Wednesday, May 31, 2006

உன்னழகை கண்டு கொண்டால்.... ஒரு பதவுரை

படம் -பூவும் பொட்டும்
பாடகர் - பி.பி ஸ்ரீனிவாஸ்
இசை -கோவர்தனம்
பாடல் -உன்னழகை
உன்னழகை கண்டு கொண்டால்
பெண்களுக்கெ ஆசை வரும்
பெண்களுக்கெ ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வென்

நின்றால் கோயில் சிலை அழகு
நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு
நடந்தால் அன்னத்தின் நடை அழகு
நாடகமாடும் இடை அழகு
அழகில் இது புதுவிதமே
இறைவனுக்கே ரகசியமே
இறைவனுக்கெ ரகசியமே
வசந்தம் வந்தால் கொடிகளிலே
மலரும் மலர்கள் ஆயிரமே மலரும்
மலர்கள் ஆயிரமும் மங்கையின் மலர் போல் ஆவதில்லை
மலர் பறிக்கும் நேரமிது
பொழுது சென்றால் வாடிவிடும்
பொழுது சென்றால் வாடிவிடும்

அருமையான பாடல் இந்த பாடலை கேட்டுக் கொண்டே என் கணிணியை திறந்து இதற்கான பதவுரையை எழுத ஆரம்பித்தேன்.

(பாடல்களுக்கு பதவுரை எழுதுவது என்ன குமரனின் பிறப்புரிமையா. நாமும் முயற்சிப்போம் என).

வரிக்கு வரி எழுதாமல் conceptual ஆக எழுதாலாம் என நினைத்து முதலில் இந்த வரிகளை எடுத்தேன்

உன்னழகை கண்டு கொண்டால்
பெண்களுக்கெ ஆசை வரும்
பெண்களுக்கெ ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வென்

தினவெடுத்த தோள்களயும், பலம் பொருந்திய புஜங்களையும் மீசை அரும்பிய உன்னுடைய முகத்தையும் பார்த்தால் பெண்களுக்கே ஆசைவரும் ஆண்மகனை போல் இருக்கும் உன்னை கண்டால் எனக்கு பேதியாகிறது... என் காதலியே....

இனி அடுத்த பாராகிராப் ட்ட்ட்டைய்ங்.......... சப்பாத்திக் கட்டை தலையில் இடியாக இறங்குகிறது "யோவ் உனக்கு கட்டை போதாது. பிசா மாவை உருட்ட அந்த சூப்பர் மார்க்கெட்டில் பார்த்த இரும்பு உருளை வாங்கவேண்டும்" என கர்ஜிக்கிறது என் நல்ல பாதி அதாங்க Better Half...... (கொத்தனாருடன் சேர்ந்து தமிழ் நன்றாக வளர்ந்து விட்டது )

டிஸ்கிளைமர் : முழுவதும் என் சொந்தக் கருத்து அல்ல

Monday, May 29, 2006

என் அரேபிய அனுபவங்கள் - 10.2

அடிமை சாசனங்கள் எழுதுவதற்க்கு முன் அரசாங்கம் எத்தனை அடிமைகள் வேண்டும் என முடிவு செய்யும்.


இதற்காக ஒரு அமைச்சகம் உண்டு. கம்பெனிகள் அவைகளின் தேவைக்கேற்ப அமைச்சிகத்திடம் இத்தனை இஞ்சினியர்கள் , டாகடர்கள், குமாஸ்தாகள், டிரைவர்கள் வேண்டும் என அனுமதி கோருவார்கள்.

இவர்கள் சவூதிக்கு வந்தவுடன் அந்த கம்பெனியின் பொறுப்பில் வருவார்கள், இன்னொரு வார்த்தையில் அந்த கம்பெனியின் அடிமைகள்.

இவர்களின் விசா, அரசாங்க வேலைகள், இத்யாதிகளை கவனிக்க பப்ளிக் ரிலேஷன் ஆபிஸர்கள் இருப்பார்கள். இவர்களின் இன்னொரு பெயர் அடிமைகளை மேய்ப்பவர்.

இவரின் முக்கிய வேலையே வேலக்காரர்களின் நலத்தைப் பார்த்துக் கொள்ளதான். ஆனால் இவரோ கடவுளை விட அதிக பந்தா காட்டுவார்.

இவ்வாறு ஒரு முறை நான் நகரத்தில் கார் ஓட்டும் போது ஒரு சின்ன விபத்து.

நான் சென்ற கொண்டிருந்த வேகம் 20கிமீ மெதுவாக போகும் போது எனக்கு செங்குத்தாக தெருவில் சுமார் 60 கிமீ வேகத்தில் வந்த ஒரு பிக் அப்பை லேசாக என் வண்டியின் முன் பாகம் தொட்டது. அந்த பிக் அப் ஒரு சுற்று சுற்றி அங்கே பார்க் செய்திருந்த 5 கார்களை சேதப் படுத்தி விட்டது. நடந்த நேரம் இரவு 8 மணியளவில் நல்ல வேளை யாருக்கும் காயம் படவில்லை.

உடனடியாக் போலிஸ் வந்தாகி விட்டது, என்னுடை மானேஜர் ஜானும் போலிஸ் ஸ்டேசனில் ஆஜர். ஆனால் 'மேய்ப்பாளன்' ஐ மட்டும் பிடிக்க முடியவில்லை. இன்னொரு பார்ட்டி ஒரு அரேபியன் ஆகையால் அவனுக்கு 'மேய்ப்பாளன்' தேவையில்லை. 'மேய்ப்பாளன்' வரும் வரை என்னை லாக் அப்பில் போட்டுவிட்டார்கள் (சிறை கண்ட சிவா வாழ்க என தோழர்களின் குரல் கேட்கிறது). மறுநாள் காலை 'மேய்ப்பாளன்' வ்நது என்னை மீட்டான்.

இதுவே ஒரு புதன் இரவு நடந்திருந்தால் வியாழன் மற்றும் வெள்ளியன்று உள்ளே இருந்திருக்க வேண்டும்.

இதைப் பார்த்த என் நண்பர் ஒருவர். அவருடைய காரில் ஒரு தலையணையும் ஒரு போர்வையும் எப்போதும் வைத்திருப்பார். அவருக்கு அதில் தான் நல்ல தூக்கம் வருமாம்.

இன்னொரு நண்பர் ஒரு முறை அவருடைய குடும்பம் இந்தியாவிற்க்கு செல்ல விமான நிலையத்தில் வருகைகள் பகுதியில் அவர்களை இறக்கிவிட்டு காரை பார்க் செய்யும் போது ஒரு சின்ன இடி. இதற்க்கு இவர் சிறை செல்ல வேண்டியதாயிற்று. அப்போது அந்த குடும்பத்தினர்ப் பட்ட மனக் கஷ்ட்ம் ..... ஒன்றுமில்லை ........ நீங்கள் இவருக்கு நேர்ந்த கொடுமையை கேட்டால:

என்னுடைய் நண்பர் பெயர் ராவ் என்று வைத்துக் கொள்வோம். இவர் ஒரு சின்னக் கம்பெனியில் இன்ஸ்ட்ரூமெண்ட் டெக்மிஷியனாக வேலைப் பார்த்தார். இவர் ஒரு இந்து மேலும் ஒரு வெஜிடேரியன். இவருடைய கம்பெனியின் முதலாளி ஒரு உண்மையான் இஸ்லாமியர். இஸ்லாமியக் கொள்கைப் படி கார் இன்ஸுரன்ஸ் வாங்குவது தவறாம். ஆகையால் ராவிற்க்கு கார் இன்ஸூரன்ஸ் இல்லை.

இவர் ஒரு நாள் வேலை நிமித்தம் அருகில்லுள்ள ஊருக்கு போய் வரும்போது இவருக்கு பின்னால் வந்த ட்ரக் இவர் மேல் மோதி அது உருண்டு ட்ரக்கில் இருந்த அரேபிய கற்பிணிப் பெண் அங்கேயே உயிருழந்தார்

கோர்ட்டில் தவறு ராவ் மீதுதான் என தீர்ப்பு வந்தது !!!!!. இவர் இரத்தத் தொகை (Blood Money) 100,000 ரியாலை செலுத்திவிட்டு விடுதலைப் பெறலாம் . ஆனால் இவரின் முதலாளி ஒடி விட்டார்.

ராவ் சிறையில் சக கைதிகள் மற்றும் சிறைக்கு வருகை தரும் முட்டாவாக்களால் மதம் மாறினால் விடுதலை எனக் கூறி கட்டாயமாக் மதம் மாற்றப் பட்டார்.

இவருடைய் பெயர் அஹ்மத் ராவ் என மாற்றப் பட்டு பாஸ்போர்ட் இத்யாதி ஆவணங்களும் மாற்றப் பட்டன. சிறையில் கட்டயமாக புலால் உண்ண நிர்பந்திக்கப் பட்டார்.

இவருக்கு பின்னர் மன்னரின் 'மன்னிப்பால்' விடுதலைக் கிடைத்தது. ஆனால் ஒரு நிபந்தனை. இவர் 5 வருடங்கள் சவூதியில் இருந்து இஸ்லாமியக் கடைமை களை ஆற்றவேண்டும் எனக் கட்டளை.

பிறகு இவர் அரும் பாடு பட்டு இரண்டு வருடங்கள் கழித்து இவருடைய தாயாரின் உடல் நிலையைக் காட்டி இந்தியாவிற்கு வந்து இந்து மதத்திற்க்கு மீண்டார். இவர்தான் ஒருவகையில் நான் தமிழ்பதிவுகளில் எழுதக் காரணம். திரு சுவனப்ரியன் அவர்களின் ஒரு பதிவில் பதிலளிக்கப் போய் தமிழ்மணத்தில் புகுந்தேன்....


இங்கே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முனனிருந்த அடிமை முறையைக் காணலாம். உங்களின் எஜமானின் ஆதரவில்லாமல் ஒரு வேலையும் நடக்காது. அவரின் விருப்பத்திற்கு எதிராக வேறு வேலை மாற்றவோ அல்லது வேலையை விடவோ முடியவே முடியாது.


இவைகளைப் பற்றி 10.3 ல்

Friday, May 26, 2006

முழு அதிகாரமும் உங்கள் கையில்

வார இறுதி வந்தாகிவிட்டது.

மழையும் தொடர்கிறது.

ஆகையால் தோட்ட வேலையும் இருக்காது.

ஆகையால் அதிக நேரம் தொலைக் காட்சியின் முன் செலவிடபோகிறேன்.

இந்த தொலைகாட்சியின் பரிணாம வளர்ச்சியை நான் கவனித்து வருகிறேன்.

நான் முதன் முதலில் தொலைக் காட்சியைப் பார்த்தது "சமீபத்தில்" 1980ல் தான்.

மதுரையிலிருந்து சென்னைக்கு கல்வி சுற்றுலா வ்ந்த போது பணக்கார உறவினரின் வீட்டில் விலை உயர்ந்த ECTV சிங்கிள் சானல் கருப்பு வெள்ளை டிவி யை பார்த்து வாயை பிளந்திருக்கிறேன்.

பிறகு ரூபவாஹினிக்காக மதுரையில் மிக உயர்ந்த ஆண்டெனாவை ஏற்றி புதன் இரவில் தமிழ் படத்திற்க்காக காத்திருந்து திரையில் பொரிகளை பார்த்தது தான் மிச்சம்.

பிறகு சென்னைக் கல்லூரியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை கலரில் கண்டு மகிழ்ந்தேன்.

1984 இல் ஒரு அறிவியல் பொருட்காட்சியில் சில LED வைத்து ஒரு Oscilloscope உருவாக்கி காட்டி பரிசு வாங்கினேன்.

அந்த பொருட்காட்சியில் எதிர்காலத்தில் தொலைகாட்சிப் பெட்டிகளை சுவற்றில் தொங்க விடும் அளவிற்கு மெலிந்துவிடும் என நான் பேசிய போது என்னை ஏளனமாகப் பார்த்த பார்வைகள் இன்னும் ஞாபகம் இருக்கிறது.

அது நிஜமாகி நானே ஒரு மெலிந்த டிவியை வாங்கும் போது என்னுடைய தீர்க்கதரிசனத்தை என் மனைவியிடம் சொல்லி நல்ல பெயர் வாங்கிக் கொண்டேன் (உண்மையில் அந்த காலத்தில் Scientific American பத்திரிக்கையிலிருந்து சுட்ட தீர்க்க தரிசனம் தான்)

பிறகு கேபிள் டிவி என்ற பல சானல் அற்புதமும் ரிமோட் கண்ட்ரோலும் வந்து டிவி பார்க்கும் சுதந்திரம் நமக்கு கிடைத்தது.

பிடிக்காத சானல்களை சட்டென்று மாற்றிவிடலாம்.

F டிவி மற்றும் மிட்நைட் மசாலக் களை காணும் போது பெற்றோர்கள் அல்லது மனைவியரிடமிருந்து தப்பிக்க ரீமோட் அருமையான சாதனம்.

இது ஒரு சின்ன அதிகாரம் தான்.

4 வருடங்களுக்கு முன் இன்னொரு பணக்கார உறவினரின் வீட்டில், அமெரிக்காவில், நமக்கு முழு அதிகாரமும் வழங்கும் டிவியைக் கண்டேன்.

இப்போது அந்த சாதனம் சாமனியர்களுக்கும் கிடைக்க ஆரம்பித்து விட்டது.


தை PVR (Personal Video Recoder) என்றழைக்கிறார்கள். அதன் பயன் என்ன? நீங்கள் டிவியை ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்யலாம், ரீவைண்ட் செய்யலாம், ப்ரீஸ் செய்யலாம்.



மெகாதொடரில் கதாநாயகியும் வில்லியும் சந்திக்கும் போது ஜைங்..ஜைங் என பின்னனி இசையுடன் அவர்களை காமிரா சுற்றி சுற்றி வருவதை பொறுமையுடன் பார்க்க தேவையில்லை வேகமாக ஓட்டி விடலாம்

கிரிக்கெட்டில் கடைசி பந்து வீசும்போது போன் அல்லது யாரவது வந்து கதவு த்ட்டினால் பதற்றப் ப்டாமல் பதில் சொல்லிவிட்டு டிவியை ரீவைண்ட் செய்துப் பார்க்கலாம்

இதைப் போல் பல அதிகாரங்கள் உங்கள் கையில்

இது எவ்வாறு வேலை செய்கிறது.

பெரிய technology இல்லை. அந்த பெட்டியில் ஒரு hard disk இருக்கிறது. அது நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து கொண்டே உங்களுக்கும் காட்டுகிறது

உங்கள் நேரடி டிவி உங்களுக்கு சிறிது தாமதமாக அதாவது ஒரு நிமிடம் தாமதமாக தெரிகிறது.

அந்த நேரத்தில் தான் நீங்கள் முன் நோக்கியோ அல்லது பின் நோக்கியோ போய் உங்கள் அதிகாரத்தை நிலை நாட்டுகிறீர்கள்.

இந்தியாவிற்க்கு வ்ந்துவிட்டதா?

Thursday, May 25, 2006

மதுமிதா அவர்களின் கவனத்திற்கு

வலைப்பதிவர் பெயர்: கால்கரி சிவா

வலைப்பூ பெயர் : கனடாவிலிருந்து.......

சுட்டி(url) : http://sivacalgary.blogspot.com/
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்: Calgary

நாடு: Canada

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: கூகுள்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 15 பிப்ரவரி 2006

இது எத்தனையாவது பதிவு: 55

இப்பதிவின் சுட்டி(url): http://sivacalgary.blogspot.com/2006/05/blog-post_25.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: திரு சுவனப்ரியன் அவர்களின் வலைப்பூவில் என் நண்பருக்கு ஒருவருக்கு சவூதியில் நேர்ந்த கொடுமைகளைப் பற்றி வாதம் புரிய போய், தமிழில் தட்டச்ச திரு குமரன் அவர்கள் சொல்லித் தர போய், மற்ற நண்பர்கள் என் அரேபிய அனுபவங்களை ஏன் எழுதகூடாது ஊக்கம் தர என்னாலும் தமிழில் எழுத முடியும் என ஆச்சரியபட்டு ஆரம்பித்து விட்டேன். என்னுடைய முதல் பதிவான ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் க்கு தினமலரில் லிங்க் தந்தார்களா குஷி ஆகிவிட்டது

சந்தித்த அனுபவங்கள்: இனிமை.

பெற்ற நண்பர்கள்: உலகம் முழுவதும் நிறைய

கற்றவை: எழுதுவதற்கு நிறையப் படிக்க வேண்டும்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: இன்னும் தெரியவில்லை

இனி செய்ய நினைப்பவை: வலைப்பூவில் பெற்ற நண்பர்களுடன் சேர்ந்து தாய் நாட்டில் அவதியுறும் மக்களுக்கு உதவ வேண்டும். எழுதுவதை செயலிலும் காட்ட வேண்டும்


உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:

இயற்பெயர் : சிவா சுட்டி (சுட்டி என்பதும் என் குடும்பத்தின் இயற்பெயர் அதாவது சர்நேம்)

நான் ஒரு சாதரண மிடில் கிளாஸ் குடும்பத் தலைவன். என் ஒரே மகனின் படிப்பிற்க்காக மட்டும் கனடாவிற்க்கு புலம் பெயர்ந்தேன்.


இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:

வலைப் பூ என்பதே சுதந்திரமான நம் எண்ணங்களை சொல்லத் தானே. நான் உங்களுக்கு பிடிக்காத கருத்தை சொல்வதால் என்னை நீங்கள் ஒரு கோஷ்டியை சேர்ந்தவர் என்றும் மத ஜாதி அடையாளங்களை காட்டி ஒதுக்குவதும் தவறென்று நினைக்கிறேன்.

நான் தான் டாப்பு என்று சொல்வதில் தவறில்லை, ஆனால் மீதியெல்லாம் டூப்பு என சொல்லுவது நிச்சயமாக தவறு

Wednesday, May 24, 2006

நீங்கள் ஒரு தேவதூதரா? - பதில் - 3


ஏசு சிலுவையில் அறைந்துக் கொள்ளப்படுவதற்க்கு முதல் காரணம் :

மோசஸ்தான் முதன் முதலில் ஒரு தேவதூதர் வரப் போவதாக் அறிவித்தார். அந்த தூதர் வந்த மக்களின் பிரச்னைகளையும் துயரங்களையும் களையப் போவதாகச்சொன்னார்.

இது ஒரு பெரிய அரசியல் மோசடி.

யூதர்கள் எகிப்த்தில் அடிமைகளாக் இருந்தார்கள். இவ்வடிமைகளின் உன்னத தலைவர்தான் மோசஸ்.

மோசஸ் இந்த அடிமைகளுக்கு சுதந்திரத்தை வாங்கிதரபோவதாகவும் மேலும் யூதர்கள்தான் கடவுளின் செல்லக் குழந்தைகள் என நம்பவைத்தார்.

ஒரு வகையில் இந்த யூதர்கள் அந்த அடிமைத்தனத்தில் ஊறி அந்த வாழ்க்கைக்கு தங்களை பழக்கியிருந்தார்கள். அவர்களின் வாழ்க்கை ஒரு நரகமாய் இருந்தது. தினம் தினம் உழைப்பு. உழைக்காவிட்டால் எகிப்தியரிடம் கசையடி வாங்க வேண்டும்.

எகிப்தில் உள்ள மிகப் பெரிய ப்ரமிடுகளை கட்டியவர்கள் இவர்கள்தான். இப்போது கூட விஞ்ஞானிகள் வியக்கிறார்கள். இவ்வளவு பெரிய கற்களை இவ்வளவு இவ்வளவு உயரத்திற்க்கு கைகளால் தூக்கி சென்றது இந்த யூத அடிமைகளே. இந்த ப்ரமீடுகளைக் கட்டும்போது உயிர் விட்டவர் ஏராளம். ஒவ்வொரு எகிப்திய அரசனும் அரசியும் முடி சூடிக்கொண்டதும் அவர்களின் கல்லறையைக் கட்ட ஆரம்பித்துவிடுவர். இந்த கல்லறைகளைக் கட்டும் அடிமைகள்தாம் யூதர்கள்.

மோசஸ் மிக சாமர்த்தியமானவர். இந்த அடிமைகளிடம் போய் இந்த வேலைகளை செய்ய பிறந்தவர் நீங்கள் அல்ல. நீங்கள் உயர்குலத்தவர். கடவுளின் அருகில் இருக்கவேண்டியவர் என அந்த அடிமைகளை நம்ப வைத்தார்.

என்ன ஒரு மாற்றம் அடிமையிலிருந்து உயர்ந்த குலத்திற்கு.

மோசஸ் செய்தது ஒரு அற்புதம்.

வாக்குறுதிகள் தருவதற்கு சுலபம். அற்புதமான கனவுகளை தர, நம்பிக்கைகளை வளர்ப்பதற்கு வெகு சுலபம். ஆனால் அந்த கனவுளை நனவாக்குவது வெகு சிரமம்.

மோசஸ் இவைகளை வெகு சீக்கிரம் உணர்ந்தார்.

ஆகையால் யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றி அவர்களின் புண்ணிய பூமியை தேடி நடந்தார்.

பாலைவனத்தில் சில நாட்கள் அல்ல சில வாரங்கள் அல்ல 40 வருடங்கள்..

ஆம் 40 வருடங்கள் யூதர்களின் புண்ணிய பூமியை தேடி அலைந்தார்.

அவருடன் வந்தவர்களில் 3/4 வாசி பேர் இறந்துவிட்டனர்.

வழியில் சில குழந்தைகள் பிறந்து அவர்களும் வளர்ந்து விட்டார்கள்.

இவர்களின் புண்ணிய பூமியும் வரவில்லை இவர்களின் தேவதூதரும் வரவில்லை.

ஆனால் மோசஸ் நம்பிக்கையை மேலும் வளர்த்தார். நேற்று என்பது முடிந்து போன ஒன்று. இன்று என்பது தேய்ந்து விடும். நாளைதான் நல்ல காலம் பிறக்கும் என விடாது நம்பிக்கையை நெய் ஊற்றி வளர்த்தார்.

அந்த நாளை வரேவே போவதில்லை. ஆனால் நம்பிக்கை மட்டும் கொழுந்துவிட்டு எரிகிறது.

நாற்பதாண்டுகளின் பயணத்தில் சில பேர் நைசாக நழுவி ஒடிவிட்டனர். அவர்கள தான் தொலைந்து போன பழங்குடிகள் (The lost Tribe).

40 ஆண்டுகள் கடந்தும் இவர்கள் அந்த சொர்க்க பூமியை காணவும் இல்லை இவர்களின் தேவதூதர் வரவுமில்லை. மக்கள் சோர்ந்தனர்.

அந்த நேரத்தில் மோசஸும் தன்னுடைய தோல்வியை உணர்ந்தார்.

அவசர அவசரமாக இதுதான் நம்முடைய் இஸ்ரேல் என அந்த பாழாய் போன பாலைவனத்தை அறிவித்தார்.

அந்த மக்களுக்கு பெருத்த ஏமாற்றம். பாலாறும் தேனாறும் ஒடும் என்றல்லவா அழைத்து வந்தார் ஆனால் பாலைவனமாக இருக்கிறதே என நினைக்க ஆரம்பித்தனர்.

ஆனால் தேவதூதர் நாளை வந்து நம்மை மீட்பார் என நம்பிக்கை மட்டுமிருந்தது.

உடனே மோசஸும் தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்கிறேன் எனக் கூறி அவர்களை அங்கே விட்டுவிட்டு கிளம்பி போய்விட்டார்.

உண்மையில் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி விட்டார்.

(அப்படி ஓடியவர் காஷ்மீரில் தொலைந்தவர்களை கண்டுபிடித்தார். அங்கேயே உயிரையும் விட்டார். காஷ்மீரிகள் உண்மையில் யூதர்களே. பிறகுதான் அவர்கள் முகமதியர்களாக மாற்றபட்டார்கள். மறைந்த இந்திரா காந்தி அம்மையாரின் மூக்கைப் பாருங்கள் அவர் யூத வழித் தோன்றல் என நிச்சய்மாகத் தெரியும்.)

அந்த யூதர்கள் எகிப்திலிருந்த்தை விட மோசமான நிலையில் வாழ்ந்தனர். ஆனால் தேவதூத நம்பிக்கை சுடர்விட்டு எரிந்தது.

ஏசுவிற்கு முன் சில பைத்தியகாரர்கள் தங்களை தேவதூதர் என சொல்லிக் கொண்டனர்.

தங்களின் சொல்லோணத் துன்பங்களை துடைக்க இந்த பைத்தியமா? இவனை நம்பினால் நம் நம்பிக்கை தகர்ந்துவிடுமே என அந்த "தேவதூதர்" களைக் கொன்றனர்.

இந்த நிலையில் ஏசு தன்னை கடவுளின் தூதுவர் என்றும் கடவுளின் மகனென்றும் கூறிக் கொண்டு வந்தது அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இருந்தது.

இது தான் ஏசு சிலுவையில் அறையப் பட முதல் காரணம்...

அதற்கு வித்திட்டவர் மோசஸ்தான்.

இரண்டாவது காரணம் ...

தொடரும்

Tuesday, May 23, 2006

இலவசக் கொத்தனாரின் வருகை ..நன்மைகள்.. புதையல்கள்

கொத்தனாரின் முதல் பதிவில் இப்படி எழுதியிருந்தார்

"அவரும் வேலை நேரம் வரை அலுவலகத்தில் இருந்துவிட்டு அப்புறமா வந்தார்."

இதில் உள்ள குத்தை பார்த்தீங்களா.

வேலையை முடித்துவிட்டு வந்தார் என எழுதுவதற்கு பதிலாக அலுவலகத்தில் "இருந்துவிட்டு" வந்தார் என்கிறார்.

இது ரொம்ப சரி நானும் இரண்டு வருடங்களாக் இந்த அலுவலக்த்தில் "இருக்கேன்"


அலுவலத்திலிடருந்து போனதால் அவரை அழைக்க என்னுடைய காரை எடுத்துப் போக வேண்டியதாயிற்று. வழக்கமாக் விருந்தாளிகளை அழைக்க என் மனைவியின் காரை எடுத்துக் கொண்டு போவேன்.

அது சுத்தமாக இருக்கும். காருக்குள் ஒரு பிள்ளையார் கோவில் உண்டு. அதற்க்கு 3 வேளை பூஜையும் உண்டு.

ஆனால் என்னுடைய காரோ ஞாயிறு காலையில் இருக்கும் டாஸ்மார்க் கடைபோல்... பிச்சைக் காரன் வாந்தி எடுத்தைப் போல் குப்பையாக இருக்கும். இதில் விருந்தாளிகளை அழைத்துவருவதா என குற்ற உணர்ச்சியுடன் போனேன்.

ஆனால் கொத்தானாரோ "ஆ இந்த கார் இவ்வளவு சுத்தமா?" என ஆச்சரியப் பட்டார்.

கொத்தானார் சென்ற பிறகு நான் ஒரு முடிவோடு என் காரின் உள் புறங்களை சுத்தம் செய்ய கோதாவில் இறங்கி நன்றாக சுத்தப் படுத்திவிட்டேன்.

இதுதான் அவர் வந்ததால் விளைந்த நன்மை -1

சுத்தமாகும் கார்



இவ்வாறு சுத்தம் செய்யும் போது கிடைத்தப் புதையல்களின் விவரம் இதோ

1. 6 மாதங்களுக்கு முன் தொலைந்துபோன mp3 player - 1
2 திரையிசையில் பாரதியார் பாடல்கள் வட்டு - 1
3. வாங்கினவுடன் தொலைந்த கில்லட் ப்ளேட் - 1 காட்ரிட்ஜ்
4. பலமுறை உறைந்து உருகிய பீர் - 1 கேஸ்
5. நமத்துப் போன பாப்கார்ன் - 1 மினி சைஸ்

6. பிரான்ஸ் நாட்டுப் பொரியல் (French Fries) -1 மைக்ரோ மினி சைஸ்
7. கோழி எலும்பு - 2
8. சில்லரை நாணயங்கள் - 5 டாலர் மதிப்பிற்கு
9. காலி தண்ணீர் பாட்டில்கள் - 2

கொத்தனார் இலவசமாக வழங்கிய ஆலோசனையினால், ஒரு அரைவட்டத்தில் கொத்தி, ஒரு சிறு மதில் சுவர் கட்டி, புது புது ரோஜா செடிகள் நடப்பட்டன. இது நன்மை -2

இதைக் கொத்தும் போது புதையல் ஒன்றும் கிடைக்கவில்லை

Saturday, May 20, 2006

நீங்கள் ஒரு தேவதூதரா? - பதில் - 2


ஒஷோ தொடர்கிறார்....

எனக்கு ஒரு அருமையான நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. காலிப் ஒமார் என்று ஒருவர் இருந்தார். காலிப் என்பது முகமதியர்களின் போப். காலிப் ஒமார் ஒரு நல்ல மனிதர். பண்பாளர். இவர் சமயதலைவர் மட்டுமல்ல, அந்த பகுதியின் மக்களின் தலைவராகவும் இருந்தார். ஒரு நாள் அவருடைய படைவீரர்கள். ஒருவனை அழைத்துவந்தார்கள். அவன் செய்த தவறு அவன் தன்னை கடவுள் அனுப்பிய புத்தம் புதிய தேவதூதன் என கூறியது. ஒரு முஸ்லிம் நாட்டில் அவ்வாறு சொல்பவர்க்கு மரணதண்டனை நிச்சயம். முகமது நபிகளார் கடவுளின் கடைசி தூதர் என்பது முகமதியர்களின் அசையாத நம்பிக்கை. அந்த நாட்டில் இப்படி ஒருவனா?. காலிப் ஒமார் அவர்கள் அவனை ஒரு வாரம் சிறையில் அடைக்கும் படியும் அந்த ஒருவாரத்திற்குள் அவன் மனம் மாறிவிட்டால் அவனை விடுதலை செய்யுமாறும் இல்லையென்றால் தலையை கொய்யவும் உத்தரவிட்டார்.

ஒரு வாரம் சிறையில் அவனை மிக அதிகாமாக சித்திரவதை செய்தனர். அவனை நிர்வாணமாக்கி அடித்த அடியில் அவன் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தான். அவனை மற்றக் கைதிகளுடன் வரிசையாக ஒரு கம்பத்தில் கட்டினர்

காலிப் ஒமார் அவர்கள் அவனிடம் வந்து " இப்போதும் நீ கடவுளின் தூதுவன் என சொல்கிறாயா?" என வினவினார்.

அதற்கு அவன் " ஒமார், இப்போது தான் நான் கடவுளின் தூதர் என மேலும் நம்புகிறேன். ஏனென்றால் கடவுள் என்னிடம் உன்னை அடித்து துன்புறுத்துவார்கள் என ஏற்கனவே சொல்லியிருந்தார். ஆகையால் நான் கடவுளின் நிச்சயமான புதிய தூதுவன்" என்றான்

காலிப் ஒமார் வாயடைத்து நின்றுவிட்டார் . அப்போது பக்கத்து கம்பத்தில் இருந்த கைதி " ஒமார், அவனை நம்பாதே... நான் அவனை என் தூதுவனாக அனுப்பவே இல்லை" என்றான். இந்த கைதி தனனை கடவுள் என்றழைத்துக் கொண்டதால் ஒரு மாதமாக சிறையில் சித்திரவதைகளை அனுபவிப்பவன்.

இந்த மனிதர்கள் அதிகாரவெறி பிடித்த மனநோயாளிகள் இவர்களை ஆங்கிலத்தில் இவர்களை megalomaniac என்பார்கள். இவர்கள் எல்லாரையும் விட உயர்ந்த அதிகாரத்தில் இருக்கவேண்டும் என விரும்புவார்கள். இவர்கள் ஒரு நாட்டின் அதிபராகவோ, மன்னராகவோ, முதன் மந்திரியாகவோ இருக்க கனவு காண்பர். ஆனால் அது மிக கஷ்டமானக் காரியம். எவ்வளவு ஜகஜ்ஜால வேலைகள் செய்யவேண்டும் . அதிக போட்டிகளை தாண்டி வரவேண்டியிருக்கும். தேர்தல்கள், வாக்குறுதிகள், அலைச்சல்கல், அவமானங்காள், சிறைகள், விசாரணைக் கமிஷன்கள் இவ்வளவையும் தாண்டி தலைவன் ஆக வேண்டும்

ஆனால் தேவதூதர் ஆவதற்கு வெகு சுலபம். தேர்தல் இல்லை, யாருடைய உத்தரவும் தேவையில்லை.

நீங்கள் ஒரு புத்தக்த்தை எழுத வேண்டும் அதில் நீங்கள் தான் தேவதூதர் என உறுதி செய்ய வேண்டும்.

இங்கே ஒரு "சார்நிலை உண்மை" விவாதத்தை காண்லாம். பைனரி கணிதத்தில் சில தேற்றங்களை நீருப்பிக்க இந்த முறை பின் பற்றப் படுகிறது.

புத்தகம் உண்மையானது ஏனென்றால் இது ஒரு தேவதூதரால் எழுதப் ப்ட்டது. நீங்கள் தேவதூதர் ஏனென்றால் இந்தப் புத்தக்த்தில் உள்ளது.

இயேசுநாதர் ஒரு தேவதூதர் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் உள்ளது. இவர் தேவதூதர் என நீருப்பிப்பத்ற்கு கிறித்தவர்கள் புதிய ஏற்பாட்டை அணுகுவார்கள். ஆனால் புதிய ஏற்பாடோ யேசுவின் வார்த்தைகள் தான்.

Do you see the circular argument?


சிலுவையில் அறைந்து கொல்லக் கூடிய அளவிற்கு யேசு மோசமானவர் இல்லை. அவர் செய்த ஒரே குற்றம் அவர் தன்னை தேவதூதர் என்றழைத்துக் கொண்டது. அவர் தேவ்தூதர் என்றழைத்துக் கொண்டதால் யாருக்கும் ஒரு தீங்கும் நேரவில்லை. அவ்வாறு அழைப்பது அவரின் உரிமை.

ஆனால் யூதர்களுக்கு இது பொறுக்கவில்லை. இதில் உள்ள் தத்துவத்தையும் இதன் பின்னால் உள்ள் சரித்திரதையும் சற்று உற்று நோக்கவேண்டும்.

இயேசுநாதரை சிலைவையில் அறைய் காரணமாய் இருந்தவர் மோசஸ்.

நான் : என்ன ஒஷோ அவர்களே புதுசாய் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறீகள்? இருவர் இருந்த காலங்கள் வேறு வேறு அல்லவா?

ஒஷோ: ஆம் சிவா, மோசஸ் யேசுவிற்கு 3000 வருடத்திற்கு முற்பட்டவர். ஆனால் நான் யாரும் சொல்லாததை சொல்கிறேன்.

யேசுவை சிலுவையில் அறையக் காரணம் மோசஸ்தான்.... அதற்கு இரு காரணங்கள் உள்ளன்.....

தொடரும்

Friday, May 19, 2006

இலவசக் கொத்தனாரின் வாக்குறுதிகள் நிறைவேறின

கால்கரியில் தமிழ்பதிவுகளைப் பற்றி ஒரு திறனாய்வு விவாதம் நடத்த மே மாத மத்தியில் வருவதாக தேர்தலுக்கு முன் என்னிடம் வாக்குறுதி தந்திருந்தார்.

இலவச வாக்குறுதிகளை நான் நம்பவில்லை.

நேற்றுக் காலை தீடிரென்று ஒரு போன் கால்.

இலவசம் கால்கரியில் இருப்பதாகவும் மாலை 5.30 க்கு சந்திக்கலாம் என்றார். ஆ.. என் தமிழ் வளரப் போவதை அறிந்து ஆவலுடன் அவரை சந்திக்க சென்றேன்.

சென்ற இடத்தில் மேலும் ஒரு ஆச்சரியம். அவர் எனக்கு அளித்திருந்த இன்னொரு வாக்குறுதியும் நிறைவேற்றிவிட்டார்.

ஆம் கால்கரியில் கிடைப்பதற்க்கறிய அல்வா, முறுக்கு, சீடை மற்றும் தட்டை போன்ற அயிட்டங்களை தன் உயிரை பயணம் வைத்து கனடாவிற்க்கு கடத்தி தன்னுடைய வாக்கைக் காப்பாற்றிவிட்டார்.

பரஸ்பர அறிமுகத்திற்குப் பிறகு அவருடைய குடும்பத்தாருடம் எங்கள் வீட்டிற்கு வருகை தந்து என்னை பெருமிதம் அடைய வைத்தார்.

எங்கள் வீட்டு தோட்டத்தை எப்படி கொத்துவது என இலவசமாக ஆலோசனைகளை வழங்கினார்.

அவர் வழங்கிய ஆலோசனை: தோட்டட்திற்கு நன்றாக தண்ணீர் பாய்ச்சவேண்டும். பிறகு நாமும் 'தண்ணீ" அடித்துக் கொள்ளவேண்டும்.
பிறகு மண்வெட்டியை எடுத்து தோட்டத்தைக் கொத்திவிடவேண்டும். மிக அருமையான ஆலோசனை.

அதன் பின் பக்கத்தில் உள்ள மலைவாசஸ்தலுத்துக்குப் போய் சீரிய முறையில் தமிழை எவ்வாறு வளர்ப்பது என்று சிந்த்திக்கப் போவதாக கூறினார். அங்கு போக பல வாடகை கார் கம்பெனிகளை அணுகி ஒரு காரும் இல்லாதால் பேருந்து சீட்டை காசுக் கொடுத்து பதிவு செய்தார்.

அதன் இரு குடும்பங்களும் கால்கரியின் தலை சிறந்த தென்னிந்திய உணவகத்திறுக்கு பயணமானோம்.

அங்கு போனவுடன் நகைசுவை கொத்தனார், துப்பறியும் கொத்தனாராக மாறிவிட்டார். உணவுப் பட்டியலைக் கண்டவுடன் தமிழ்நாட்டின் அரசியல் சதி கால்கரியில் தொடங்குகிறது என்று அந்த உணவுப் பட்டியலை தன்னுடைய டிஜிடல் காமிராவில் பதிந்துக் கொண்டார். பிறகு முக்கனிகளில் முதல் கனி இருக்கிறாதா என்று தெரிந்துக்கொண்டார்.

ஊருக்கு திரும்பியவுடன் மிகப் பெரும் ச்தியை அம்பலப் படுத்தப் போவதாக சொன்னார். எனக்கு ஒண்ணும் புரியவில்லை

மேஜையில் காலிபிளவர் பிரை வந்ததும் அதையும் க்ளிக்கித்துக் கொண்டார். ஒரு புதிய தமிழ் வார்த்தையை கண்டுபிடித்துவிட்டேன். அதைப் பதிவாகப் போட்டு 200 அடிக்க போவதாகவும் சொன்னார்.

உணவு முடிந்து வெளியே வந்து காரில் மேற்கு நோக்கி பயணிக்கையில் மணி இரவு 9.30 அப்போது தான் சூரிய அஸ்தமித்துக் கொண்டிருந்த்தது.

அதைப் பார்த்துக் கொண்டே நாம் சந்தித்து சில மணிநேரங்களே ஆனாலும் பல வருடங்கள் போல் இருக்கிறது என்றார்.
நானும் சிலிர்ப்புடன் ஆம் என்னே தமிழ்மண சேவை என்றேன்.

அப்போது இருவர் தலையிலும் டட் டைய்ங் என ஒரு குட்டு அவரவர்
மனைவியரிடமிருந்து....... ஏன்?

நாங்கள் குடும்பத்தை விட்டு சதா காலமும் லாப் டாப்பை பார்த்துக் கொண்டிருந்தால் சில வருடம் என்ன சிலு யுக பந்தங்களும் ஏற்படும் என இரு பெண்டிரும் கோரசாக சொன்னார்கள்


இன்று மாலை மலையிலிருந்து இறங்கி நேராக என் வீட்டிற்கு கொத்தனார் வருகிறார்.

அவருக்கு நான் அளித்த வாக்குறுதிகள் நிறைவேறினவா என்று அவருடைய பதிவில் எதிர்ப்பார்க்கிறேன்

Thursday, May 18, 2006

உங்களின் மதிப்பு என்ன?

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி " யாருக்கு இது பிடிக்கும்?" எனக் கேட்டார்.

கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

பேச்சாளார் "உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்" என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து "இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?" என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி "இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார் அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் "கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் , தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள் "

நீங்கள் ஒரு தேவதூதரா? - பதில் - 1


கேள்வி : அன்பின் ஒஷோ நீங்கள் ஒரு தேவதூதரா?

ஒஷோ : சிவா, நீ தமிழ் பதிவிற்க்குப் போய் ரொம்பவும் மாறிட்டேப்பா. அது என்னப்பா "அன்பின்" வழக்கமா நீ அன்புள்ள அல்லது திரு ஒஷோ அவர்களே னு தானே ஆரம்பிப்பே. சரி..... மாற்றம் மற்றும் தானே நிரந்தரம் .

உன் கேள்விக்கு பதில் இதோ :

இல்லை ..... நிச்சய்மாக இல்லை.

நான் மற்றும் இல்லை இதுவரைக்கும் யாரும் தூதராக இருந்ததுமில்லை இனிமேல் வரபோவதுமில்லை.

முதலில் கடவுள் என்று ஒருவர் இருக்கவேண்டும் அதற்கப்புறம் தானே அவருடைய தூதர்களைப் பற்றி யோசிக்க முடியும் .

இத பார் என்னுடைய தட்டுக்கு அதான்பா flying saucer நேரமாகுது நான் இன்னொரு கிரகத்திற்கு போயி அங்கே ரோல்ஸ் ராய்ஸ் எல்லாம் வாங்கணும்.

உம் பிரின்டர்லே போயி பாரு ஒரு பதினாலு பக்க பதில் ஆங்கிலத்திலே இருக்கு. அதை தமிழில் மொழிபெயர்த்து ஒரு தொடரை ஓட்டு..... வரட்டா.....


ஒஷோவின் தொடரும்...தொடரும்

Tuesday, May 16, 2006

என் அரேபிய அனுபவங்கள் - 10.1

சவூதி அரேபியாவிற்கு வழக்கமாக வெள்ளிக் கிழமை அதிகாலையில் விமானம் இருக்கும்.

இது தஹ்ரான் (நான் அங்கே இருக்கும் நாட்களில் தம்மாம் விமான நிலையம் இல்லை) போய் சேரும் போது மதிய உணவு நேரமாய் இருக்கும். மேலும் வெள்ளிக் கிழமை விசேஷ தொழுகை நாள். எல்லா அரேபியரும் உக்கிரமாக இருப்பார்கள்.

நாங்கள் பிளேனிலிருந்து இறங்கியவுடனேயே "எல்லா..எல்லா" என்று துரத்துவார்கள். ஏதோ ஆடு மாடுகளை துரத்துவதைப் போல்.

பிறகு இம்மிகிரேஷன் அங்கெ மற்றுமொரு அவமானம்.

அதைக் கடந்த பிறகு கஸ்டம்ஸ். உலகில் அதிக வெறுப்புடன் இருப்பவர்க்கு அந்த வேலைக் கொடுப்பார்கள் போலும். உங்கள் பெட்டியை தலைக்கீழாக கவிழ்த்து அதில் உள்ள எல்லாப் பொருட்களையும் குடைவார்கள். இவர்களின் புண்ணிய நாட்ட்டில் மது/போதை மருந்து போன்றவைகளை கடத்தி இவர்களின் நல் ஒழக்கத்திற்க்கு கேடு வந்துவிடுமென்ற பயம்.

மேலும் இந்து மத சின்னங்கள் கடவுளின் படங்கள் இவைகளை கண்டால் இந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் சாமி வந்து ஆடுவார்கள். அவைகளை குப்பையில் எறிந்து திட்டி அவர்களின் "சகிப்பு" தன்மையைப் பறை சாற்றுவார்கள்.

ஒருமுறை என்னுடைய உறவினரின் திருமணப் போட்டோகளை வீசி ஏறிந்த அதிகாரி என்னிடம் சொன்ன காரணம் அதில் பெண்கள் இஸ்லாமிய முறைப்படி ஆடை அணியாமல் போட்டோ எடுத்துள்ளனர்.

நம் பெண்கள் புடவை அணிந்துள்ளது கூட அவருக்கு ஆபாசமாக தெரிந்தது யாருடைய தவறு.

பெட்டி சோதனை முடிந்ததும் அதை எடுத்துக் கொண்ட்டு போ என்று கத்துவார்கள். நான் பெட்டியை முக்கால் பாகம்தான் அடுக்கிக் கொண்டு போவேன். கூடவே சில பிளாஸ்டிக் பைகளை எடுத்து செல்வன். இந்த கஸ்டம்ஸ் அதிகாரிகளின் காட்டுக் கத்தலை தவிர்க்க. உடனடியாக பாக் செய்து இடத்தைக் காலி செய்துவிடுவேன்

இவர்களின் நாட்டுக்கு, இவர்களுக்கு உதவ வரும் வேலைக்காரர்களுக்கு, இவர்கள் காட்டும் மேன்மையான மனிதநேயம் இங்கிருந்து ஆரம்பமாகும்.

(முதன் முறையாக என்னுடைய தாயார் துபாய் வந்திருங்கிய போது, அங்கிருந்த ஒரு பெண் அதிகாரி அவரிடம் "எல்லா..எல்லா" என்று கத்தியிருக்கிறார். என்னுடைய தாயார் மிகவும் பயந்து போய் என்னிடம் வெளியே வந்து சொன்னார்கள். நான் அவருக்கு அளித்த பதில் "துபாய் காரர்கள் மிகவும் நாகரீகமானவர்கள்.....சவூதி மிக மோசமானவர்கள்" என்றேன். )

முதல் முறையாக சவூதி வருபவர் என்றால் நீங்கள் வெளியே வந்து மறுநாள் உங்கள் பாஸ்போர்ட் எடுத்துக் கொள்ளப்படும் . உங்களை ஒரு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மலேரியாக்கான இரத்தம் பரிசோதனைச் செய்யப்பட்டு இரு வாரத்திற்க்குள் இக்காமா (Iqama) என்ற அடையாள அட்டை உங்களுக்கு அளிக்கப் படும்.

இது முஸ்லிம் களுக்கு பச்சை நிறத்திலும் மற்றவர்க்கு ப்ரௌன் நிறத்திலும் இருக்கும். இதில் உங்கள் புகைப்படம், உங்களின் ஸ்பான்சர் ,உங்கள் மதம் ஆகிய விளக்கங்கள் இருக்கும்.

உங்களுடைய குடும்பம் வந்த பிறகு உங்கள் மனைவியின் படமும் குழந்தைகளும் படமும் சேர்க்கபடும். உங்கள் மனைவி இஸ்லாமிய முறைப் படி முக்காடுப் போட்டு படத்தில் தோன்ற வேண்டும். உங்களுக்கு 9 வயதுக்கு மேல் உள்ள பெண் குழந்தை இருந்தால் அந்தக் குழந்தையும் இஸ்லாமிய முறைப்படி உடை அணிந்து அந்த ப்டத்தில் தோன்றவேண்டும்.

இதுதான் உங்களின் அடிமை சாசனம்.

இது உங்கள் உடம்பின் ஒரு பகுதியாக மாறிவிடவேண்டும்.

இது இல்லாமல் நீங்கள் வெளியே சென்றால் கைது ஆவதற்க்கு அதிக வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு தனியாக அடையாள அட்டை கிடையாது. அவர்கள் அவர்களின் கணவருடன் தான் செல்ல வேண்டும். ஏனென்றால் அதுதான் அவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பு.

யாரிடமிருந்து? விபசாரத்தை கனவிலும் நினைக்காத பரிசுத்த தூயவர் அரேபியரிடமிருந்து.


பள்ளிக் குழந்தைகளின் பேருந்து நாங்கள் தங்கியிருந்த அடுக்கு மாடி கட்டிததின் எதிர்புறம் வரும். அவர்களை அழைத்து வர இந்த கட்டிடத்தில் உள்ள இந்தியப் பெண்மணிகள் சேர்ந்து நிற்பார்கள். குழந்தைகள் வந்தவுடன் அவர்களை அழைத்து வருவார்கள். ஒருமுறை என்னுடைய மகன் பஸ்ஸை தவறவிட்டுவிட்டான். அடுத்த பஸ்ஸில் வரக்கூடும் என என் மனைவி தனியாக நிற்க நேரிட்டது.

என் மனைவி இஸ்லாமிய முறையில் உடையணிந்து தலையில் முக்காடுக் கட்டி நின்றிருந்தும், தனியாக நிற்கும் ஒரு இந்திய அடிமைப் பெண்ணை ஒருவர் இல்லை 4/5 பேர்கள் காரை நிறுத்தி அழைதிருக்கிறார்கள். இவ்வளவும் அடுத்த பஸ் வரும் 15 நிமிடத்திற்குள். இது நடந்த நேரம் பகல் 12 மணிக்கு நடந்த இடம் நகரின் பிரதான சாலையில்.

இதே போல் ஒரு சம்பவம் சென்னையில் நடந்திருந்தால் அந்த ஆடவரின் முகம் பேர்ந்திருக்கும் ஈவ் டீஸிங்கில் கம்பி எண்ணியிருப்பர்.

ஆனால் நடந்தது சவூதி அரேபியா அல்லவா, அரேபியர்கள் ஒழுக்க சீலர்கள் அல்லவா, நம்முடைய பெண்கள் அடக்கமாக வீட்டிற்குள் இருக்கவேண்டும். குழந்தைகளை அழைத்துவருவது போன்ற சாகச வேலைகள் செய்து அரேபியவர்களின் உணர்ச்சிகளை தூண்டலாமா? ஆகையால் தவறு நம்மிடத்தில் வைத்துக் கொண்டு அரேபியர்களை திட்டுவது உண்ட வீட்டிற்க்கு இரண்டகம் அன்றி வேரன்ன?

நவீன அடிமை முறைகள் பற்றி 10.2 இல்.....

Wednesday, May 10, 2006

அரேபியாவில் வேலைப்பார்ப்பவர் எல்லாம் திருடர்களா?

திரு நல்லடியார் அவர்களின் ப்திவில் தமிழ்செல்வன் என்ற ஒருவர் இந்த பின்னூட்டத்தை எழுதியிருந்தார். அங்கே பதிலளித்தால் நல்லாடியார் அவர்கள் பதிவின் நோக்கம் மாறிவிடும் என்பதற்காக ஒரு தனிப்பதிவு

//சமீப காலங்களில் கோயம்புத்தூரில் பண்ணை வீடுகளில் திருடும் திருடர்கள், திருடியவீட்டில் சாப்பிட்டுவிட்டு, அந்த பாத்திரத்திலே மலம் கழித்து விட்டு போவார்களாம். அவர்கள் செயல் தான் எனக்கு கால்கேரி சிவாவுடைய தொடரை காணும் போது ஞாபகம் வருகிறது//

இது அரேபியாவில் வேலைக்குப் போகும் எல்லாரையும் இகழ்வதாய் உள்ளது. அங்குள்ள இந்திய பணியாளர்கள் திருடவா போகிறார்கள்?

இங்கே ஒரு சர்தார்ஜி ஜோக்கை சொல்லிவிட்டு மேலே தொடர்கிறேன்.

சர்தார்ஜிக்கும் கம்ப்யூட்டருக்கும் என்ன வித்தியாசம்?

கம்ப்யூட்டரில் ஒரு முறை இன்புட் செய்தால் போதும்.

இந்த சர்தார்ஜி நிலைமையில் தான் அரேபியவில் இருந்து எனக்கு பின்னூட்டம் இடும் நணபர்கள் இருக்கிறார்கள்.

எத்தனை முறை சொல்வது வியாபாரத்தில் நன்றி தேவையில்லையென்று

நண்பர்கள் இவரிடம் முகம் சுளிப்பார்கள் என்னிடம் சரியாக சொன்னீர்கள் என மின்னஞ்சல் அனுப்புவார்கள். அங்கே அவர்களின் வியாபாரம் தொடர்ந்து நடக்க வேண்டுமல்லவா?

எனக்கு இந்த ஊர் பாஸ்போர்ட் கிடைத்தால் அங்கு வந்துவிடுவேன் என ஜோஸ்யம் சொல்கிறார்.

ஐயா, சில பேர் அமெரிக்க/கனேடிய பாஸ்போர்டுடன் அங்கு வ்ந்திருக்கலாம் அவர்களின் வியாபாரத் தேவைக்கு. அவர்களைப் போல் என்னையும் எடைப் போடவேண்டாம்.


நான் சொல்வது உண்மையில்லை என்று உதாரணத்துடன் எழுதுங்கள் ஒப்புக் கொள்கிறேன்.

இந்திய தொழிலாளர்கள் அங்கே கஷ்டமே படவில்லை என்று நீருபியுங்கள்

நான் சுட்டிக் காட்டிய செயல்களை அரேபியர்கள் செய்யவே இல்லை என உங்களால் சொல்லமுடியுமா? அல்லது அவ்வாறு செய்பவர்கள் வெகுசிலரே என சொல்லமுடிய்மா?

மெஜாரிட்டியாக தவறு செய்கிறார்கள். நல்லவர்கள் வெகு வெகு சிலரே என்பதை நினவில் கொள்க

திறமைக்கு அங்கீகாரமா?

அதுவும் அரேபியாவிலா?

அதுவும் ஒரு இந்தியருக்கா?

அதுவும் ஒரு இந்துவிற்கா?

அதுவும் அரசாங்க கம்பெனியிலா?

தமிழ் உங்கள் கனவு அருமை.

அங்கே பத்து வருடம் என்ன 25 வருடங்களாகவும் இருக்கிறார்கள். அது அவர்களின் விருப்பம் . எல்லோரும் என்னை பின்பற்றவேண்டுமென்றா சொல்கிறேன்.

என்னுடைய் அரேபிய அனுபங்களைப் பற்றி என்னுடைய பதிவில் இடுங்கள் நல்லடியார் அவருடைய பதிவில் இஸ்லாமை பற்றி விமர்சிப்பவர்க்ளுகு பதில் தருகிறார். அங்கே போய் அதை திசைத் திருப்பவேண்டாம்

Monday, May 08, 2006

சால்னா

சமையல் குறிப்பு

சால்னா செய்ய தேவையானப் பொருட்கள்

தேங்காய் 1 மூடி பால் எடுத்துக்கொள்ளவும்
வெங்காயம் 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
தக்காளி 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
ப்.மிள்காய் 6 நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்
இஞ்சி பேஸ்ட் 1 தேக்கரண்டி
பூண்டு பேஸ்ட் 1 தேககரண்டி
கருவேப்பிலை 1சிறிது
கொத்தமல்லி தளை சிறிது
தனியா தூள் 4 அல்லது 5 தேக்கரண்டி
மஞ்ச தூள் 1/2 தேக்கரண்டி
மிள்காய் தூள் 1 தேக்கரண்டி
சீரக்தூள் 1 தேக்கறண்டி
உப்பு தேவையான அளவு

தாளிப்பதற்கு

ஏலக்காய் 3
கிராம்பு 4
பட்டை சிறிது
பிரிஞ்சி இலை 1
சோம்பு 1/2 தேக்கரண்டி
எண்ணை தேவையான ஆளவு

செய்முறை

அடுப்பில் ஒரு குக்கரைவைத்து அடுப்பை ஆன் செய்யவும். அதில் எண்ணையைவிட்டு காய்ந்த்வுடன், மேலை உள்ள் பொருட்களை போட்டு தாளிக்கவும். பிற்கு பச்சைகிள்காய், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க்கவும். பிற்கு தக்காளியை சேர்க்கவும். தக்காளி வதங்கியவுடன். மேலே கூறிய அனைத்து தூள்களையும் சேர்த்து எண்ணையை கக்கும் வரை வதக்கவும்.. இத்துடன் கறிவேப்பிலை , தேங்காய் பால் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் . இது குருமா அளவிற்க்கு கெட்டியாக இல்லாமல் நீர்த்து இருக்கவேண்டும். இது பேஸ்

விஜிடேரியன் களுக்கு

இத்துடன் உருளைகிழங்கு முருங்கை காய் போட்டு வேகவிடவும்


புலால் உண்பவருக்கு சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து வேகவிடவும்

இரண்டும் கெட்டவ்ர்க்க்கு 4 அவித்த முட்டைகளை போட்டு கொதிக்கவிடவும். கொதிக்கும் சால்னாவில் ஒரு முட்டையை உடைத்து ஒரு முட்கரண்டியால் கலக்கிவிடவும்.

பி.கு.

நாட்டுக்கோழி வேண்டுமென்றால் corniche hen என்றுக் கிடைக்கும் மிக அருமையான சுவை.

எங்கள் வீட்டில் 2/3 நா.வி 1/3 வி ஆகையால் வி மற்றும் நா.வி கள் தைரியமாக வரலாம்

Friday, May 05, 2006

முரசு கொட்டட்டும்


நம்ம விஜி, மதுரையிலே பக்கத்து தெருவிலே இருந்தார். சென்னையிலேயும் பக்கத்து தெருவிலே இருக்கார்

அதுவுமில்லாமெ நம்ம SK ஐ சந்தோஷப் படுத்த தான் இது

இலையுதிர் காலம்



Inspired By Baranee

Thursday, May 04, 2006

பகுத்தறிவாளர் பேச்சும் ... பார்ப்பணரின் பதிலும்

இரா.மோகன், தேனி

கே: ' பொழுதுபோக்க டி.வி இல்லாததால்தான், எழைகள் அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்கின்றனர். மக்கள் தொகையை குறைக்கவே இலவச கலர் டி.வி. தரப்ப்படுகிறது- என்று கூறும் திராவிடக் கழக தலைவர் கி.வீரமணியின் கண்டுபிடிப்பு பற்றி?

ப : இதில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. டெலிவிஷன் ஒரு கருத்தடை சாதனம் என்ற கண்டுபிடிப்பை வீரமணி கூறியிருக்கிறார். கலைஞர் இலவசமாகத் தருவது 'கருத்தடை சாதனமே தவிர, வெறொன்றுமில்லை' என்றும் கூறியிருக்கிறார்


நன்றி : துக்ளக்

இந்து-முஸ்லிம் பிளவை குறைக்கும் வழிமுறை

நேற்று இட்ட பதிவில் மிக நீண்ட தலைப்பு இருந்ததால் தொழிழ் நுட்பக் கோளாறு ஆகையால் மீண்டும் இந்த பதிவு




திரு அருணகிரி அவர்கள் என்னுடைய ஒரு பதிவிற்கு

"இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள பிளவை அதிகரிக்க வைப்பதில் மைனாரிட்டி ஓட்டு வங்கி அரசியலுக்குப் பெரும்பங்கு உள்ளது"

என பின்னூட்டமிட்டார்

நானும் "இதை தீர்க்க வழியே இல்லையா?" என நான் வினவி இருந்தேன்.

அதற்கு அவர்

மத அடிப்படையில் மெஜாரிட்டி ஒட்டு வங்கி ஒன்றாக அணி திரண்டால், மத அடிப்படையிலான மைனாரிட்டி ஓட்டு வங்கி irrelevent-ஆகும்.

ஆனால் இது மதரீதியாக மைனாரிட்டிகளை (மலேசியா, சிங்கப்பூர் போல)ஒதுக்குவதுபோல் ஆகும் என்பதால் கீழே காணும் பிற வழிகளையே நான் முதலில் நான் முன்வைப்பேன்.


மத அடிப்படையில் சென்சஸ் எடுப்பது, தனி உரிமையும் சலுகையும் தருவது, மத நிறுவனங்களுக்கு வெளிநாட்டுப்பண உதவி கிடப்பது இது போன்ற மத அடிப்படை சலுகைகள் மத ரீதியாக மைனாரிட்டிகள் பிரிந்து கிடப்பதை reward செய்கிறது. உடனடியாகச் செய்ய வேண்டியது:

1. மத அடிப்படையிலான கட்சிகளைத் தடை செய்ய வேண்டும். மத அடிப்படையில் தேர்தல் அறிக்கைகளோ, சலுகைகளோ அரசியல் கட்சிகள் தருவது சட்டத்தால் தடை செய்யப்பட வேண்டும்.

2. மத அடிப்படையில் reserved தொகுதிகள், மத அடிப்படையில் தனிச்சட்டங்கள் இவற்றை ஒழித்து விட வேண்டும். UCC-இன் அவசியத்தை சுப்ரீம் கோர்ட்டே பலமுறை வலியுறுத்தி உள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று இல்லாத கேவலம் அழிய வேண்டும்.

3. எல்லா மதத்தலங்களும், நிறுவனங்களூம் அரசின் கீழ் வர வேண்டும். அல்லது எல்லா மதத்தலங்களும், நிறுவனங்களும் அந்தந்த மத நிறுவனக்களாலேயே நிர்வாகம் செய்யப்பட வேண்டும். இன்றுள்ளது போல் பாரபட்ச நிலை கூடாது.

4. மற்ற நாடுகளிடம் இருந்து நம் நாட்டு மத நிறுவனங்களுக்கு (including கல்வி நிறுவனங்கள்) வரும் பொருளாதார உதவி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். அவற்றின் விரிவான தணிக்கை அறிக்கைகளுக்கு public access கிடைக்க வேண்டும்.

5. நியோகி அறிக்கையில் கூறியுள்ளபடி அனைத்து மாநிலங்களும் மத மாற்றங்களைக் கடுமையாகக் கண்காணித்து, lure/coercion/taking advantage of vulnerability போன்ற வகைகளில் வரும் மத மாற்றங்களையும், குறிப்பாக கூட்ட மத மாற்றங்களையும் தடை செய்ய வேண்டும்.

இவை நடக்காத சூழ்நிலையில் ரிலீஜியஸ் மெஜாரிட்டேரியானிசமே வழியென்று ஆகி விடும். அது நாட்டுக்கு அவ்வளவு நல்லதில்லை என நினைக்கிறேன்.


என பதில் அளித்திருந்தார்.

இது விவாதற்கு நல்ல தலைப்பாக இருக்கும் என என் நினைப்பு.

அவருடைய அனுமதியுடன் இந்த பதிவு

Tuesday, May 02, 2006

மக்களாட்சியும்..... முடியாட்சியும்......


இவ்வுலகின் முதல் தீவிரவாத நாடு, கொடுங்கோலன் புஷ் ஆட்சிசெய்ய்யும் இப்பூவுலகின் நரகம் என சிலரால் கருதபடும் அமெரிக்காவில் நேற்று முக்கிய நகரங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியேற்ற உரிமைகள் கோரி ஊர்வலமாக சென்றனர். அமெரிக்க தீவிர வாத அரசு இவர்கள் ஊர்வலம் செல்ல அனுமதித்து இவ்வுலகில் வேலைக் காரர்களுக்கும் உரிமை உண்டு என ஒரு மோசமான அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. இந்த முன்னூதாரணம் ஒரு கேவலம். மக்களை சுதந்திரம் என்ற போதை மருந்துக்கு அடிமையாக்கி அவர்களை நசுக்கியுள்ளது. உழைக்கும் தோழர்களுக்கும் உரிமை கேட்க வாய்ப்புத் தந்து ஜனநாயகம் என்ற நஞ்சு பரவ வழி வகுத்துள்ளது.




இப்பூவுலகின் சொர்க்கம், நாகரீகத்தின் தொட்டில், எங்கெங்கு நோக்கிலும் கண்ணாடி மாளிகைகளும் சுத்தமும் சுகாதாரமும் உள்ள நகரம் துபாய். இங்கே அன்பே உருவான மன்னரின் முடியாட்சி. இங்குள்ள அரேபியர்களோ ஒழுக்கசீலர்கள் அன்பின் உருவங்கள் எழைப் பங்காளர்கள். அவர்கள் இங்கே சட்டரீதியாக ஏஜெண்ட் என்ற தன்னலமற்ற சமூக காவலர்களின் உதவியால் வேலைக்கு வந்த இந்திய அடிமைகளுக்கு அருமையான பாடத்தை கற்றுக்கொடுக்கின்றனர்.

எஜமானனுக்கு அடங்கு.

தரவேண்டிய சம்பள பாக்கியை கேட்காதே.

தங்குவதற்கு நல்ல இடமோ பசிக்கு உணவோ கேட்டு உன் எஜமானனின் அன்பை இழக்காதே.

அவ்வாறு கேட்டால் உன் தாய் நாடகிய இந்திய நரகத்திற்கு திருப்பி அனுப்பபடுவாய்

உழைக்கும் அடிமைகளுக்கு நல்ல பாடத்தை அன்புடன் கற்று தரும் முடியாட்சி இவ்வுலகெங்கும் மலரட்டும்.


Thanks to Washington Post and GulfNews

பாரத பிரதமருக்கு ஒரு பகிரங்க கடிதம்

மாண்புமிகு பாரத பிரதமர் Dr.மன்மோஹன் சிங் ஐயா அவர்களுக்கு, ஒரு சராசரி இந்தியக் குடிமகன் கண்ணீருடன் எழுதும் மடல்.

உங்களுக்குத் தெரிந்திருக்கும் 22 பேரை (ஒரு 9 வயது குழந்தை உட்பட) நம் எதிரிகள் வரிசையாக நிற்க வைத்துச் சுட்டுக் கொன்றதை.

இது நடந்து 48 மனிநேரமாகியும் உங்களிடமிருந்து அந்த எதிரிகளை ஒடுக்க ஒரு நடவடிக்கையும் இல்லை. ஏன்?

நம்மிடம் படைபலம் இல்லையா? தொழில்நுட்பம் இல்லையா? அல்லது நம் வீரர்களுக்கு தைரியமில்லையா?

ஐயா, எல்லாம் இருக்கிறது உங்களின் ஆணையைத் தவிர.

ஆணையுடுங்கள் நம் வீரர்கள் எதிரிகளை வென்று வெற்றியை உங்களுக்கு காணிக்கையாகத் தருவார்கள்.

நல்லாட்சி தந்தது போதும். நாமும் எதிரிகளுக்கு வல்லாட்சி எனக் காட்டும் தருணமிது.

அவர்களை ஓட ஒட விரட்டி அவர்கள் போகுமிடமெல்லாம் துரத்தி அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கவேண்டும். பாரதம் என்ற பெயர்க் கேட்டாலே எதிரிகள் கனவிலும் பயத்தால் உளறவேண்டும்.

சீக்கிய பரம்பரையில் வந்த சிங்கம் தாங்கள், உங்களுக்கா சொல்லவேண்டும்?

ஆனால் நீங்களோ உங்கள் எஜமானியம்மாவின் முன் முயல் போல் நிற்கீறீர்கள். அதிகாரம் இருப்பது உங்கள் கையில்.

உங்களை உங்கள் எஜமானியம்மா தடுத்தால் அவர்களையும் ஒதுக்கி வையுங்கள்

மக்களாகிய நாம் உங்கள் பக்கம்.

இன்னும் தயக்கம் ஏன்?

அன்புடன்

கால்கரி சிவா


cc to Mrs. Sonia Gandhi : Please allow Dr.Manmohan Singh to act on Terrorists

cc to The President of India : மேதகு பாரத ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே, தங்கள் படித்த கல்லூரியில் படித்த ஜூனியரின் அன்பு வேண்டுகோள். தயவுசெய்து பாரத பிரதமருக்கு அறிவுரை சொல்லி எதிரிகளை அழிக்கச் சொல்லுங்கள்

Monday, May 01, 2006

ஜிகர்தண்டா.. கனடாவில்....

மதுரைகாரங்களுக்கு ஜிகர்தண்டா என்றால் என்னவென்று தெரியும். ஜிகர்தண்டா வெயில் காலத்தில் உடலுக்கும் உள்ளத்திற்க்கும் குளிர்ச்சியளிக்கும் பானம்.

இது மதுரையில் பல ஆண்டுகளாக மிகவும் பிரபலம். மதுரையின் எல்லையை இன்னும் தாண்டவில்லை. பஞ்ஜாபிய லஸ்ஸியும் தந்தூரி சிக்கனம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது.

ஆனால் நம் இட்லியும் அருமையான ஜிகர்தண்டாவும் இன்னும் பிரபலமடையவில்லை.

ஆபிஸ் பார்டிகளிலும் மற்றும் பாட் லக் பார்ட்டிகளிலும் நாங்கள் நம் இட்லி அண்ணாச்சியை அறிமுகப் படுத்தி அவரை பிரபலமாக்க முயற்ச்சிக்கிறோம்.

ஜிகர்தண்டா தயாரிப்பதற்கு முக்கிய பொருட்கள் : பால், நன்னாரி சர்பத் மற்றும் கடல் பாசி. பால் பலவிதமாக இங்கு கிடைக்கும். ஆனால் கடல்பாசி . அதுவும் பஞ்சாபி மற்றும் வட இந்திய கடைகளில் கிடைக்கிறது. இதை அவர்கள் கோந்த் கதிரா (Edible Gum) என்றழைக்கிறார்கள்.

அடுத்து நன்னாரி சர்பத். இதைத் தேடி நான் அலையாத இடமில்லை. சர்பத் தான் கிடைக்கவில்லை நன்னாரி வேர் (Sarasaparilla Root) கிடைத்தால் சர்பத் செய்துவிடலாம் என இங்குள்ள இயற்கை மற்றும் ஆர்கானிக் (Nature and Organic) உணவு கடைகளில் சென்று முயற்ச்சித்தும் பயனில்லை.

போனவாரம் ஒரு விளம்பரம் கண்ணில் அதுவும் தமிழில். கால்கரியின் முதலாவது தமிழ் மளிகைக் கடை. இங்கே எல்லாவகையான தமிழ், மலையாள, பிஜிய, ஈழ மற்றும் மலேசிய மளிகைகள் கிடைக்கும் என தமிழில் கொட்டை எழுத்துகளில் . கடையின் பெயர் நாகாஸ், 17 வது அவென்யு 52 வது தெரு தென்கிழக்கு கால்கரியில். வண்டியை அழுத்தினேன். அங்கே பக்கோடா, நம் மதுரை/மலையாள புரோட்டா, பச்சை மொச்சை பயறு முதலிய அரிய வகை அயிட்டங்கள் கிடைத்தன. அந்த கடையை நடத்துபவர் மலேஷிய தமிழர். அவரிடம் நன்னாரி சர்பத் இருக்கிறாதா எனக் கேட்டன். அவர் நன்னாரியா? அப்படியென்றால் என்ன என்று எதிர்க்கேள்வி கேட்டார். பிறகு நான் அங்குள்ள ஷெல்பில் கவனமாக நோக்கினேன். என் கண்ணில் Sarsaparilla Syrup என்று பட்டது அதன் கீழே சிங்கள எழுத்து அதற்கும் கீழே தமிழில் நன்னாரி சர்பத் என தமிழில் சின்ன எழுத்துகளில்.

ஆ கண்டேன் நன்னாரியை. உடனடியாக ஒரு பாட்டிலை வாங்கினேன்.

அந்த கடையில் இருந்த மலேஷிய சகோதரி இதை என்னவென்று தெரிந்துதானே வாங்குகிறீர்கள்? என வினவினார்.

ஏனென்றால் ஒருவர் தெரியாமல் வாங்கி பிற்கு செண்ட் வாசனை வருகிறது திருப்பி தந்து விட்டார் என்றார். நானும் இது நான் எதிர்பார்க்கும் சுவை இருந்தால் உங்கள் கடையில் உள்ள எல்லா பாட்டில்களையும் வாங்கிவிடுகிறேன் என்றேன். (நல்லவேளை அவருடைய கடையில் 5 பாட்டில்கள்தான் இருந்தன.)

அங்கிருந்து வடகிழக்கு கால்கரிக்கு சென்று பஞ்சாபிக் கடையில் கடல்பாசி வாங்கி வடமேற்கில் உள்ள என்னுடைய வீட்டிற்கு மூச்சிறைக்க கார் ஓட்டி வந்தேன்.

நன்னாரி சர்பத் மதுரையில் கிடைத்துக்கொண்டிருந்த ஒண்டிபிலி மற்றும் நந்தாராம் சர்பத்தின் சுவை மற்றும் தரமிருந்தது (மதுரை வலைப்பதிவாளர்களே இந்த சர்பத்துகள் இன்னும் கிடைக்கின்றனவா?)


ஜிகர்தண்டா செய்முறை :

கடல்பாசியை தண்ணீரீல் சுமார் 12 மணிநேரம் ஊறவிடவேண்டும். இது தண்ணிரீல் ஊறி இதன் கொள்ளளவு பல மடங்கு பெருகி வெண்மையாக ஊறிய சவ்வரிசி போல் ஆகி விடும்.

இதை ஒருகரண்டி ஒரு கிளாசில் போட்டு, ஐஸ் போட்டு அதற்கு மேல் வேண்டிய அளவு நன்னாரி சர்பத் சேர்க்கவேண்டும். பிறகு ஐஸ் பால் கொண்டு கிளாசை நிறைத்துவிட வேண்டும். அவ்வளவுதான். ஜிகர்தண்டா ரெடி. இன்னும் கொஞ்சம் சுவை வேண்டுமென்றால் இதற்கு மேல் வெண்ணிலா ஐஸ்கீரிம் அல்லது 33% விப்பிங் கீரிம் சேர்க்கலாம்.

இங்கே சம்மருக்கு (+8 டிகிரி செல்ஷியஸ்) மிக இதமாக இருந்தது.

கால்கரி வரும் வலைப்பதிவாளர்க்ளே உங்களுக்காக ஜில் ஜில் ஜிகர்தண்டா காத்துக் கொண்டிருக்கிறது. வாருங்கள் கால்கரிக்கு (வருவதற்கு முன் 12 மணிநேர நோட்டிஸ் தரவும் கடல்பாசி ஊற)