
தலைப்பு என் நண்பர் செல்வனின் காப்பிரைட் அவரிடம் அனுமதி பெறாமலேயே நான் எடுத்துக் கொண்டு விட்டேன்.... செல்வன் கோபித்துக் கொள்ளமாட்டார். மேலும் அது அவருடைய தொழிலைப் பற்றிய பதிவும் கூட...
உலகின் புதிய கடவுளைக் காண்பதற்கு முன்..பழைய கடவுளர்களைப் பற்றிய என் அனுபவங்கள்...
சின்ன வயதில் சித்திரை திருவிழா என்பது எனக்கு குதூகலம் அளிக்கும் நாட்கள். கள்ளழகர் ஆற்றில் இறங்குவார் பிறகு ஆற்றின் கரையில் உள்ள மண்டபங்களுக்கு மண்டகபடி செய்வார். மூன்றாம் நாள் என நினைக்கிறேன் வண்டியூர் சேஷ வாகனத்தில் அதிகாலை காட்சிதருவார். அதைக் காண்பதற்கு இரவு முழுவதும் ஆற்றில் குடும்பத்தோடு சென்று கட்டான்சோறு உண்டு மணலில் குன்றுகளை கட்டி விளையாடி அங்கே விற்கும் பீம புஷ்டி அல்வா முதல் பற்பல திண்பண்டங்களை உண்டு திருவிழாவில் விற்கும் பலூன், ஊதல்கள், டிக்டிக்குகள் முதலியவைகளை வாங்கி இரவு முழுவதும் கொண்டட்டம் தான், அதிகாலையில் அழகர் தரிசனம் கண்டு பக்தி பெருகி ஆனந்தமடைந்து வீடு திரும்புவோம். எல்லாரிடமும் சந்தோசம் கடவுளைக் கண்ட திருப்தி மேலோங்கி இருக்கும்...
பிறகு வைகாசி விசாகம் திருப்பரங்குன்றத்திற்கு சென்று முருகனை கும்பிட்டு அங்கே இருக்கும் ஓட்டலில் தோசை சாப்பிட்டு விட்டு 5 ஆம் நம்பர் பஸ் பயணம் ஆனந்தம்.
அனி உத்திரம்.. ஆடி பெருக்கு...ஆவணி அவிட்டம் என மூன்று மாதங்கள் திருவிழாக்கள் கடவுளை காண்பது சிறிது மந்தமானலும் புரட்டாசியில் பீக் ஆகும். நவராத்திரி அந்த பத்து நாட்கள் அற்புதம் . பக்தி மணம் கமழும். மதுரையில் என் குடும்பத்தாருக்கு சொந்தமான் திரௌபதி அம்மன் கோவிலிலும் அதன் அருகில் அமைந்திருக்கும் காமட்சி அம்மன் ஆலயத்திலும் அலங்காரங்கள் அட்டகாசமாக இருக்கும். ப்ரசாதாங்களான சர்க்கரை பொங்கல், சுண்டல் முதலியவை ....ம்ம்ம்ம்ம்,.... அந்த நாளிலும் வந்திடாடோ.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இசை வேள்விகள் நடக்கும் எம் எஸ் என்ன, எம் எல் வி என்ன, மதுரை சோமு என்ன, சீர்காழி கோவிந்தராஜன் என்ன மதுரை மண்ணின் மைந்தன் டி எம் எஸ் என்ன என தினம் தினம் இசை என்னும் இன்ப சாகரத்தில் மூழ்குவோம்
ஐப்பசியில் திருவிழாக்களின் கதாநாயகன் தீபாவளி. இரவு முழுவதும் கண்விழித்து பட்டாசுகள் வாங்கி ஊர் சுற்றி அதிகாலையில் எண்ணை தேய்த்து குளித்து கடவுளிடம் அடிபணிந்து பெற்றோர் பெரியவர்களின் காலில் விழுந்து புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடிக்கும் போது கிடைக்கும் பரவசம்... பிறகு இனிப்புகள், சாப்பாடு, நண்பர், உற்றார் வீடுகளுக்கு சென்று வாழ்த்துகள் தீபாவளி தீபாவளி தான்.
கார்த்திகை...கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து....இரவெல்லாம் கண்விழித்து இருமுடிக்கட்டி ஐயப்ப பக்தர்களை வழியனுப்பும் பஜனைகள்... அப்போது அங்கே வழங்கபடும் ப்ரசாதங்கள்.. அந்த மென்குளிர் இரவில் குடிக்கும் டீ சாமியேய்ய்ய்ய்ய்ய் சரணம் ஐயப்பா... அதே கார்த்திகை மாதம் கார்த்திகை நாளில் வாசலில் அகல் விளக்கேற்றி இரவினில் சொக்கப்பானை கொழுத்தி கடவுளை காண்போம்...
மார்கழி ... மாதம் முழுவதும் பக்தி பரவசம்தான் அதிகாலை குளிரில் பச்சை தண்ணீரில் குளித்து கோவிலுக்கு சென்று திருப்பாவை திருவெம்பாவை பாடி பக்தி பரசவத்தில் திளைப்போம் மதுரையில்.
மார்கழியில் இரவு முழுவதும் கண்விழித்து கடவுளை நினைத்து உருகி அதிகாலையில் பரமபத வாசலில் எம்பெருமானை காணும் போது கிடைக்கும் பரவசம் பரமானந்தம்.
தை மாதம் பொங்கல், கரும்பு, மஞ்சி விரட்டு போன்ற விழாக்களுடன் ஆரம்பமாகும் மாதம், தைபூசம், தெப்பதிருவிழா என கொண்ட்டங்களும் கடவுளின் நினைவுகளுடனும் கடக்கும்
மாசி மாதத்தில்தான் சிவராத்திரி. அன்றிலிருந்துதான் கோடை காலம் தொடக்கம். குன்னகுடி அவர்களின் வயலின் இசை வழக்கமாக மதுரையில் நகைக்கடைகள் நிறைந்த தெற்காவணி மூல வீதியில் நடக்கும். மதுரை மறவர் சாவடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை இரவெல்லாம் கண்விழித்து கண்டு களித்து, அதிகாலை கோவில் அபிஷேகத்தில் "ஹரோஹரா" என்ற கோஷத்தில் என்னை மறந்த நாட்கள் எத்தனை.
பிறகு பாலைவனத்தின் நடுவே அபுதாபியில் என் வீட்டில் நடந்த சிவராத்திரி பஜனைகள், சிவனின் பாடல்கள், ருத்ரம் , ஜமகம் , அபிஷேகங்கள் என்னே நான் செய்த புண்ணியம்.
பங்குனியில் பங்குனி உத்திரம். மதுரை கிருஷ்ணன் கோவில் திருவிழா என ஊர் மீண்டும் விழா கோலம் கொள்ளும்.
மேலும் காமன் பண்டிகை. அந்த பண்டிகையில் மன்மதன் எரிந்த கட்சி எரியாத கட்சி என போட்டிகள்.
வாழ்கையே உல்லாசமாக இருந்த மதுரை மற்றும் இந்திய வாழ்கை இந்த நாட்டு இளைஞர்களுக்கு வேறு விதமாக கிடைக்கிறது. கிறிஸ்துமஸ், தாங்க்ஸ் கிவிங், வெட்டரன்ஸ் டே, வாலண்டைன்ஸ் டே. மதர்ஸ் டே, பாதர்ஸ் டே, ஹாலோவீன் என மாதம் ஒரு பண்டிகை வருகிறது. எல்லாமே பழைய கடவுள்கள்.
பிறகு வந்த எம் ஜி ஆர் என்ற புதிய கடவுள் மக்களை இரவுமுழுவதும் கண்முழிக்க வைத்தார். மதுரை மீனாட்சி திரையரங்கில் உலகம் சுற்றும் வாலிபன் என்ற திரைப்படத்தை திரையிட்டபோது மக்கள் ஊண் உறக்கமின்றி வரிசையில் நின்றிருந்தனர். அரங்கம் நிறைந்தவுடன் காட்சி பிற்கு மீண்டும் டிக்கட் பிறகு காட்சி என இரவு பகல் பாராமல் உலகம் சுற்றும் வாலிபரை கண்டு நான் அடைந்த பரவசத்தை அடைந்தனர் மக்கள்
கல்லூரி முடித்து என் நண்பர்கள் பூலோக சொர்க்கம் அமெரிக்கா போக விசா எடுக்க தவமிருப்பர். அவர்களுக்கு கம்பெனி கொடுக்க தேவியில் நைட் ஷோ பார்த்துவிட்டு பிலாலில் பிரியாணி சாப்பிவிட்டு வில்ஸ் பில்டருடன் அமெரிக்க தூதரக வாசலில் செட்டில் ஆவோம். அதிகாலை 8 மணிக்கு டோக்கன் கிடைத்தால் ஒரு மினி பரவசம். உள்ளே விசா கிடைத்தால் கொண்டாட ஒரு குவார்ட்டர் கிடைக்காவிட்டால் வருத்தப்பட ஒரு குவார்ட்டர் அது ஒருவிதமான கடவுளை நோக்கிய தவம்
இந்த உலகின் புதிய கடவுள் மற்றும் திருவிழா அனுபவம் நேற்றைக்கு எனக்கு கிடைத்தது. நேற்றிரவு குளிர் சற்றே குறைவாக -6 டிகிரி சி தான். இளைஞர்களும், இளைஞிகளும், நடுத்தரவயதினரும், முதுமை அடைந்தவர்களும், குழந்தைகளும் போர்வை, கூடாரம். காபி, சிகரட்,பியர், பர்கர், ஆகியவற்றுடன் செட்டில் ஆகி தவம் செய்து கொண்டிருந்தனர். சில இடங்களில் க்ளைமாக்ஸ் காலை 7 மணி சில இடங்களில் 8 மணி மற்றும் வேறிடத்தில் 10 மணி.
காலை எழு மணிக்கு வாசல் திறந்தவுடன் கடவுளை கண்ட பரவசத்தில் கூட்டம் வீ..வீ..வீ என கரகோஷம் இட்டது.

இது என்ன கடவுள்...
Nintendo வின் புதிய வீடியோ கேம் கன்சோல் Wii வெளியீட்டிற்குதான் இவ்வளவு ஆர்பாட்டம். முந்தாநாள் சோனியின் புது கடவுள் Playstation 3 அவதரித்தார். அப்போது மக்கள் 3 நாட்கள் தவமிருந்தனர், அமெரிக்காவில் கலவரம் வெடித்து போலீஸ் தடியடி ப்ரோயொகம் செய்ய வேண்டியிருந்தது.
இந்த கடவுளை காண மார்க்ஸீயம் முதல் மாடர்ன் ஆர்ட் வரை பேசும் என் மகன் போனதால் தான் எனக்கு இந்த விவரங்கள் தெரியவந்தது.

புதிய கனவுகளை காண கடும் குளிரில் பக்தர்கள்
இந்த மார்கெட்டிங் ஆசாமிகள் செய்யும் தந்திரம் இது.
அவர்களின் ப்ராடெக்ட்களை கடவுள் ரேஞ்சுக்கு ஏற்றி அதன் விற்பனையை திருவிழா மாதிரி நடத்தி அவர்களின் விற்பனையை பெருக்குகிறார்கள்
இந்த மாதிரி உலகின் புதிய கடவுள்களை படைக்கும் மனிதனே மிக அறிந்தவன்