Friday, February 20, 2009

மிஷ்டி தோய்யும் நீர் மோரும்கடந்த ஆறுமாதங்களாக படு பிஸி. எண்ணையை எடுத்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலைப்பார்த்தோம் கனடாவின் வடமத்திய மேற்கே எண்ணை மணலில் ஆலைகட்டி எண்ணை எடுக்க செக்கிழுத்துக் கொண்டிருந்தோம்.

ஆலைக்கு ஓரத்தில் ஒரு ஓடுபாதை கட்டி பிரத்யேக விமானங்களில் தொழிலாளர்களை அள்ளிக் கொண்டு போய் ராட்சச லாட்ஜுகளை அங்கேயே கட்டி தொழிலாளர்களை தங்க வைத்து வேலை வாங்கி கொண்டிருந்தார்கள்.

வழக்கம்போல் கம்யூட்டர்/கண்ட்ரோல் ஸிஸ்டம் வேலைகளை செய்ய இந்திய இளைஞர்கள் கணிசமான அளவில் வந்திருந்தார்கள். நானும் அவர்களுடன் போயிருந்தேன். காடு இரண்டு வாரம் வீடு ஒரு வாரமென கடந்த ஆறுமாதகளாக வாழ்க்கை ஓடுகிறது.


கானகத்தில் கட்டிய லாட்ஜில் உள்ள மெஸ்ஸில் தினம் தினம் வேளைக்கு வேளை மாமிசம்தான். மாமிச பட்சிணி எனக்கே சலித்துவிட்டது என்றால் பாருங்கள். எத்தனை ஆயிரம் மாடுகள், பன்றிகள், கோழிகள், மீன்கள் உயிர்தியாகம் செய்தனவோ.

நம்மாட்களுக்கு மாமிசம் என்றாலே ஆகாது. இந்தியாவிலிருந்து வந்தவர்களெல்லாம் மிக வேகமாக கனடாவின் ரிசஷென் போல் எடை இழந்து கொண்ட்டிருந்தார்கள்.

ஒருநாள் என்னிடம் "சார், சப்பாத்தி, தால், தயிர், சோறு கிடைத்தால் போதும் சார்" என்றார்கள். நானும் மெஸ் மானேஜரிடம் பேசினேன். அவர் என்னை தர தரவென்று இழுத்துக் கொண்டு வித வித மான் யோகர்ட் அதாவது வெள்ளைகார மிஷ்டிதோய்யைக் காட்டினார். "சாமி இதெல்லாம் இருக்கம்ட்டும்யா..... நம்மாட்களுக்கு இதெல்லாம் பிடிக்காது . இந்த மாதிரி வெண்ணிலா, ஸ்ட்டிராபெர்ரி, ப்ளூ பெர்ரி பிளேவர்களை விட்டு சர்க்கரை போடாதத ப்ளேன் தயிரை காட்டுமய்யா எங்காட்கள் மிக சந்தோஷமாகிவிடுவார்கள்" என்றேன்.


அடுத்த நாள் முதல் நம்மாட்களின் முகத்தில் சந்தோஷ களை தாண்டவமாடியது. கால்கரியிலிருந்து ப்ரியா ஊறுகாய் பாட்டில்களை இறக்குமதி செய்யபட்டு தயிர்சாதத்தை கட்டு கட்டு என ரவுண்டடித்துக் கட்டினார்கள். முதலில் முகம் சுழித்த வெள்ளைக் கார துரைகள் பிறகு அதைப்பார்த்து பழகி கொண்டார்கள்


முந்தின இரவு சாப்பிட்ட ஸ்டேக் காலையில் சாப்பிட்ட சாசேஜ் மதியம் சாப்பிட மூஸ் ஸ்டூ இவைகள் வூடு கட்டி தாக்கியதி வயிற்றில் வெப்பம் அதிகரித்தது . வெளியே என்னவோ வெட்பம் -45 டிகிரி சி தான்.


என் வயிற்று வெப்பத்தை தணிக்க சமையலறைக்கு சென்றேன். அங்கே இரு வெள்ளைகார பெண்மணிகள் தங்கள் எடையை குறைக்கும் நோக்கத்தில் மிக சுவையான ராஸ்பெர்ரி யோகர்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சர்க்கரை போடாத, ப்ளேவர் இல்லாத யோகர்ட் கிடைக்குமா என கேட்டன். அவர்களும் ஒரு சின்ன கப் ப்ளேன் யோகர்டை கொடுத்தார்கள்.

ஒரு பெரிய கிளாஸை எடுத்து அந்த யோகர்டை அதில் காலி செய்தேன். அந்த பெண்மணிகள் சங்கடத்துடன் என்னைப் பார்த்தார்கள். பிறகு வெண்டிங் மெசினில் ஒரு அக்வா ஃபினா பாட்டிலை வாங்கி அந்த தண்ணீரை அதில் ஊற்றினேன். ஒரு பெண்மணி "ஏய்... சிவா என்ன செய்கிறாய்?" என அந்த ப்ளாண்ட்களுக்கே உரிய முகபாவனைகளை காட்டினாள். நான் அதில் சிறுது உப்பை போட்டதும் "ஏய்... ஏய்.. நீ வேடிக்கை தானே காட்டுகிறாய்" என்றாள். நான் புன்னகைத்து கொண்டே சிறிது மிளகு பவுடரை போட்டதும் அந்த பெண் வீல் என வீரிட்டாள்


கண்ட்ரோல் ரூமில் இருந்த எல்லோரும் என்ன சத்தம் என பார்க்க வந்து விட்டார்கள்.

அந்த பெண் "என் வாழ்க்கையில் பார்க்காத நிகழ்ச்சி இது.. இவன் தயிரில் உப்பும் மிளகும் போட்டு தண்ணீர் ஊற்றி சாப்பிடுகிறான்" என் கண்களை விரித்து தோள்களை குலுக்கி சொல்லிகொண்டிருந்தள்.


இதை கேட்ட என் வட இந்திய நண்பர்கள் "அரே யார், ச்சாஸ் (chaas) யார் மேரகோ ஏக் கிளாஸ் தேதோ" என உற்சாகமாகி விட்டார்கள்.


இந்த மாதிரி சமயத்தில் தான் திரு. சொக்கன் எழுதிய இந்தப் பதிவை பார்க்க நேரிட்டது.

என் வயிற்று வெப்பம் தணிந்ததோ இல்லையோ நீர்மோர் இந்த பனிக்காட்டில் கொடிகட்டி பறக்கிறது.


பி.கு. பனிகாட்டில் என் வெள்ளைகார நண்பர்கள் பனிஸ்கூட்டரில்(Snow mobile) போய் மேலே படத்தில் உள்ளதை போன்ற ஒரு மூஸை வேட்டையாடி அந்த இறைச்சியை சமைத்தார்கள்.

3 comments:

said...

ரொம்ப நாளா ஒன்னும் எழுதாததற்குக் காரணத்தை அழகாகச் சொல்லிவிட்டீர்கள். :-)

said...

ஆமாம் குமரன், பயங்கர அலைச்சல். ஆனாலும் அவ்வப்போது பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன்

said...

very intersting to read.. nice description... really magnetic writing..