி பியரில் 3 மாத்திரைகளை போட்டு தருகிறாள். மனையிடன் காதல் செய்துவிட்டு ஆசை நாயகியின் வீட்டிற்கு ஓடுகிறான். காதலி பழச்சாறில் 3 மாத்திரைகளை போட்டு தருகிறாள். 9 மடங்கு ஓவர் டோஸாகி வயாக்ரா ஆள் ஆசைநாயகி வீட்டில் அவுட்டாகிறான்


இப்படி பலவழிகளில் இறந்தவர்களைப் பற்றிய 1000 ways to die என்ற டிவி தொடர் ஒரு நல்லப் பாடமாக இருக்கிறது

Sunday, February 22, 2009

வால்மார்ட் பற்றிய இரு வேறு பார்வைகள்


வால் மார்ட் என்பது ஆணி முதல் கப்பல்வரை விற்கும் ஒரு பலசரக்கு கடை. இந்த கடை அமெரிக்கா/கனடாவில் எல்லா ஊரிலும் மூலை முடுக்கு களிலும் இருக்கும். உலகில் அதிக பிசினஸ் செய்யும் கம்பெனிகளில் முதல் இடத்தில் இருப்பது இதுதான்.


கடந்த வாரம் ஒரு இந்திய சிவில் இஞ்ஜினியரை சந்தித்தேன். மிக பணக்காரர். கால்கரியில் 4 வீடுகள். டில்லியில் ஒரு பங்களா, ஹவாயில் ஒரு ரிசார்ட் என பணத்தில் திளைப்பவர். எல்லாம் அவரும் அவருடைய குடும்பத்தாரும் உழைத்த சொத்து.


அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் எல்லா பொருடகளையும் வால்மார்ட்டிலேயே வாங்குவதாக சொன்னார். அவர் தேடின பொருள் வால்மார்ட்டில் கிடைக்கவில்லையென்றால் மட்டும் வெளியில் வாங்குவதாக சொன்னார்.

வால்மார்ட் ஏழை மக்களின் கடையாயிற்றே உங்களை போன்ற பணக்காரர்கள் எப்படி... என இழுத்தேன்.. அவர் சொன்ன அவரின் கதை என்னை பிரமிக்க வைத்தது.


அவர் கனடாவிற்கு வந்த புதிதில் வேலையே கிடைக்கவில்லை. இந்தியாவில் அவர் பார்த்த கவர்மெண்ட் வேலையும் அனுபவமும் உதவவில்லை. கையில் கொண்டு வந்த ரூபாய் 20 லட்சம் வேகமாக தீர்ந்தது. அவர் அவரின் மனைவி மற்றும் பதின்ம வயதில் இரு மகன்களும் ஒரு மகளும் என்ன செய்வது என கையைப் பிசைந்து கொண்டு நின்றார்கள். அப்போது அவர்களுக்கு கை கொடுத்ததது வால்மார்ட். ஐவரும் அங்கே வேலைக்கு சேர்ந்தார்கள். வாடகைக்கும் சாப்பாட்டிற்கும் பணம் கிடைத்தது. முதலில் தந்தை மேல் படிப்பு படித்து இஞ்ஜினியராக மறுபடியும் நல்ல வேலையில் சேர்ந்தார். மனைவி வால்மார்ட்டிலேயே பதவி உயர்வடைந்து அக்கௌண்டண்ட் ஆனார். பிறகு குழந்தைகள் படித்து முன்னுக்கு வந்துவிட்டார்கள். வந்தாரை வாழ வைத்த வால்மார்ட்டுக்கு நன்றி கடனுடன் இருக்கிறார்கள் இந்த மில்லியனர்கள்

இன்னொருவர், இவர் ஒரு அமெரிக்கர், வெள்ளை இனத்தவர் . அமெரிக்காவின் ஆடம்பர, கூச்சல் நிறைந்த வாழ்க்கையை வெறுத்து கனடவில் குடியேறிவர். மிக எளிமையாக வாழ்பவர். இவரின் அபார்ட்மெண்டில் சுத்தமாக ஒரு பர்னிச்சரும் இல்லை. ஸ்லீப்பிங் பாக் இல் தூங்குவார். இயற்கை சோப், மற்றும் வாசனை திரவியங்களை உபயோகிப்பார். உறைந்த இறைச்சியை சாப்பிட மாட்டார். ப்ரஷ் இறைச்சி அதுவும் இயற்கை தீவனங்கள் தின்று வளர்ந்த கால்நடை, இறைச்சியை உண்பார். இயற்கை உரங்களை கொண்டு விளந்த காயகறிகளைதான் உண்பார். கனடா மற்றும் அமெரிக்காவில் தயாரான உடைகளையும் காலணிகளையும் அணிவார். கோக் பெப்ஸி போன்ற பானங்களை அருந்த மாட்டார் இவ்வாறும் இன்னும் பல

இவரும் நானும் ஒரு முறை நகருக்கு சென்ற போது நான் வால்மார்ட்டில் சில பொருட்களை வாங்க வேண்டியிருந்தது. இவர் வால்மார்ட்டின் உள்ளே வர மறுத்து விட்டார். பிறகு அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் வால்மார்ட்டின் மேலுள்ள அவரின் ஆதங்கங்களை வெளியிட்டார்..


வால்மார்ட் அநியாய பிஸினஸ் செய்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் பல குழந்தை தொழிலாளர்களினால் குறைந்த விலையில் தயாரிக்க்பட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்கிறது என்பார். வால்மார்ட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களை அடிமையாக நடத்துவார்கள் என்றார். உதாரணத்திற்கு. திங்களன்று ஒருவரை மானேஜர் ஒரு தொழிலாளியை அழைத்து இன்று 10 மணிநேரம் வேலை செய் என்பார். அந்த தொழிலாளியும் ஓவர் டைம் கிடைக்கிறது என்று சந்தோஷமாக வேலை செய்வார். ஆனால் வெள்ளி கிழமை அந்த தொழிலாளியை அழைத்து இன்று 6 மணிநேரம் வேலை செய்தால் போதும் என்பார். அந்த வாரம் அவர் 40 மணிநேரம் வேலை செய்த மாதிரி ஆகிவிடும் ஆகையால் ஓவர் டைம் வழங்க தேவையில்லை. மேலும் தொழிலாளிகளின் கூலியை எப்போதும் ஏற்றுவது இல்லை. சம்பள உயர்வு கேட்டால் வேலை காலியாகிவிடும் இன்னும் இவ்வாறு பல குற்றசாட்டுகளை அடுக்கினார்.


அவர் அடுக்கியதில் அர்த்த முள்ள குற்றசாட்டு இதுதான்: வால்மார்ட் அசுர வளர்ச்சிக்கு அடைவதற்கு முன் ஆங்காங்கே சிறு சிறு கடைகள் இருந்தன. சில கடைகளில் சில பிரத்யேக பொருடகள் கிடைக்கும். அங்கே வாடிக்கையாளராகி அந்த கடைகளை ஊக்குவிப்பதில் அலாதி இன்பம். ஆனால் வால்மார்ட் வந்தவுடன் அந்த சின்ன கடைகள் காணாமல் போய்விட்டன. சின்ன சின்ன முதலாளிகள் இல்லாமல் போய்விட்டனர். இப்படி சின்ன மீன்களை விழுங்கிய பெரும் திமிங்கிலம் தான் இந்த வால்மார்ட் இங்கே பிசினஸ் செய்வது நல்லதில்லை என்பார். மேலும் இவர் சுவிட்சர்லாந்தை அதிகமாக வெறுப்பவர். சுவிட்சர்லாண்ட்டில் மூன்றாம் உலக ஊழல்வாதிகள் ஏழை மக்களை ஏமாற்றி அங்கே பணத்தை போடுகிறார்கள். அந்த பாவபட்ட பணத்தில் கிடைக்கும் வட்டியில் வாழ்கிறது இந்த நாடு. இதெல்லாம் ஒரு நாடு. இந்த நாட்டின் பொருளை நான் ஏன் வாங்க வேண்டுமென்றார். இந்தியாவில் தயாராக்கும் டைடன் வாட்ச்களை வாங்க தயாராய் இருக்கிறார். அடுத்த முறை இந்தியாவிற்கு போகும் போது ஒரு டைடன் வாட்ச் ஒன்றை வாங்கி இவருக்கு தரவேண்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்.

இதில்எனக்கு என்ன புரிந்தது என்றால் .ஏழை மக்களை அடித்து ஏழைகளை வாழவைத்து வால்மார்ட் ஓனர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்பது தான்



























Friday, February 20, 2009

சூரிய நாய்கள்

கடந்த ஆறுமாதங்களாக கனடாவின் வடக்கே உள்ள எண்ணை எடுக்கும் மணற்குவாரியில் வேலை.


கிறிஸ்துமஸ் நியூ இயர் லீவில் பெரும்பாலோர் ஊருக்கு போய்விட நான் அங்கே வேலைப் பார்த்து கொண்டிருந்தேன்.

அன்றைக்கு கடும் குளிர். லாட்ஜிலிருந்து கார்பார்கிங்க்கு நடந்து வருவதற்குள் கண்ணில் இருக்கும் நீர் கூட உறைந்து கண்கள் வலித்தன.

அதிகாலை சுமார் 6.30 இருக்கும் கும்மிருட்டு இங்கே சூரிய உதயமே காலை 9 மணிக்கு பிறகுதான்.

காரை ஸ்டார்ட் செய்து காரின் வெப்பமானியை நோக்கியதில் வெப்பம் -45 என காட்டியது. என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகு குறைந்த வெப்பம் இதுதான்.


கண்ட்ரோல் ரூமிற்கு முன்னால் காரை பார்க் செய்து உள்ளே வந்து சூடான காபி அருந்தி கொண்டே மீட்டிங்க் அட்டெண்ட் செய்தேன். அங்கே எந்தெந்த பைப்புகள் உறைந்து உடைந்துள்ளன என விவரித்து கொண்ட்டிருந்தார்கள். எரிகோபுரத்தின் (Flare) மேல் சுமார் 3 டன் ஐஸ் உறைந்திருக்கிறது. அது எந்த நேரத்தில் உடையும் உடைந்தால் எங்கே விழும் விழுந்தால் என்னென்ன இயந்திரங்கள் பழுதாகும் என விவாத்திதோம்.


அதற்குள் மணி காலை பத்தாகியிருந்தது. அப்போது பப்ளிக் அனௌன்ஸ்மெண்ட் சிஸ்டத்தில் "வெளியே குளிர் -52 டிகிரி சி அவசியம் ஏற்பட்டால் ஒழிய யாரும் வெளியே போகவேண்டாம். இது கட்டளை " என அறிவித்தார்கள்


கட்டளை என்றாலே அதை மீற வேண்டும் போல் தோன்றும் எனக்கு புகைபிடிப்பாளர்கள் ரகசியமாக வெளியே போனார்கள். நானும் அவர்களுடன் போனேன்.



அங்கே நான் கண்ட காட்சி காணக்கிடைக்காத காட்சி.



மூன்று சூரியன்களை கிழக்கே அடிவானத்தில் கண்டேன்



ஆ என் வாய்பிளந்ததில் என் சிறு குடல் வரை உறைந்து விட்டது :)



புகை பிடிக்க வந்த நண்பர்கள் " அதுவா சிவா, இதை சூரியநாய் என்பார்கள்" என் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் சொல்லிவிட்டு புகை பிடிக்க போய்விட்டார்கள்.


அந்த காட்சியை போட்டோ எடுக்கலாம் என்றால் கையில் காமிரா இல்லை. செல் போன் காமிராவிலும் சரியாக பதிவாக வில்லை.


விக்கிபீடியாவில் கிடைத்த புகைபடம் கீழே உள்ளது.



மிஷ்டி தோய்யும் நீர் மோரும்



கடந்த ஆறுமாதங்களாக படு பிஸி. எண்ணையை எடுத்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலைப்பார்த்தோம் கனடாவின் வடமத்திய மேற்கே எண்ணை மணலில் ஆலைகட்டி எண்ணை எடுக்க செக்கிழுத்துக் கொண்டிருந்தோம்.

ஆலைக்கு ஓரத்தில் ஒரு ஓடுபாதை கட்டி பிரத்யேக விமானங்களில் தொழிலாளர்களை அள்ளிக் கொண்டு போய் ராட்சச லாட்ஜுகளை அங்கேயே கட்டி தொழிலாளர்களை தங்க வைத்து வேலை வாங்கி கொண்டிருந்தார்கள்.

வழக்கம்போல் கம்யூட்டர்/கண்ட்ரோல் ஸிஸ்டம் வேலைகளை செய்ய இந்திய இளைஞர்கள் கணிசமான அளவில் வந்திருந்தார்கள். நானும் அவர்களுடன் போயிருந்தேன். காடு இரண்டு வாரம் வீடு ஒரு வாரமென கடந்த ஆறுமாதகளாக வாழ்க்கை ஓடுகிறது.


கானகத்தில் கட்டிய லாட்ஜில் உள்ள மெஸ்ஸில் தினம் தினம் வேளைக்கு வேளை மாமிசம்தான். மாமிச பட்சிணி எனக்கே சலித்துவிட்டது என்றால் பாருங்கள். எத்தனை ஆயிரம் மாடுகள், பன்றிகள், கோழிகள், மீன்கள் உயிர்தியாகம் செய்தனவோ.

நம்மாட்களுக்கு மாமிசம் என்றாலே ஆகாது. இந்தியாவிலிருந்து வந்தவர்களெல்லாம் மிக வேகமாக கனடாவின் ரிசஷென் போல் எடை இழந்து கொண்ட்டிருந்தார்கள்.

ஒருநாள் என்னிடம் "சார், சப்பாத்தி, தால், தயிர், சோறு கிடைத்தால் போதும் சார்" என்றார்கள். நானும் மெஸ் மானேஜரிடம் பேசினேன். அவர் என்னை தர தரவென்று இழுத்துக் கொண்டு வித வித மான் யோகர்ட் அதாவது வெள்ளைகார மிஷ்டிதோய்யைக் காட்டினார். "சாமி இதெல்லாம் இருக்கம்ட்டும்யா..... நம்மாட்களுக்கு இதெல்லாம் பிடிக்காது . இந்த மாதிரி வெண்ணிலா, ஸ்ட்டிராபெர்ரி, ப்ளூ பெர்ரி பிளேவர்களை விட்டு சர்க்கரை போடாதத ப்ளேன் தயிரை காட்டுமய்யா எங்காட்கள் மிக சந்தோஷமாகிவிடுவார்கள்" என்றேன்.


அடுத்த நாள் முதல் நம்மாட்களின் முகத்தில் சந்தோஷ களை தாண்டவமாடியது. கால்கரியிலிருந்து ப்ரியா ஊறுகாய் பாட்டில்களை இறக்குமதி செய்யபட்டு தயிர்சாதத்தை கட்டு கட்டு என ரவுண்டடித்துக் கட்டினார்கள். முதலில் முகம் சுழித்த வெள்ளைக் கார துரைகள் பிறகு அதைப்பார்த்து பழகி கொண்டார்கள்


முந்தின இரவு சாப்பிட்ட ஸ்டேக் காலையில் சாப்பிட்ட சாசேஜ் மதியம் சாப்பிட மூஸ் ஸ்டூ இவைகள் வூடு கட்டி தாக்கியதி வயிற்றில் வெப்பம் அதிகரித்தது . வெளியே என்னவோ வெட்பம் -45 டிகிரி சி தான்.


என் வயிற்று வெப்பத்தை தணிக்க சமையலறைக்கு சென்றேன். அங்கே இரு வெள்ளைகார பெண்மணிகள் தங்கள் எடையை குறைக்கும் நோக்கத்தில் மிக சுவையான ராஸ்பெர்ரி யோகர்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சர்க்கரை போடாத, ப்ளேவர் இல்லாத யோகர்ட் கிடைக்குமா என கேட்டன். அவர்களும் ஒரு சின்ன கப் ப்ளேன் யோகர்டை கொடுத்தார்கள்.

ஒரு பெரிய கிளாஸை எடுத்து அந்த யோகர்டை அதில் காலி செய்தேன். அந்த பெண்மணிகள் சங்கடத்துடன் என்னைப் பார்த்தார்கள். பிறகு வெண்டிங் மெசினில் ஒரு அக்வா ஃபினா பாட்டிலை வாங்கி அந்த தண்ணீரை அதில் ஊற்றினேன். ஒரு பெண்மணி "ஏய்... சிவா என்ன செய்கிறாய்?" என அந்த ப்ளாண்ட்களுக்கே உரிய முகபாவனைகளை காட்டினாள். நான் அதில் சிறுது உப்பை போட்டதும் "ஏய்... ஏய்.. நீ வேடிக்கை தானே காட்டுகிறாய்" என்றாள். நான் புன்னகைத்து கொண்டே சிறிது மிளகு பவுடரை போட்டதும் அந்த பெண் வீல் என வீரிட்டாள்


கண்ட்ரோல் ரூமில் இருந்த எல்லோரும் என்ன சத்தம் என பார்க்க வந்து விட்டார்கள்.

அந்த பெண் "என் வாழ்க்கையில் பார்க்காத நிகழ்ச்சி இது.. இவன் தயிரில் உப்பும் மிளகும் போட்டு தண்ணீர் ஊற்றி சாப்பிடுகிறான்" என் கண்களை விரித்து தோள்களை குலுக்கி சொல்லிகொண்டிருந்தள்.


இதை கேட்ட என் வட இந்திய நண்பர்கள் "அரே யார், ச்சாஸ் (chaas) யார் மேரகோ ஏக் கிளாஸ் தேதோ" என உற்சாகமாகி விட்டார்கள்.


இந்த மாதிரி சமயத்தில் தான் திரு. சொக்கன் எழுதிய இந்தப் பதிவை பார்க்க நேரிட்டது.

என் வயிற்று வெப்பம் தணிந்ததோ இல்லையோ நீர்மோர் இந்த பனிக்காட்டில் கொடிகட்டி பறக்கிறது.






பி.கு. பனிகாட்டில் என் வெள்ளைகார நண்பர்கள் பனிஸ்கூட்டரில்(Snow mobile) போய் மேலே படத்தில் உள்ளதை போன்ற ஒரு மூஸை வேட்டையாடி அந்த இறைச்சியை சமைத்தார்கள்.