Tuesday, February 27, 2007

AC-360


நேற்று ஆண்டர்ஸன் கூப்பரின் AC-360 நிகழ்ச்சியில் கணிசமான இடத்தைப் பெற்றது இரண்டு செய்திகள்

முதல் செய்தி இயேசு குடும்பத்தாரின் கல்லறைப் பற்றிய ஜேம்ஸ் காமரூனின் ஆவணப்படம். எழிலும் இதைப் பற்றி இரண்டு பதிவுகளை பதிந்துள்ளார். இந்த படம் கிருத்துவத்தின் ஆணி வேரை அசைக்கும் அளவிற்கு செய்திகள் கொண்டவை என விவாதித்தார்கள். இந்த விவாதத்தில் மத குருமார்கள், விஞ்ஞானிகள், நிருபர்கள் பங்கு கொண்டனர். விவாதம் ஒரு அறிவாளித்தனத்துடன் நடந்தது. இது இயேசுவின் எலும்பா? இதனால் கிருத்துவம் ஆட்டம் காணுமா என்பதில் என் கருத்து எதுவும் இல்லை. ஆனால் மக்கள் அதை எதிர்கொண்ட விதம் என்னை பொறாமை கொள்ள செய்தது. அமைதியாகவும் காரசாரமாகவும் விவாதித்தார்கள் வன்முறை வெடிக்கவில்லை.

ஆனால் நம் நாட்டில் ஜட்டியில் ராமர் படம் போட்ட பிரான்ஸ் கம்பெனிக்கு எதிர்ப்பு தெரிவித்து நம் நாட்டின் பஸ்ஸை உடைப்பார்கள்.

இஸ்லாமிஸ்டுகளுக்கு சொல்லவே வேண்டாம் முகமதுவின் படத்திற்கு செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமா? கடைசியில் என்ன நடந்தது எல்லாரும் அந்த படத்தைப் பார்த்தார்கள்.

டாவின்சி கோட் படத்தை தடை செய்தது நம் மத சார்பற்ற அரசு ஆனால் அதன் டிவிடி விற்பனையை உயர்த்தி கொள்ளை லாபம் சம்பாதித்தென்னவோ இதே அரசியல் வாதிகள்தான்

சரி, கிறிஸ்துமஸ் போதும் ஈஸ்டர் போதும் இந்த மாதிரி படங்கள் ஏன் வருகின்றன? எல்லாம் பணத்திற்கு தான். இந்த நேரங்களில் மக்கள் இயேசுவை நினைப்பார்கள் அப்போது இந்த மாதிரி படங்களை வெளியிட்டால் மில்லியன்களை சுலபமாக தேற்றலாம்.

இராண்டாயிரம் வருட இரண்டு பில்லியன் மக்களின் நம்பிக்கையை இந்த மாதிரி படங்கள் மாற்ற போவதில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது.

ஆனால் இந்த மாதிரி விவாதங்கள் அவசியம் என்பது என் அபிப்ராயம் . உண்மைகளை அறிய மனித மனம் மேற்கொள்ளும் ப்ரயத்தனங்கள் எத்தனை.... எத்தனை.......


அடுத்த செய்தி மாவீரன், பேட்டை ரவுடி, கூலிக்கு மாரடிக்கும் முஷாரப்பைப் பற்றியது.


இது சற்று வீரமானது.

இதுவரைக்கும் 10 பில்லியன் டாலர்களை தந்துவிட்டோம் இந்த முஷாரப் ஏன் இன்னும் தீவிரவாதிகளை டெலிவரி செய்யவில்லை என சட்டையை பிடித்து கேட்கிறது இந்த ரிப்போர்ட்.

நம் தோழர் என்கிறோம், அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்த நாட்டை அவ்வளவாக நாம் கண்டிப்பதில்லை, பில்லியன்களை கொட்டி உதவுகிறோம் ஆனால் தீவிரவாதிகளை இவர்கள் நாட்டில் இன்னும் சகல வசதிகளுடன் வாழ்கிறார்கள். நம் வரிப்பணத்தில் இவர்கள் உண்டு களிக்கிறார்கள் நாம் என்ன இளிச்சவாயர்களா? என அமெரிக்கர்களை உசுப்பேத்துகிறார் ஆண்டர்ஸன்.

ஆண்டர்ஸன் கூப்பர் போன்ற தேசப்பற்றுமிக்க பத்திரிக்கையாளர்கள் நம்நாட்டில் இல்லாதது நாம் செய்த துரதிருஷ்டமே.

ஆண்டர்ஸன் கூப்பர் வாழ்க

Monday, February 26, 2007

0 டிகிரியிலிருந்து 180 டிகிரிக்கு

மு.கு. : சாய் பாபா பற்றி பதிவு வந்ததும் அதற்கு எதிர் பதிவு என்னிடம் இருந்து வரும் என பல பதிவளார்கள் நினைத்தது எனக்கு தெரிந்தது. அதனால்தான் இந்த பதிவு.

சாரு நிவேதிதா தமிழ் எழுத்துலகில் பின்நவீனத்துவத்தை எழுதுவதில் முன்னோடி. இவரின் சென்னை அனுபவங்கள் விரும்பி படிப்பேன் ஏனென்றால் என் அனுபவத்தை படித்தது போலிருக்கும். இவரும் நான் அடிக்கடி சென்று வந்த பார்களைப் பற்றியும் உணவு விடுதிகளையும் பற்றியும் எழுதியுள்ளார். இவர் வீடும் சென்னையில் எங்கள் வீட்டிற்கு அருகில்தான். இவர் வாக்கிங் போவதை பார்த்திருக்கிறேன். இவரிடம் பேச நினைத்துண்டு ஆனால் இவர் அதை விரும்பவில்லை என ஒரு முறை எழுதியிருந்தார். அதனால் பேசவில்லை. இவர் எழுதும் பொலிவிய நாட்டு இலக்கியங்களும், இசைபற்றிய கட்டுரைகளும் மற்றும் இவரின் இணைய காதலிகளின் சாட்களும் என் மிடில் கிளாஸ் மூளைக்கு எட்டாது.

இவர் சாய்பாபாவைப் பற்றி எழுதிய கோணல்பக்கங்கள் படிக்கநேர்ந்தது. அதை தமிழ் உள்ளங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

அந்த பதிவில் அவர் கூறுகிறார் " "பாபா இதையெல்லாம் (மோதிரத்தை) சட்டைக்குள்ளிலிருந்து எடுக்கிறார்" என சில பகுத்தறிவாளர்கள் கூறுவதை கேட்டிருக்கிறேன் அப்படியென்றால் பாபா ஒரு தங்க மலையை தன் சட்டைக்குள் வைத்திருக்கவேண்டும்"

சாய் பாபா பஜனைகள் பாடும் போது உபநிடத சுலோகங்களை பாடி முடிப்பார்கள். அதை சமசுகிருதத்தில் தந்தால் எதையும் தாங்கும் இதயங்கள் தாங்காதல்லவா ஆகையால் செந்தமிழில் இதோ

பொய்மையிலிருந்து உண்மைக்கு
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு
மரணத்திலிருந்து முக்திற்கு

கடைசியாக சாருவிற்கு

0 டிகிரியிலிருந்து 180 டிகிரிக்கு

------------------------------------------------------------------------------------------------
பி.கு தலைவா சாரு, அடுத்த முறை நான் சென்னை வரும்போது என் போன்ற இலக்கிய தற்குறிகளுடன் பேசுவீர்களா?. தங்களுக்கு பிடித்த விரால் மீன் குழம்பு எனக்கும் பிடிக்கும் சாய் பாபாவும் பிடிக்கும்

Friday, February 16, 2007

ஆன்மிகம் ஆனந்தமானது...

இன்று சிவராத்திரி. சிறுவயதில் மதுரை தெற்காவணி மூல தெருவில் திரு குன்னக்குடி வைத்தியநாதரின் வயலின் இசையை இரவு முழுக்க கேட்டு ஆனந்தமடைந்திருக்கிறேன்.

பிறகு அரேபிய பாலைவனத்தில் காபிரல்லாதவர்களின் நடுவில், மற்றவர்கள் பயந்து பயந்து இருக்க நான் ஆனந்தமாக இரவு முழுக்க சிவராத்திரி பஜனை மற்றும் அபிஷேகங்களை வீட்டில் நடத்தியிருக்கிறேன்.

பஜன் நடக்கும் போது அவ்வப்போது இஞ்சி ஏலக்காய் டீ, சுக்கு மல்லி காப்பிகளை தயாரித்து மக்களுக்கு விநியோகம் செய்திருக்கிறேன்.

இன்றைய ராத்திரி கால்கரியில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பக்தர்கள் நடத்தும் பஜனையில் கலந்து கொள்ள முடிவெடுத்துள்ளேன். ஸ்ரீஸ்ரீ " ஆன்மிகம் என்பது ஏன் இறுக்கமாக இருக்கவேண்டும். ஆனந்தமாக பாடி நடனமாடி சந்தோஷமாக ஆன்மிகத்தை பெறலாமே" என்று கூறுவார். பார்க்க ஸ்ரீஸ்ரீ பக்தர்கள் கொண்டாடும் வீடியோவை:




ஆன்மிகம் ஆனந்தமானது. நம்முள் இருக்கும் இறைவனை நாம் உணரும் போது கிடைக்கும் இன்பம் அளவிட முடியாது. பகலென்ன இரவென்ன அந்த ஆனந்ததிற்கு தடை கிடையாது. தங்கு தடையின்று ஆனந்த வெள்ளத்தில் நீந்த ஆன்மிகமன்றி வேறின்பம் ஏது இதைத் தான் முன்னோர்கள் பேரின்பனம் என்பார்களா?

இங்கே பாரதியாரின் பாடலை மனதிற்குள் பாடிக்கொண்டேன்.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் -
எங்கள் இறைவா! இறைவா! இறைவா!

சித்தினை அசித்துடன் இணைத்தாய் -
அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்.
அத்தனையுலகமும் வர்ணக்களஞ்சியமாகப்
பலபல நல்லழகுகள் சமைத்தாய். (ஓ- எத்தனை)

முக்தியென்றொருநிலை சமைத்தாய் -
அங்கு முழுதினையுமுணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலைவகுத்தாய் -
எங்கள பரமா! பரமா! பரமா! (ஓ - எத்தனை)

இந்த பாடலை என் அபிமான பாடகர் திரு உன்னிகிருஷ்ணன் குரலில் கேட்க
இங்கே

இசைக்குயில் பாடியதை கேட்க இங்கே

சின்னகுயில் மஹாநதி ஷோபனா பாடியதை கேட்க இங்கே

Friday, February 09, 2007

மனத்தளர்வு

தடைகள் இல்லாத பயணம் உற்சாகமாக இருக்கும். சோம்பல் இருக்காது. புத்துணர்வும் அமைதியும் நிறைந்த பயணமாக இருக்கும்.

அதே போல் தான் வாழ்க்கையும்.

மனத்தடைகள் இல்லாத வாழ்க்கை அற்புதமானது. மனத்தடைகள் நமக்கு எங்கிருந்து வருகின்றன. முதலில் வீட்டிலிருந்து பிறகு பள்ளியில், சுற்றம், நட்பு இவர்களிடமிருந்து. இதைத்தான் ஒஷோ "பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை உங்களிடமிருந்து காப்பாற்றுங்கள்" என்றார். உலகில் அனைவரும் தங்கள் மனத்தடைகளை மற்றவர்கள் மேல் திணிப்பதில் மும்முரமாக உள்ளார்கள்.

ஒரு சாரர் குழந்தை பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தவுடன் இதை செய்யாதே அதை செய்யாதே என எல்லாவற்றுக்குக் தடை செய்துக் கொண்டே இருப்பார்கள்.

இன்னொரு சாரர் மியூசிக், காரத்தே, கிரிக்கெட், ஹிந்தி, டியூசன் என ஓய்வில்லாமால் குழந்தையை ஓட்டிக் கொண்டே இருப்பார்கள். சதாகாலம் டென்ஷன்தான். இந்த பெற்றோர்கள் வெளிநாடு வந்தும் இங்குள்ள அமைதியான வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதில்லை. குழந்தைகளுக்கு பாட்ம் கம்மியாக இருக்கிறது என புலம்பி கொண்டே இருப்பார்கள்.

இவ்வாறு வளரும் குழந்தைகள், ஓடி ஓடி அலைந்து அல்லாடி கூடிய சீக்கிரம் உடல் தளர்வடைவதை போல் மனதளர்வை சீக்கிரம் அடைகின்றனர். இதை மன அழுத்தம் அல்லது டிப்ரஷன் என்றும் அழைப்பர். (கிளினிக்கல் டிப்ரஷனுக்கு காரணம் மூளயில் சுரக்கும் சில இரசாயன திரவங்கள் சமநிலை தவறுவதால் ஏற்படுகிறது. இதற்கு மாத்திரைகள் மருந்துகள் உண்டு. அது வேறு விஷயம்.)

நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களயும் சந்தோஷமாக வைத்திருந்தால் மனத்தளர்விற்கு வாய்ப்பு ஏது?

மனம் தளர்வடையாமல் இருக்க சில யோசனைகள்:

1. உங்களுக்கு பிடித்த வேலையை அல்லது படிப்பை தேர்ந்தெடுங்கள்.

2. பிடித்தவேலை கிடைக்கவில்லை அல்லது மிக அசாதரண திறமை இல்லை என்ன செய்வது? வாழ ஒரு வேலை கிடைக்காமலா போய்விடும். கிடைக்கும். அங்கே சேர்ந்து அங்குள்ளவர்களை மகிழ்ச்சி படுத்துங்கள்.

3.உங்களுகாக உங்களுகாகவே ஒரு நாளில் ஒரு மணி நேரத்தை ஒதுக்கி தனியாக இருங்கள். தனிமையை அனுபவியுங்கள். மனம் ஓய்வு எடுத்துக் கொள்ளும். மகிழ்ச்சி தானக வரும்

4. எதிர்காலம் பற்றிய பயத்தை விடுங்கள். தாங்கள் செய்யும் வேலையை முழு மனதுடன் இன்றே செய்யுங்கள். எதிர்காலம் இன்று போல் நன்றாக தான் இருக்கும்

5. உங்கள் குழந்தைகள அவர்கள் மனம் போல் வளரவிடுங்கள். தவறான வழியில் போனால் மட்டுமே அவர்களை நல்வழி படுத்துங்கள். அதுவும் அன்பாக பேசி

இப்போது அனுபவம்:

கோபால் என்ன தான் முயற்சித்தாலும் கணக்கு வரவே இல்லை.
ஆனால் அழகாக படம் வரைவான். உங்களைப் பார்த்தால் உங்களை போட்டோ எடுப்பது போல் வரைந்துவிடுவான்.

பென்சில், சாக்கு, கரி ஏன் உளி கொண்டு கட்டையில் கூட வரைந்துவிடுவான். ஆனால் விட்டார்களா அவனை...... வீட்டில் கரித்துக் கொட்டிவிட்டார்கள். பக்கத்து வீட்டு பையன்கள் ஐஐடி பிட்ஸ் அண்ணா என போனபோது இவன் கரஸ்ஸில் லிட் படித்தான். ஆங்கிலத்திலும் நாம்மாளுக்கு புலமை அதிகம். அட்வர்டைசிங் கம்பெனியில் சின்ன ஆர்ட்டிஸ்ட் என ஆரம்பித்து காப்பி ரைட்டர் வரைக்கும் உயர்ந்தான். கம்யூட்டர் வந்தது அதில் கிராபிக்ஸ் அனிமேஷன் என தூள் கிளப்பி இவன் தவறவிட்ட, ஐஐடி அண்ணாவில் படித்த நண்பர்கள் சென்ற, அமெரிக்காவிற்கு சென்று அவர்களை விட அதிகம் சம்பாதிக்கிறான். இப்போது பெற்றோரும் சுற்றாரும் போற்றுகின்றனர். ஆனால் அவன் பட்ட அவமானங்கள் எத்தனை?

அப்பப்பா... சின்ன வயதில் அவனை அவன் வழியில் விட்டிருந்தால் அவன் இன்னும் சிறப்பாக வந்திருப்பான்.

மனத்தடைகளை களைந்து மனத்தளர்வுகள் இன்றி அமைதியான மகிழ்ச்சியான வாழ்கையை வாழுவோம்

பி.கு.

சுவாமி சுகபோதனந்தா, நித்தியானந்தா, சுகி.சிவம் போன்றவர்களுக்கு போட்டியாக வரவில்லை. ;))))

சிலா கார்பரேட் மொரேல் பூஸ்டர் செமினார்களில் பங்கு கொண்டதின் விளைவு.

எல்லா பசங்களும் நம் கீதை, யோகா, உபநிடதங்கள் இவற்றிலிருந்து தத்துவங்களை எடுத்து அழகாக கையாளுகின்றனர்.

5 நட்சத்திர ஓட்டல்களில் தங்கி நம் நாட்டின் தத்துவங்களை இவர்கள் மூலம் அறிந்து வியக்கிறோம்.

உம்ம்ம்..... "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கொங்கோ அலைகின்றாய் ஞான தங்கமே" என்ற பாடல் மனதில் ஓடியது

Tuesday, February 06, 2007

மனத்தடைகள்

சில பேருக்கு சில நேரங்களில் சில மனதடைகள் இருக்கும். மனத்தடை என்பது என்ன? ஆங்கிலத்தில் mental block என வைத்துக் கொள்ளலாம். ஒரு இடத்தைப் பற்றியோ அல்லது ஒரு உணவைப் பற்றியோ அல்லது சில பேரின் உருவங்களைப் பார்த்து அவர்களை பற்றியோ ஒரு மனத்தடையை ஏற்படுத்தி கொள்வார்கள்.

எனக்கு இந்த சூஷி பற்றி ஒரு மனத்தடை. அது வேகவைக்காத மீனால் ஆன உணவு பொருள் என்று. பொதுவாக ஸீ புட்களைப் பார்த்தலே அது நாறும் என்ற மனத்தடை எனக்கு உள்ளது.

என் அனுபவத்தில் நான் பார்த்த மனத்தடைகள் :

கடந்த வருடம் துபாய் ஏர்போர்ட்டில் சென்னை கனெக்டிங் பிளைட்டை தவறவிட்டு அடுத்த பிளைட்டிற்காக சுமார் 6 மணிநேரம் காக்க வேண்டியிருந்தது. கணிணியில் தமிழ் வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு தமிழ் இளைஞர் அறிமுகமாகமானர். அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஈமெயில் பார்க்க என் கணிணியைக் கொடுத்தேன். இலவசமாக உணவு கிடைத்தது. அங்கே நானும் அவரும் சென்று ஸ்டார்ட்டர்களான சமோசாவையும் ஒரு கிளாசில் ஜூஸும் எடுத்துக் கொண்டு அமர்ந்தோம். சமோசாவை நான் கடிக்க எத்தனிக்கும் போது. அந்த இளைஞர் நிறுத்துங்கள் என கத்திவிட்டார். ஏன் என்றேன் இது சிக்கன் சமோசா என்றார். அதனால் என்ன என்றேன். அவர் நீங்கள் சிக்கன் சாப்பிட மாட்டீர்களே என்றார். நான் உங்களைப் பார்த்து 1 மணிநேரம் தான் ஆகிறது. நான் சிக்கன் சாப்பிட மாட்டேன் என சொன்னமாதிரி எனக்கு ஞாபகமில்லையே என்றேன். இல்லை சார் உங்களைப்பார்த்தால் நான் வெஜ் சாப்பிடுபவர் மாதிரி இல்லையே என்றார். அவருக்கு நான் பிராமணராக இருப்பேன் என மனத்தடை. இந்த மாதிரி உருவ அமைப்பு உள்ளவர்கள் பிராமணர்களாகத்தான் இருப்பார்கள் என அவரின் மனத்தடை.

இன்னொருவர் இவர் வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். நல்ல உயரம். உயரத்திற்கு ஏற்ற பருமன். கரிய நிறம். இவருடன் ஹூஸ்டனில் ஒரு ஓட்டலுக்கு போனேன். நீ தண்ணியடி ஆனால் பாரில் வேண்டாம் ரெஸ்டாரண்டில் அடிக்கலாம் என்றார். நானும் சரியென்று ஒரு பீரும் சைட் டிஷ்ஷிற்கு சிக்கன் விங்க்ஸும் ஆர்டர் செய்தேன். அவர் சிக்கன் விங்ஸை என்னுடன் பகிர்ந்துக் கொள்வதாயும் குடிக்க கோக் பாட்டில் அல்லது கேனில் வேண்டும் கிளாஸில் வேண்டாம் என பல முறை அந்த பெண்ணிடம் கேட்டுக் கொண்டார். ஆர்டர் செய்தவுடன் அவர் தன்னை ஒரு டீ டொடலர் என்று சொல்லிக் கொண்டார். சிகரட் வாசனை ஆல்கஹால் வாசனை அறவே பிடிக்காது என்றார். அயிட்டங்கள் வந்தன அவருக்கு கோக் கிளாசில் வந்தது. மனிதர் கொதித்து விட்டார். சர்வரியும் அங்கே ட்ராப்ட் கோக் மட்டும் உள்ளது பாட்டிலோ / கேனோ இல்லை என்றார். கடைசியாக ஒரு பேப்பர் டம்ளரில் கோக்கை குடித்தார். நானும் ஏன்... ஏன் எனக் கேட்டேன். அவரிடமிருந்து வந்த பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது. கிளாஸில் ஆல்கஹால் ஒட்டியிருக்க வாய்ப்பிருக்குமாம் அதனால் வெளியே வந்தால் கிளாஸில் எந்த பானமும் குடிக்க மாட்டாராம். எங்கு போய் முட்டிக் கொள்வது. ஆல்கஹால் தண்ணீரில் இரண்டற கலக்கும் குறைந்த வெப்பநிலையில் ஆவி ஆகிவிடும். இங்கே ரெஸ்டராண்டுகளில் கிளாஸ் பாத்திரம் கழுவும் மெசினில் நன்றாக கழுவி சுடு காற்றால் காயவைப்பார்கள். ஆல்கஹால் இருக்க வாய்ப்பில்லை. வேதியியலில் டாக்டர் பட்டம் வாங்கியவருக்கு நான் சொல்லத் தேவையில்லை. சிக்கன் விங்ஸ் சாப்பிட்டு முடிந்தவுடன் அந்த விங்க்ஸ் வைன் ஊற்றி சமைத்திருப்பார்கள் என்றேன். அவர் பேய் அறைந்தவர் போல் ஆகி விட்டார். ஆல்கஹாலைப் பற்றி அவரின் மனத்தடை சற்று அதிகம்.

நம் வலைப்பதிவுகளில் ஒருவர் இந்து மதத்தைப் பற்றி எழுதிவிட்டாலோ அல்லது கருப்புக் கொடி கேடிகளை தாக்கிவிட்டாலோ அவர் ப்ராமணராகத்தான் இருப்பார் என்பது சிலரின் மனத்தடை.

மனத்தடைகளே மனிதனின் முன்னேற்றத்திற்கான முக்கிய தடை கல்.

மனத்தடைகளை களைவோம் முன்னேறுவோம்