Sunday, November 19, 2006

உலகின் புதிய கடவுள்

Photobucket - Video and Image Hosting

தலைப்பு என் நண்பர் செல்வனின் காப்பிரைட் அவரிடம் அனுமதி பெறாமலேயே நான் எடுத்துக் கொண்டு விட்டேன்.... செல்வன் கோபித்துக் கொள்ளமாட்டார். மேலும் அது அவருடைய தொழிலைப் பற்றிய பதிவும் கூட...


உலகின் புதிய கடவுளைக் காண்பதற்கு முன்..பழைய கடவுளர்களைப் பற்றிய என் அனுபவங்கள்...

சின்ன வயதில் சித்திரை திருவிழா என்பது எனக்கு குதூகலம் அளிக்கும் நாட்கள். கள்ளழகர் ஆற்றில் இறங்குவார் பிறகு ஆற்றின் கரையில் உள்ள மண்டபங்களுக்கு மண்டகபடி செய்வார். மூன்றாம் நாள் என நினைக்கிறேன் வண்டியூர் சேஷ வாகனத்தில் அதிகாலை காட்சிதருவார். அதைக் காண்பதற்கு இரவு முழுவதும் ஆற்றில் குடும்பத்தோடு சென்று கட்டான்சோறு உண்டு மணலில் குன்றுகளை கட்டி விளையாடி அங்கே விற்கும் பீம புஷ்டி அல்வா முதல் பற்பல திண்பண்டங்களை உண்டு திருவிழாவில் விற்கும் பலூன், ஊதல்கள், டிக்டிக்குகள் முதலியவைகளை வாங்கி இரவு முழுவதும் கொண்டட்டம் தான், அதிகாலையில் அழகர் தரிசனம் கண்டு பக்தி பெருகி ஆனந்தமடைந்து வீடு திரும்புவோம். எல்லாரிடமும் சந்தோசம் கடவுளைக் கண்ட திருப்தி மேலோங்கி இருக்கும்...


பிறகு வைகாசி விசாகம் திருப்பரங்குன்றத்திற்கு சென்று முருகனை கும்பிட்டு அங்கே இருக்கும் ஓட்டலில் தோசை சாப்பிட்டு விட்டு 5 ஆம் நம்பர் பஸ் பயணம் ஆனந்தம்.

அனி உத்திரம்.. ஆடி பெருக்கு...ஆவணி அவிட்டம் என மூன்று மாதங்கள் திருவிழாக்கள் கடவுளை காண்பது சிறிது மந்தமானலும் புரட்டாசியில் பீக் ஆகும். நவராத்திரி அந்த பத்து நாட்கள் அற்புதம் . பக்தி மணம் கமழும். மதுரையில் என் குடும்பத்தாருக்கு சொந்தமான் திரௌபதி அம்மன் கோவிலிலும் அதன் அருகில் அமைந்திருக்கும் காமட்சி அம்மன் ஆலயத்திலும் அலங்காரங்கள் அட்டகாசமாக இருக்கும். ப்ரசாதாங்களான சர்க்கரை பொங்கல், சுண்டல் முதலியவை ....ம்ம்ம்ம்ம்,.... அந்த நாளிலும் வந்திடாடோ.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இசை வேள்விகள் நடக்கும் எம் எஸ் என்ன, எம் எல் வி என்ன, மதுரை சோமு என்ன, சீர்காழி கோவிந்தராஜன் என்ன மதுரை மண்ணின் மைந்தன் டி எம் எஸ் என்ன என தினம் தினம் இசை என்னும் இன்ப சாகரத்தில் மூழ்குவோம்

ஐப்பசியில் திருவிழாக்களின் கதாநாயகன் தீபாவளி. இரவு முழுவதும் கண்விழித்து பட்டாசுகள் வாங்கி ஊர் சுற்றி அதிகாலையில் எண்ணை தேய்த்து குளித்து கடவுளிடம் அடிபணிந்து பெற்றோர் பெரியவர்களின் காலில் விழுந்து புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடிக்கும் போது கிடைக்கும் பரவசம்... பிறகு இனிப்புகள், சாப்பாடு, நண்பர், உற்றார் வீடுகளுக்கு சென்று வாழ்த்துகள் தீபாவளி தீபாவளி தான்.


கார்த்திகை...கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து....இரவெல்லாம் கண்விழித்து இருமுடிக்கட்டி ஐயப்ப பக்தர்களை வழியனுப்பும் பஜனைகள்... அப்போது அங்கே வழங்கபடும் ப்ரசாதங்கள்.. அந்த மென்குளிர் இரவில் குடிக்கும் டீ சாமியேய்ய்ய்ய்ய்ய் சரணம் ஐயப்பா... அதே கார்த்திகை மாதம் கார்த்திகை நாளில் வாசலில் அகல் விளக்கேற்றி இரவினில் சொக்கப்பானை கொழுத்தி கடவுளை காண்போம்...

மார்கழி ... மாதம் முழுவதும் பக்தி பரவசம்தான் அதிகாலை குளிரில் பச்சை தண்ணீரில் குளித்து கோவிலுக்கு சென்று திருப்பாவை திருவெம்பாவை பாடி பக்தி பரசவத்தில் திளைப்போம் மதுரையில்.

மார்கழியில் இரவு முழுவதும் கண்விழித்து கடவுளை நினைத்து உருகி அதிகாலையில் பரமபத வாசலில் எம்பெருமானை காணும் போது கிடைக்கும் பரவசம் பரமானந்தம்.

தை மாதம் பொங்கல், கரும்பு, மஞ்சி விரட்டு போன்ற விழாக்களுடன் ஆரம்பமாகும் மாதம், தைபூசம், தெப்பதிருவிழா என கொண்ட்டங்களும் கடவுளின் நினைவுகளுடனும் கடக்கும்

மாசி மாதத்தில்தான் சிவராத்திரி. அன்றிலிருந்துதான் கோடை காலம் தொடக்கம். குன்னகுடி அவர்களின் வயலின் இசை வழக்கமாக மதுரையில் நகைக்கடைகள் நிறைந்த தெற்காவணி மூல வீதியில் நடக்கும். மதுரை மறவர் சாவடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை இரவெல்லாம் கண்விழித்து கண்டு களித்து, அதிகாலை கோவில் அபிஷேகத்தில் "ஹரோஹரா" என்ற கோஷத்தில் என்னை மறந்த நாட்கள் எத்தனை.

பிறகு பாலைவனத்தின் நடுவே அபுதாபியில் என் வீட்டில் நடந்த சிவராத்திரி பஜனைகள், சிவனின் பாடல்கள், ருத்ரம் , ஜமகம் , அபிஷேகங்கள் என்னே நான் செய்த புண்ணியம்.

பங்குனியில் பங்குனி உத்திரம். மதுரை கிருஷ்ணன் கோவில் திருவிழா என ஊர் மீண்டும் விழா கோலம் கொள்ளும்.

மேலும் காமன் பண்டிகை. அந்த பண்டிகையில் மன்மதன் எரிந்த கட்சி எரியாத கட்சி என போட்டிகள்.

வாழ்கையே உல்லாசமாக இருந்த மதுரை மற்றும் இந்திய வாழ்கை இந்த நாட்டு இளைஞர்களுக்கு வேறு விதமாக கிடைக்கிறது. கிறிஸ்துமஸ், தாங்க்ஸ் கிவிங், வெட்டரன்ஸ் டே, வாலண்டைன்ஸ் டே. மதர்ஸ் டே, பாதர்ஸ் டே, ஹாலோவீன் என மாதம் ஒரு பண்டிகை வருகிறது. எல்லாமே பழைய கடவுள்கள்.

பிறகு வந்த எம் ஜி ஆர் என்ற புதிய கடவுள் மக்களை இரவுமுழுவதும் கண்முழிக்க வைத்தார். மதுரை மீனாட்சி திரையரங்கில் உலகம் சுற்றும் வாலிபன் என்ற திரைப்படத்தை திரையிட்டபோது மக்கள் ஊண் உறக்கமின்றி வரிசையில் நின்றிருந்தனர். அரங்கம் நிறைந்தவுடன் காட்சி பிற்கு மீண்டும் டிக்கட் பிறகு காட்சி என இரவு பகல் பாராமல் உலகம் சுற்றும் வாலிபரை கண்டு நான் அடைந்த பரவசத்தை அடைந்தனர் மக்கள்

கல்லூரி முடித்து என் நண்பர்கள் பூலோக சொர்க்கம் அமெரிக்கா போக விசா எடுக்க தவமிருப்பர். அவர்களுக்கு கம்பெனி கொடுக்க தேவியில் நைட் ஷோ பார்த்துவிட்டு பிலாலில் பிரியாணி சாப்பிவிட்டு வில்ஸ் பில்டருடன் அமெரிக்க தூதரக வாசலில் செட்டில் ஆவோம். அதிகாலை 8 மணிக்கு டோக்கன் கிடைத்தால் ஒரு மினி பரவசம். உள்ளே விசா கிடைத்தால் கொண்டாட ஒரு குவார்ட்டர் கிடைக்காவிட்டால் வருத்தப்பட ஒரு குவார்ட்டர் அது ஒருவிதமான கடவுளை நோக்கிய தவம்


இந்த உலகின் புதிய கடவுள் மற்றும் திருவிழா அனுபவம் நேற்றைக்கு எனக்கு கிடைத்தது. நேற்றிரவு குளிர் சற்றே குறைவாக -6 டிகிரி சி தான். இளைஞர்களும், இளைஞிகளும், நடுத்தரவயதினரும், முதுமை அடைந்தவர்களும், குழந்தைகளும் போர்வை, கூடாரம். காபி, சிகரட்,பியர், பர்கர், ஆகியவற்றுடன் செட்டில் ஆகி தவம் செய்து கொண்டிருந்தனர். சில இடங்களில் க்ளைமாக்ஸ் காலை 7 மணி சில இடங்களில் 8 மணி மற்றும் வேறிடத்தில் 10 மணி.

காலை எழு மணிக்கு வாசல் திறந்தவுடன் கடவுளை கண்ட பரவசத்தில் கூட்டம் வீ..வீ..வீ என கரகோஷம் இட்டது.

Photobucket - Video and Image Hosting

இது என்ன கடவுள்...

Nintendo வின் புதிய வீடியோ கேம் கன்சோல் Wii வெளியீட்டிற்குதான் இவ்வளவு ஆர்பாட்டம். முந்தாநாள் சோனியின் புது கடவுள் Playstation 3 அவதரித்தார். அப்போது மக்கள் 3 நாட்கள் தவமிருந்தனர், அமெரிக்காவில் கலவரம் வெடித்து போலீஸ் தடியடி ப்ரோயொகம் செய்ய வேண்டியிருந்தது.

இந்த கடவுளை காண மார்க்ஸீயம் முதல் மாடர்ன் ஆர்ட் வரை பேசும் என் மகன் போனதால் தான் எனக்கு இந்த விவரங்கள் தெரியவந்தது.

Photobucket - Video and Image Hosting
புதிய கனவுகளை காண கடும் குளிரில் பக்தர்கள்



இந்த மார்கெட்டிங் ஆசாமிகள் செய்யும் தந்திரம் இது.

அவர்களின் ப்ராடெக்ட்களை கடவுள் ரேஞ்சுக்கு ஏற்றி அதன் விற்பனையை திருவிழா மாதிரி நடத்தி அவர்களின் விற்பனையை பெருக்குகிறார்கள்

இந்த மாதிரி உலகின் புதிய கடவுள்களை படைக்கும் மனிதனே மிக அறிந்தவன்

23 comments:

said...

இந்த மாதிரி ஒரு பதிவை போட்டுட்டு,மகனிடம் காண்பித்துவிட்டு முதலில் "கடவுளோட" விளையாட திட்டமா?
:-))

said...

சிவா,

2006ல் சோனியின் Playstation 3 மக்களை தேவுடுகாக்க வைத்த சாதனையை இதயதெய்வம் எப்போதோ செய்ய வைத்துவிட்டார்! விஞ்ஞானி முருகனாக உலகம் சுற்றும் வாலிபனில்!

said...

சிவா அண்ணா. ஒரு பத்து பதினைந்து பதிவுகளில் சொல்ல வேண்டியதை இங்கே ஒரே பதிவுல சொல்லிட்டீங்க. தாங்க்ஸ்கிவ்விங் மறு நாள் கடை படையெடுப்பைப் பார்த்து பொங்கிடுச்சு போல. எங்களுங்கு இந்த வார வியாழன் தான் தாங்க்ஸ் கிவ்விங். இந்தப் புதிய கடவுளைப் பார்க்க இந்த வெள்ளிக்கிழமை போவதா வேண்டாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். போனாலும் போவேன். ஆனால் அதிகாலையில் இல்லை. மெதுவாக எழுந்து ஒரு எட்டு மணி போல. :-)

said...

குமார்,

கடவுளிடம் விளையாடிவிட்டேன். நன்றாக உள்ளது.
வித்தியாசமான டெக்னாலஜி.
நிஜமாகவே டென்னிஸ் ஆடுவது போல் கையைவீசி ஓடி ஓடி ஆட வேண்டியுள்ளது

said...

ஹரி, அதையும் சொல்லிவிட்டேனே....

இதய தெய்வம் படமான "கணவன்" ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான மதுரை தங்கத்தில் திரையிட்டபோது, கூட்ட நெரிசலில் உயிர் தியாகம் செய்த திராவிட செம்மல்கள் வளர்ந்த மதுரையில் பிறந்ததை எண்ணி எண்ணி பெருமை கொள்கிறேன்

said...

குமரன், இது தாங்ஸ் கிவிங் படையெடுப்பு அல்ல.

ரிலீஸ் ஆகும் கன்சோலை முழு விலை கொடுத்து வாங்க தவமிருக்கும் கூட்டம். இந்த கன்சோல் அடுத்த மாதம் பாதி விலைக்கு கூவி கூவி விற்பார்கள்

said...

சே. முழு பதிவையும் படித்து விட்டு கடைசி படம் வந்தவுடன் சரியாகப் படிக்காமல் நானே இது தாங்க்ஸ்கிவிங்க் கூட்டம் என்று எண்ணிக் கொண்டுவிட்டேன். மன்னிக்கவும் சிவா அண்ணா. :-)

said...

Siva

Sivabalan has already used this title in his previous blog:-))

I have never bought these consoles. But as you said its a pretty good marketing technique.

If we resist the temptation and can buy them after a month or so, there wont be any crowd.But teens will not choose to wait:-))

said...

சிவாண்ணா,
//சோனியின் புது கடவுள் Playstation 3 அவதரித்தார்//
நியுயார்க்கில் கண் குளிரக் கண்டேன்!
கண்ணு மட்டுமா குளிருச்சு! உடம்பே படபட என்று தந்தியடிக்க, பாத்தா, முதல் தரிசனம் யாருக்க்குத் தெரியுமா...3 நாளா tent போட்டு உக்காந்து இருக்க்காங்க ஒரு அஞ்சு ஆறு பேரு! அவிங்களுக்குத் தான் முதல் தரிசனம்! அடப்பாவிங்களா, Office-இல் வெகேஷன் எடுத்து, இங்க வந்து டென்டுக்குள்ள தவம் கிடந்தா, கடவுள் தோணுவாரு போல!

அது சரி, அது என்ன பீம புஷ்டி அல்வா? மெட்ராசுல மேற்படி சமாச்சாரம் கிடைக்குமா?

படத்துல அழகரு சூப்பர்!

said...

கண்ண்பிரான்,

பீமபுஷ்டி அல்வா என்பது பிராண்ட் நேம். அந்த அல்வாவை சாப்பிட்டால் பீமன் போல் பலம் வருமாம், ஒரு வண்டியில் சுமார் இரண்டடி உயரத்திற்கு அல்வா இருக்கும். அதை பட்டா கத்தியில் வெட்டி வெட்டி எடை போட்டு தருவார்.

வெகுகாலத்திற்கு முன் மதுரை புது மண்டபம் நுழை வாயிலில் ஒரு கடை இருந்தது.

மதுரைகாரர்கள் சொல்ல வேண்டும்.

மதுரை தெற்குமாசி வீதி ஆரியபவானில் கிடைக்கும் கோதுமை அல்வா பல்லுக்கு ஜவ்வு என்றால் சோன் அல்வா பல்லின் பலத்தை பதம் பார்க்கும். ஆனால் இரண்டும் செம டேஸ்ட்.

said...

சிவா, நல்ல பதிவு. அழகரில் தொடங்கி PS3 வரை ஒரு ரவுண்டு வந்துவிட்டீர்கள். Nintendo மற்றும் சோனியின் கேம் கன்சோல்கள் டிஜிட்டல் அற்புதம். அற்புத தரிசனம் காண பக்தர்கள் அலைமோதுவதில் ஆச்சரியம் என்ன?

முழுப்பதிவையும் படித்து முடித்தபோது Zen and the Art of Motorcycle Mechanism நூலில் வரும் Robert Pirsig ன் இந்த அருமையான quote நினைவுக்கு வந்தது -

The Buddha resides as comfortably in the circuits of a digital computer or the gears of a cycle transmission as he does at the top of a mountain.

said...

//
If we resist the temptation and can buy them after a month or so, there wont be any crowd.But teens will not choose to wait:-))
//

South park என்ற TV serial தான் நினைவுக்கு வருகிறது செல்வன் அவர்களே.

10 வது சீசனைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் 10th season எபிசோட் 12 (Go God Go XII) பார்த்தீர்கள் என்றால் இதே பிரச்சனை தான்.

புதிய நிண்டெண்டோ வீ க்காக காத்திருக்க முடியாமல் எரிக் கார்ட்மென் தன்னை Freeze செய்துகொள்வான். 500 வருடம் கழித்து தான் De freeze செய்யப்படுவான்.

said...

ஜடாயு, சரியாக சொன்னீர்கள். இந்த பதிவின் நோக்கமே அதுதான். நாம் ஆனந்தம் அடைவது தான் நோக்கம் அது பரமபத வாசலாய் இருந்தால் என்ன? நிந்டோண்டோ வீ ஆக இருந்தால் என்ன?

காலம் மாற மாற பரவசங்களும் மாறுகின்றன.

மாற்றம் மட்டுமே நிரந்தரம் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

என்றேன்றும் விரியும் ப்ரபஞ்சம் அது கள்ளழகரில் ஆரம்பித்து வீ வரை வந்திருக்கிறது எனக்கு.

முற்று புள்ளிகள் இல்லை என்றுமே கமா தாம்

said...

வஜ்ரா, இதுபோல் இஸ்ரேலிலும் உண்டா?

said...

பண்டிகைப் பரவசங்களோடு நிறுத்திக்கிட்டேன்.
மத்ததெல்லாம் 'சீ' படும் விலைக்கு வரும்போது பார்க்கணும்:-)))

said...

//
வஜ்ரா, இதுபோல் இஸ்ரேலிலும் உண்டா?
//

ஒரே கடவுள் கொள்கையின் பிறப்பிடமான இஸ்ரேலில் ஜெஹோவாவைத் தவிர வேறு கடவுளில்லை. :D

Jokes apart, Play station, Nintendo Wii, பித்தர்கள் இல்லாத இடம் ஏது. ?

வரிசையில் முந்தா நாள் ரத்திரியே நிற்பது கொஞ்சம் ஓவர் என்றாலும் அது போல் இங்கும் நடக்கிறது.

said...

துளசி மேடம், உங்க ஊரிலேதான் உலகின் முதல் பொருள் கிடைக்கும் ஏனென்றால் அங்குதான் உலகின் முதல் நாள் ஆரம்பமாகிறது

said...

வஜ்ரா, பித்தர்கள் நிறைந்த உலகமிது

said...

கால்கரிசிவா....

மதுரை பற்றி படித்ததும் உடம்பில் ஒரு சிலிர்ப்பு, அப்படியே மதுரை மக்களின் வாழ்க்கைய ஒரு பதிவா தந்துட்டிங்க தலைவா!....மிக்க நன்றி....

உண்மையான ஒரு அனுவஸ்த்தனிடம் மட்டுமே இந்த வர்ணிப்பு வரும்.....அனுபவித்து வாழ்ந்து, அதற்காக ஏங்குவது, அதனை நினைத்து வாழ்வது ஒருவிதமான ரசிப்பு, அது நன்றாக வந்திருக்கிறது உங்கள் எழுத்தில்....

நீங்கள் சொல்லிய அந்த அல்வா கடை (புது மண்டபம் அருகில்)பேயரும் பிரேம விலாஸ் தான் அதுதான் முதல் கடையும் கூட....அங்கு கிடைக்கும் மசாலா ஆகா, ஆகா...

said...

இது போல மீனாக்ஷி கோவில் பற்றி ஒரு பதிவிட்டால் நன்றாக இருக்கும்..

said...

மௌல்ஸ், மிக்க நன்றி.

மீனாட்சி அம்மன் கோவிலுடன் ஒரு நீண்ட பந்தம் உண்டு எனக்கு.

நாங்கள் வாழ்ந்த வீட்டிலிருந்து தெற்கு கோபுரம் மிக நன்றாக தெரியும்.

காலை மாலை இரவு என சதாகாலமும் கோபுர தரிசனம் தான்.

சிறுவயதில் எங்கள் விளையாட்டு மைதானம், படிப்பறை எல்லாமே கோவில்தான்.

கூடிய விரைவில் அம்மன் கோவில் அனுபவங்கள் உங்கள் வேண்டுகோளை மேற்கொண்டு....

said...

நன்றி சிவா...ஆவலுடன் காத்திருக்கிறேன்....

said...

omg i dint knew u write so well :) awesome! i cdnt take my eyes off jus read in a go! y did u stop u sd continue this write more dadha