Thursday, April 20, 2006

என் அரேபிய அனுபவங்கள் - 7

கரடி


இது இவருக்கு நாங்கள் இட்ட செல்ல பெயர். இவர் தினமும் காலையில் எங்களிடம் சில டெக்னிகல் கேள்விகளைக் கேட்டு ஒரு காமெடி டைம் நடத்துவார். காமெடி டைம் நடத்துபவர் கவிஞர் கரடிமுத்து அல்லவா? அதை சுருக்கி கரடியாக்கிவிட்டோம்.

இவர் அரபு எமிரேட்டில் ராஸ்-அல்-கைமா என்ற நாட்டை சேர்ந்தவர். இவர் டெலிகம்யுனிகெஷன் துறையிலிருந்து எங்கள் துறைக்கு மாற்றலாகி வரும் போது அந்த துறையில் இருந்தவர்கள் கொண்ட்டாடினர் எனக்கும் ஜாக்கிரதையாக இரு அவன் ஒரு கடியன் என எச்சரிக்கை விடுத்தனர். நான் வழக்கம் போல இதை உதாசீனப் படுத்தினேன்.

கரடியை அன்புடன் அரவணைத்து என்னுடைய டிபார்ட்மெண்டிற்க்கு வரவேற்றேன். ராஸ்-அல்-கைமா அரபு எமிரேட்டில் மிகவும் பிந்தங்கிய நாடு. அங்கே மக்களின் முக்கிய தொழில் மீன் பிடிப்பது சிறு விவசாயம். அவ்வளவுதான். அங்கேயுள்ள இளைஞர்களுக்கு இந்திய இளைஞர்கள் ஒரு ரோல் மாடல். இந்தியர்கள் படித்துவிட்டு நம் அண்டைநாட்டில் இவ்வளவு வசதியாக வாழ்கிறார்கள். நாமும் படிப்போம் என்ற முனைப்போடு படிப்பார்கள். அரசாங்கமும் அவர்களுக்கு நல்ல உதவிசெய்யும். அந்த வகையில் சுமாராக படித்து அங்குள்ள I.T.I போன்ற பள்ளியில் படித்தவன் கரடி. அவன் தன்னை அமீரக இந்தியன் என சொல்லுவதில் பெறுமைக் கொள்வான். ஏனென்றால் உலகிலேயே அதிகமாக படித்தவர் இந்தியர் அமீரகத்தில் அதிகமாக படித்தவர் ராஸ்-அல்-கைமாவினர். ஆகையால் அவர்கள் அமீரக இந்தியர்கள் . இவனுக்கு நான் தொழிலை கைப்பிடித்துக் கற்றுக் கொடுத்தேன். இவனும் என்னை அன்புடன் நடத்தினான். இவன் தான் என்னிடம் அரேபியரிடமிருந்த சமூக ஏற்றதாழ்வுகளை விலாவாரியா விளக்கினான். முஸ்லிம் களிடேயே சுன்னி மற்றும் ஷியா என்று பிரிவு இருப்பது நமக்கு தெரியும். சுன்னி பிரிவில் மேலும் அவர்களுடைய பழங்குடியினர் பேரில் பல குழுக்கள் உள்ளன். ஒவ்வொரு அரேபியர்க்கும் அவருடைய பழங்குடி பெயர் அவருடைய சர் நேமாக இருக்கும். உதாரணம் : அல் சவுத், அல் -நயான், அல்-மக்டூம் போன்ற அரசக் குடும்ப பெயர்கள்.

நம் கரடி மீனவ குடும்பத்தை சேர்ந்தவன். சிறிது கலரும் கம்மி. ஆகையால் இவனை முன்னேற விடாமல் இவர்களில் மேட்டுக்குடியை சேர்ந்தவர்கள் இவனை நசுக்குவதை என்னிடம் சொல்லி புழுங்குவான். நாம் முன் பார்த்த மான் மேட்டுக்குடியை சேர்ந்தவன். கரடிக்கும் மானுக்கும் அடக்கடி சண்டை நடக்கும். இவர்களில் மேட்டுக்குடி பழங்குடியினர் படிப்பு இருக்கிறதோ இல்லையோ சிபாரிசால் இஞ்ஜீனியர், மானேஜர் என்று மேலே போய்க்கொண்டே இருப்பர். சிபாரிசை இவர்கள் வாஸ்தா என அழைப்பர். கரடி ஒத்த வயதுடையவன் கரடியைவிட படிப்பில் குறைந்தவன் மானேஜராக வந்து கரடியை அவன் பிறப்பு, ஊர், தொழில் காட்டி மட்டம் பேசும்போது கரடிக்கு பைத்திய்மே பிடித்துவிடும். காச் மூச் என்று கத்துவான். அப்போது அவனுக்கு ஆறுதல் சொல்லுவேன். எங்கள் நட்பு இறுகியது. நான் இவனுடன் நட்பாக இருந்ததால் அரேபிய மற்ற மேட்டுக்குடியினர் என்னை முறைத்தனர்.

இந்த நிலையில் கருப்பண்ணசாமி என ஒரு மானேஜர் வந்தார். இவருக்கு இந்த பெயர் வரக்காரணம் அவர் கருப்பாக இருப்பது நம்மூர் காவல் தெய்வங்களை போல் எல்லோரும் சரியான நேரத்தில் வருகிறார்களா கேட்டில் நின்று காவலாளி வேலைப் பார்ப்பது. அதனால் அவருக்கு அந்த பெயர்.

இவர் வந்தவுடன் மேட்டுக்குடி அரேபியர்கள் வேறு இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டோ அல்லது வேலையை விட்டோ போய்விட்டனர். இவரும் தன்னுடைய பதவிக்கு சற்றும் தகுதியில்லாத வேலைகளையும் சக தொழிலாளர்களை கண்ட மாதிரி அவமான படுத்தவும் செய்வார்.

இவர் பதவி மிக உயர்ந்த பதவி. நம்மூரில் சதர்ன் ரயில்வே ஜெனரல் மானேஜர் பதவிக்கு சமமானது. இவர் மேட்டுக்குடி அரேபியரை மிகவும் மோசமாக நடத்துவார். இந்தியர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இவர் ஒரு முறை தீடிரென்று தன் சகாக்களுடன் என் அறைக்கு வந்து "என்ன சதாகாலமும் கணிணியில் வேலைசெய்கிறாய்" என என்னை மிரட்டினார்'. நானும் சளைக்காமல் " கணிணி பொறியாளர் கணிணியில்தான் வேலை செய்ய வேண்டும். பம்பில் வேலைசெய்தால் ரிபைனரி வெடிக்கும் " என்று பதிலளித்தேன். இவன் பெரிய பாஷாவாக இருப்பான் போலிருக்கிறதே என்று அரபியில் சொன்னதை கரடி பிறகு என்னிடம் சொன்னான். நணபர்கள் என்னை பாஷா வாக்கிவிட்டனர்.

இந்த கருப்பண்ணசாமி வந்தவுடன் கரடியின் நிலை மாறிவிட்டது. கரடிக்கு பதவி உயர்வு வந்தவுடன் அவன் என்னிடமிருந்து விலக ஆரம்பித்தான். மேலும் கரடி ஊரை சேர்ந்த குசன் என்று எங்காளால் பெயரிடபட்ட ஒருவன் வந்த சேர்ந்தான். அமெரிக்கவில் ஏதோ பேர் தெரியாத கல்லூரியில் படித்தவன். குள்ள்மாக இருப்பான். அமெரிக்காவில் படித்துவிட்டு அமெரிக்காவை சாத்தான் என்பான். ஆகையால் இவனுக்கு நாங்கள் குட்டிசாத்தான் என் பெயரிட்டோம். அது சுருங்கி குசன் ஆகிவிட்டது.

மேலே கருப்பண்ண சாமி கீழே குசன் வந்தவுடன் கரடி ஆளாதிக்க வேலையில் இறங்கிவிட்டான். நணபனாக இருந்தவன் என் மதம், என் நாடு இவைகளைக் காட்டி என்னை வெறுக்கவும் ஒதுக்கவும் ஆரம்பித்தான். இவன் செய்த இந்த துரோகம் தான் அரேபியரைப் பற்றி என்னை மேலும் படிக்க மற்றும் விசாரிக்கத் தூண்டியது.

ஓவ்வொரு பழங்குடியினரும் மற்றவர்களின் குலத்தொழிலைக் காட்டி வெறுக்கின்றனர். இவர்கள் கேவலமாக மதிக்கும் தொழில்கள் : மீனவர், கடற்க்கொள்ளைக்காரர், நாடோடிகள், காவல்காரர்கள், மேலும் பல. ஒருசில பழங்குடியினர் இன்னும் பாலைவனங்களில் நாகரீக வாசனையில்லாமல் அலைகின்ற்னர். ஆனால் இந்நாடுகளின் அரசர்களோ முப்பதாண்டுகளில் பாலைவனத்தை சோலைவனமாக மாற்றிவிட்டோம் என மார்தட்டுகிறார்கள்

சவூதி தம்மாம் தங்க மார்க்கெட்டில் நம் ஆட்கள் தங்க வேட்டை நடத்தும் நேரத்தில் பிச்சை எடுக்கும் சவூதி பெண்மணியை நான் பார்த்துள்ளேன். ஆக அரேபியாவிலும் மக்கள் தத்தம் பிறப்பை வைத்து ஆளாதிக்கம்
செய்கின்றனர். ஆளாதிக்கம் செய்பவர் எந்த மதத்தை சேர்ந்தவராயினும் கண்டிக்க தகுந்தவர்களே.

அரேபியரிடம் உள்ள ஏற்றதாழ்வுகளைப் பற்றி நான் சொன்னது ஒரு tip-of-the iceberg தான். நம்மிடமுள்ள எல்லா சமுதாய அழுக்குகளும் அங்கேயும் உண்டு. மேலும் நம்மிடம் மறைந்துக் கொண்டிருக்கும் கொத்தடிமை முறை அங்கே expat labour என்ற பெயரில் ஜகஜோதியாய் எரிந்து கொண்டிருக்கிறது.

அடுத்து சமய போலீஸ்களைப் பற்றி......

6 comments:

said...

இந்த பதிவுக்கு டெம்ப்ளேட் எதுவும் கிடையாதா என்ன?:-))))

முருகன்

said...

சிவா, படிக்க ரொம்ப இன்ட்ரெஸ்ட்டா இருக்கு! அர்பிக்கூட நெருங்கி பழகி எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. நீங்க சொன்ன மாதிரி ராஸ்-அல்-கைமா ஒரு பின்தங்கிய மாகாணம் எமிரேட்ஸ்ல, ஆனா அங்க எண்ணைய் வளம் இல்லாத தாலே, தொழில் தொடங்க அரசாங்கத்திடம் இருந்து நிறைய சலுகைகள் உண்டு. ஆனா அந்த ஊரு பசங்க மகா சோம்பேறிங்க! எனக்கு தெரிஞ்சு அந்த ஊரு ஆளை ஸ்பான்ஸரா வச்சு அங்க ஒரு கம்பெனி ஆரம்பிச்சு நடத்தின என்னோட மலையாள ஃபிரண்டு எனக்கு நல்லா தெரியும். அங்கிருந்து மாசமாசம் அந்த சோம்பேறி ஸ்பான்சர் பை நிறைய பேரீச்சம் பழம் கொண்டாந்து கொடுத்துட்டு கட்டு கட்டா திராம் வாங்கிட்டு போவான் என் ஃப்ரண்டுகிட்ட! சும்மா தூங்கி வழியும் பிஸனஸ் பார்ட்னர். அந்த ஊருக்காரனை சேர்த்துக்காம எந்த பிஸனஸும் பண்ண முடியாது, அதான் சோகம்(:- உழைக்கிறவன் நம்மூரு ஆளு, உட்கார்ந்து சாப்பிடுற பசங்க அவெங்க!

said...

இல்லை முருகன்.

said...

நல்ல பதிவு சிவா.
மனுஷர்களோட அடிப்படை குணம் எளியோரை வாட்டுதல் உலகம் எங்கும் பரவலா இருக்கு.
அதுக்கு எதாவது சாக்கு வேணும்.

said...

வெளிகண்ட நாதரே,

நான் வேலைப் பாத்தது அரசாங்க கம்பெனி. அங்கே அரபிகள் அதிகம். என்ன இன்னும் அரபி பேச வரவில்லை.

யுஏஇ அரேபியர்கள் சவூதி குவைத்தினரை விட மென்மையானவர்கள். நான் சவூதியில் இருக்கும் போது நான் பழகிய அரேபியர்கள் மிக உயர்ந்த இனத்தை சேர்ந்தவர்கள். அதிக திமிரும் உடையவர்கள்.

said...

இஸ்லாமியரில் ஜாதிகள்ப் பற்றி என் நண்பர் ஷங்கர் அவருடைய பதிவில் எழுதியிருக்கிறார். அதைப் படிக்க http://sankarmanicka.blogspot.com/